கேரள மாநிலத்தை சேர்ந்த தாயும், மகனும் சும்மா பொழுதுபோக்காக காளான் வளர்ப்பை தொடங்கினர். அது நன்றாக பலன் கொடுக்கத் தொடங்கிய நிலையில், அதையே முழு நேரத் தொழிலாளாக மாற்றிக் கொண்டு விட்டனர். இப்போது நாளொன்றுக்கு ரூ.40 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது.
31 வயதான ஜித்து தாமஸ் மற்றும் அவரது தாயார் லீனா தாமஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து, வெற்றிகரமான காளான் வளர்ப்பு பண்ணையை கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். காளான் வளர்ப்பு தொடர்பாக மற்ற விவசாயிகளுக்கும் பயிற்சி கொடுக்கின்றனர். தொடக்கத்தில் ஜித்துவுக்கு தான் காளான் வளர்ப்பு மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதை அவரது தாயாரும் ஏற்றுக் கொண்ட நிலையில் காளான் வளர்ப்பு என்பதை விவசாயமாக மட்டுமல்லாமல் அதையே ஆராய்ச்சியாகவும் செய்து வருகிறார் ஜித்து தாமஸ்.
முதுகலை பட்டம் பெற்றவர் ஜித்து:
இயற்பியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்ற ஜித்து, அதைத் தொடர்ந்து சமூகப் பணி கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றார். இதற்க பிறகு தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்றில் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில், காளானுக்கு சந்தையில் பெரும் தேவை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட ஜித்து, முழு நேரத் தொழிலாளாக காளான் வளர்ப்பை தேர்வு செய்தார்.
also read : ஒரு துண்டு பிரெட்டில் இப்படி ஒரு ஓவியமா! வைரல் வீடியோ..
4 ஆண்டுகளில் வெற்றி:
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஜித்து, காளான் வளர்ப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி வகுப்பு ஒன்றில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக காளான் வளர்ப்பு குறித்து நிறைய தெரிந்து கொண்டார். இந்த உத்திகளைப் பயன்படுத்தி காளான் வளர்ப்பை தொடங்கிய 4 ஆண்டுகளில் வெற்றி கிடைத்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் 80 முதல் 100 கிலோ வரை மகசூல்:
எர்ணாகுளம் மாவட்டம், பிரவோம் என்ற பகுதியில் உள்ள ஜித்துவின் வீடு அருகே 5,000 சதுர அடி பரப்பளவில் காளான் வளர்ப்பு பண்ணை தொடங்கப்பட்டது. நாளொன்றுக்கு இங்கு 80 முதல் 100 கிலோ வரையில் மகசூல் எடுக்கப்படுகிறது. இதன் மூலமாக சுமார் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையில் வருமானம் கிடைக்கிறது.
also read : பாரம்பரிய முறையில் IT அலுவலகம்.. அசத்தும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
மகனை ஊக்குவிக்கும் தாய்:
வெற்றிகரமான காளான் வளர்ப்பு தொழில் குறித்து ஜித்துவின் தாயார் பேசுகையில், “விவசாயம் குறித்து என் மகன் கொண்டுள்ள ஆர்வத்தை எப்போதுமே ஆதரித்து வருகிறேன். தற்போது முழு பண்ணை மற்றும் பணியாளர்களை ஜித்து தான் கவனித்து வருகிறான். விவசாயத்தில் புதுமையான உத்திகளை புகுத்துவதிலும், பேரிடரை எதிர்கொள்வதிலும் ஜித்து திறமையாக செயல்படுவான்’’ என்று கூறினார்.
ஜித்துவின் தோட்டத்தில் 11 பெண்கள் பணிபுரிகின்றனர். அறுவடை செய்யப்படும் காளானை 80 முதல் 200 கிராம் வரையில் பேக் செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். காளான் வளர்ப்பு குறித்து மற்ற விவசாயிகளுக்கு பயிற்சியும், அதனுடன் விதைகளையும் இவர்கள் வழங்கி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.