திருப்புமுனை: திமுகவில் மு.க. ஸ்டாலின் தலைவராக தன்னை நிரூபித்த தருணம்

Youtube Video

திமுக என்னும் மாபெரும் இயக்கத்தில் தந்தையின் நிழலாகவே பன்னெடுங்காலம் பணியாற்றி வந்த மு.க. ஸ்டாலின், தலைவராக தன்னை நிரூபித்த தருணம் குறித்து தற்போது பார்க்கலாம்....

  • Share this:
தனது 14வது வயதிலேயே அரசியல் களத்துக்கு வந்தபோதிலும் திமுக-வில் முக்கிய பொறுப்புகள் மு.க. ஸ்டாலினுக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. அவசர நிலை பிரகடன காலத்தில் சிறையில் அடி- உதை என ஒரு வருட காலம் தந்த அனுபவம் எதிர்கால அரசியல் சவால்களுக்கு அடித்தளம் அமைத்துத் தந்தபோதிலும் கட்சித் தலைவரின் மகனுக்கு பதவி எதுவும் கிட்டிடவில்லை. 1982-ல்தான் திமுக இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 31வது வயதில்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இந்திராகாந்தி மரண அலையில் தோல்வியே கிட்டியது. எனினும் திமுக இளைஞரணி செயலாளராக கட்சியில் துடிப்புமிக்க பிரிவினை களப்பணிக்கு தொடர்ந்து தயார்படுத்தி வந்த ஸ்டாலின். 1989-ல் தான் எம்எல்ஏ ஆனார்.

இதனிடையே கட்சியில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகக் கூறி, கட்சியை விட்டு மூத்த தலைவர்களில் ஒருவரான வைகோ 1994-ல் வெளியேறினார். இது கட்சியில் ஸ்டாலினுக்கு முக்கிய பதவி கிடைப்பதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். வைகோ வெளியேறிய சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகே துணை பொதுச் செயலாளர் பொறுப்பு 2003-ல்தான் தரப்பட்டது.

தன் மகன் என்பதாலேயே கட்சியில் முக்கிய பதவியை ஸ்டாலின் பெற்றுவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருந்தார் கருணாநிதி. அதனால் கருணாநிதி என்னும் அரசியல் ஆலமர நிழலைத் தொடர்ந்தபடி துணை முதல்வர், திமுக பொருளாளர் என அனுபவப் பாடங்களை கற்றுத் தேறிவந்தார். ஸ்டாலின். இந்த சூழலில் 2016 ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. திமுக தலைவர் கருணாநிதிக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தந்தையின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளக் கருதிய ஸ்டாலின், கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பே களமிறங்கினார்.

நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக. பேன்ட், சட்டை கூலிங்கிளாஸ் சகிதம் புதிய கெட்டப்பில் தோன்றி அசத்தினார். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டது, காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிமுக-வே மீண்டும் ஆட்சிக்கு வந்தது. எனினும் தமிழகம் அதுவரை கண்டிராத வலுவான எதிர்க்கட்சியாக 89 இடங்களுடன் திமுக அணி 98 தொகுதிகளை வென்றது.

ஸ்டாலினின் உழைப்புக்கு அங்கீகாரமாய் செயல் தலைவர் பதவி தரப்பட்டது. 2017 ஆகஸ்டில் கருணாநிதி மறைவுக்குப் பின், 2018ல் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் சவாலாக 2019 மக்களவைத் தேர்தலை ஸ்டாலின் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இம்முறை களம், வேறு மாதிரியாக இருந்தது. கருணாநிதி, ஜெயலலிதா என மக்களை வசீகரித்த இரு தலைவர்கள் இல்லாததால் தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

தந்தையின் நிழலாகவே பார்க்கப்பட்ட ஸ்டாலின், தன்னந்தனியாக முதல் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காலம் காலமாக அவரை விமர்ச்சித்தவர்களும், கண்கொத்திப் பாம்பாய் காத்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் பதிலடி தர தன்னை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. 2016 தேர்தலைப் போலவே தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பயணப்பட்டார். பொது இடங்களில் வலியச் சென்று பொதுமக்களுடன் பழகினார். இந்து விரோத கட்சி என்ற குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன் கோயில்களுக்கு மனைவி துர்கா ஸ்டாலின் செல்வதை கூறி விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க... ஆபாச வீடியோக்கள் அனுப்பிய நபர்... கொந்தளித்த பெண் வேட்பாளர்..

அதிமுக அரசின் தோல்விகள் எனக் கூறி பெரும் பட்டியலுடன் தமிழகம் முழுவதும் ஒரு மாத காலத்துக்கும் அதிகமாக சூறாவளிப் பயணம் மேற்கொண்டு மக்கள் மனம் கவர்ந்தார். 2015-ல் அவர் நட்டு வைத்த விதை, 2017 தேர்தலில் மரமாகியிருந்தது. ஆம். தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 மக்களவைத் தொகுதிகளில் 37-ல் வெற்றிக்கனியை ஸ்டாலின் பறித்தார். மேலும் மக்களவைத் தேர்தலுடன் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பலத்தை மீறி 13 இடங்களில் திமுக வென்றிருந்தது.அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் வரிசையில் கட்சியை வழிநடத்த அடுத்த தலைவராக முன்னிறுத்தப்பட்ட ஸ்டாலினுக்கு வெற்றியைத் தந்திட்ட 2019 மக்களவைத் தேர்தல், திமுக-வுக்கு மட்டுமின்றி,பன்னெடுங்காலமாக தந்தையின் நிழல் தலைவராக இருந்தவரை நிஜத் தலைவனாக அடையாளப்படுத்திய திருப்புமுனைத் தருணம் என்றால் மிகையாகாது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: