Home /News /tamil-nadu /

திருப்புமுனை: மத்தியில் ஆட்சி கலைய காரணமாக அமைந்த தேநீர் விருந்து

திருப்புமுனை: மத்தியில் ஆட்சி கலைய காரணமாக அமைந்த தேநீர் விருந்து

Youtube Video

டெல்லியில் நடைபெற்ற ஒரு தேநீர் விருந்து. மத்தியில் ஆட்சி கலைய காரணமாக அமைந்தது. அந்த திருப்புமுனை தருணத்தை இப்போது காணலாம்,....

ராஜிவ் கொலை வழக்கு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை 1997-ல் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 1989 ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளுடன் திமுக தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து முரசொலி மாறன், டி.ஆர். பாலு, என்விஎன் சோமு உள்ளிட்ட மூன்று திமுக அமைச்சர்களை நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் சீதாராம் கேசரி வலியுறுத்தினார்.

கேசரிக்கு கடிதம் எழுதிய திமுக தலைவர் கருணாநிதி முகாந்திரமே இல்லாமல் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் மூன்று அமைச்சர்களை ராஜினாமா செய்யக் கூறுவது நியாயமற்ற செயல் என தெரிவித்தார். ஆனால் பிரதமர் ஐ.கே. குஜ்ராலை அர்ஜுன் சிங், பிரணாப் முகர்ஜி உள்ளிடடோர் சந்தித்து ராஜினாமா கோரிக்கையை வலியுறுத்தியபோது அடிபணிய மறுத்தார் குஜ்ரால்.

அதைத் தொடர்ந்து ஆதரவை வாபஸ் பெறுவதாக காங்கிரஸ் அறிவித்ததும் 7 மாத காலம் வகித்து வந்த பிரதமர் பதவியை குஜ்ரால் ராஜினாமா செய்தார். ஒரே ஆண்டில் வாஜ்பாய், தேவே கவுடா மற்றும் ஐ.கே குஜ்ரால் என மூன்று பிரதமர்களை இந்தியா கண்டது.

அதைத் தொடர்ந்து 1998 பிப்ரவரி மற்றும் மார்ச்சில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 1996 தேர்தலில் படுதோல்வி அடைந்ததுடன் சிறை சென்றும் திரும்பியிருந்த ஜெயலலிதா, மக்களவைத் தேர்தலை நல்ல வாய்ப்பாக பார்த்தார். வேகமாக வளர்ந்து விஸ்வரூபமெடுத்திருந்த பாரதிய ஜனதாவே அவரது முதல் தேர்வாக இருந்தது. இல. கணேசன் உள்ளிட்ட தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர். மேலிடத் தலைவர்கள், தொலைபேசியில் பேசியபின் இரட்டை இலை - தாமரை கூட்டணி மலர்ந்தது. 1998 மக்களவைத் தேர்தலில் பாஜக, மதிமுக பாமக-வுடன் அதிமுக கூட்டணி அமைத்தது.

மேலும் சுப்ரமணியன் சுவாமியின் ஜனதா கட்சியும், வாழப்பாடி ராமமூர்த்தியின் ராஜிவ் காங்கிரசும் அதிமுக-வுடன் கைகோர்த்தன, மறுபுறம், திமுக கூட்டணியில் இருந்து வந்த தமாகா-வினரோ, மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு கருணாநிதியால் தடைபட்டதாக கருதியதால் சுணக்கம் காட்டினர். இருப்பினும், கடைசி நேரத்தில் மூப்பனாருடன் தொலைபேசியில் பேசி ராசியானார் கருணாநிதி. திமுக அணியில் தமாகா மற்றும் இடதுசாரிகள் இடம்பெற்றன.

மறுபுறம் காங்கிரஸ் கட்சி திருநாவுக்கரசரின் எம்ஜிஆர் அதிமுக-வுடன் களம் கண்டது. தேர்தல் பிரசாரத்தின்போது அத்வானி பங்கேற்கவிருந்த கோவை பொதுக்கூட்ட மேடையில் குண்டு வெடித்தது திருப்பமாக அமைந்தது. அதன் விளைவாக அதிமுக 18 இடங்கள், பாஜக, மதிமுக தலா 3 இடங்கள் பாமக நான்கு இடங்கள் என 30 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. எதிரணியில் திமுக 5 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும் தமாகா 3 இடங்களிலும் வென்றன. தேசிய அளவில் 182 இடங்களில் வென்று பாஜக தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கூட்டணி 134 இடங்களில் மட்டுமே வென்றது. பின்னர் அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக வாஜ்பாய் மீண்டும் பொறுப்பேற்றார்.

ஆனால் பதவியேற்ற நாள் முதல் நித்ய கண்டம் பூர்ண ஆயுள் என்பதைப் போல் கூட்டணி கட்சிகளிடம் இருந்து தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அதிமுக மூலம் பல்வேறு சிக்கல்களை வாஜ்பாய் சந்திக்க நேர்ந்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதால் இணை அமைச்சராக இருந்த சேடப்ட்டி முத்தையா ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக நிர்பந்தித்தது.

தாங்கள் நேர்மையான கட்சி எனக் கூறிய ஜெயலலிதா சேடப்பட்டி முத்தையாவை ராஜினாமா செய்ய பணித்தார். இதனிடையே கிரிமினல் வழக்கில் சிக்கிய பூட்டாசிங், ராம் ஜெத்மலானி உள்ளிட்ட சில அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதால் திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பில் நிர்பந்திக்கப்பட்டது.

மேலும் படிக்க... திருப்புமுனை: திமுகவில் மு.க. ஸ்டாலின் தலைவராக தன்னை நிரூபித்த தருணம்

சுப்ரமணியன் சுவாமிக்கு நிதியமைச்சர் பதவியை தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் எதற்குமே பாஜக அரசு செவிசாய்க்கவில்லை. அதனால் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறும் முடிவுக்கு கிட்டத்தட்ட வந்திருந்தார். அதற்கு முக்கிய சந்திப்பின் முடிவில் இறுதி வடிவம் கிடைத்தது. பாஜக அல்லாத தலைவர்களுக்கான தேநீர் விருந்தை 1999 மார்ச் 29-ல் சுப்ரமணியன் சுவாமி ஏற்பாடு செய்தார். சோனியா காந்தியும், ஜெயலலிதாவும் சந்தித்துப் பேசினர். எதிர்பார்த்தது போலவே அந்த தேநீர் விருந்தில் ஆட்சிக்கலைப்புக்கு விதை போடப்பட்டது.அந்த சந்திப்பைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணனை சந்தித்து ஏப்ரல் 14-ல் கடிதத்தை அளித்தார் ஜெயலலிதா. அதைத் தொடர்ந்து 17ம் தேதி நம்பிக்கை வாக்கு கோரிய பாஜக அரசு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்ந்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியால் மத்திய அரசு கவிழ்ந்த சம்பவத்திற்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது ஜெயலலிதா - சோனியா இடையிலான தேநீர் விருந்து சந்திப்பு என்றால் மிகையாகாது. அதுவே திமுக-வும் பாஜகவும் கைகோர்த்த மற்றொரு திருப்புமுனை தருணத்துக்கும் காரணமாக அமைந்தது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: TN Assembly Election 2021

அடுத்த செய்தி