• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருப்புமுனை: சொந்த காரணங்களுக்காக மேலவையை கலைத்தாரா எம்ஜிஆர் ?

திருப்புமுனை: சொந்த காரணங்களுக்காக மேலவையை கலைத்தாரா எம்ஜிஆர் ?

திருப்புமுனை: திருப்புமுனை: சொந்த காரணங்களுக்காக மேலவையை கலைத்தாரா எம்ஜிஆர் ?

திருப்புமுனை: திருப்புமுனை: சொந்த காரணங்களுக்காக மேலவையை கலைத்தாரா எம்ஜிஆர் ?

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் சட்டமேலவை மீண்டும் கொண்டு வரப்படும் என திமுக உறுதி அளித்துள்ள சூழலில் அவை கலைக்கப்பட்ட பின்னணியை தற்போது பார்க்கலாம்.

  • Share this:
தமிழகத்தில் 1861 முதல் அரசுக்கு ஆலோசனை தரக்கூடிய அமைப்பாக இயங்கிய மெட்ராஸ் மாகாண மேல்சபை, 1935 முதல் சட்ட அங்கீகாரத்துடன் இயங்கத் தொடங்கியது. மக்களின் நேரடி பிரதிநிதிகளாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது மேலவை தேவைதானா என்றும் தேர்தலில் போட்டியிடாத அரசியல்வாதிகள் புறவாசல் வழியாக நுழைவதற்கும் கட்சியில் அதிருப்தியாளர்களை திருப்திப்படுத்தவுமே மேலவை பயன்படுவதாக விமர்சனங்கள் வரலாறு நெடுக எழுப்பப்பட்டே வந்தன.

1952-ல் சென்னை மாகாண தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறாததால் அதிர்ச்சியுற்ற நேரு எப்படியாவது மற்ற கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைக்க எண்ணி கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற ராஜாஜியின் உதவியை நாடினார். தேர்தலில் போட்டியிடமாட்டேன் என ராஜாஜி விதித்த நிபந்தனைப்படி, மேலவை வழியாக முதலமைச்சராக்கப்பட்டார்.

1967-ல் மக்களவைக்கு போட்டியிட்டு வென்ற அண்ணா, சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றதால் மேலவை வழியாகவே சட்டமன்றத்தில் முதல்வராக நுழைந்தார். 1983-ல் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கருணாநிதி 1986ல் மேலவை மூலமாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக மீண்டும் நுழைந்தார். இது அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆருக்கு நெருடலை ஏற்படுத்தியது.

1986-ல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியபோது முதலமைச்சர் எம்ஜிஆருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தேர்தலில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. அப்போதைய தமிழக சட்டமன்ற மேலவையில் மொத்தம் இருந்த 63 இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் நிரப்பப்படும் என்பதால் திமுக-வின் வெற்றியால் எம்ஜிஆருக்கு நெருக்கடி ஏற்பட்டது.

அந்த சமயத்தில் மேலவை உறுப்பினர்கள் நால்வரின் பதவிக்காலம் முடிந்தது. காலியான 4 இடங்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்கள் வாக்களிக்க வேண்டும் என்றநிலையில் திமுக-வும் சுயேச்சைகளும் தலா இரு இடங்களில் வென்றதால் எம்ஜிஆருக்கு மேலும் கவலை ஏற்பட்டது. அச்சூழலில் ஆளுநர் நியமிக்கும் நேரடி உறுப்பினர் பதவிக்கு நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா-வை எம்ஜிஆர் அரசு பரிந்துரைத்தது. ஆனால் கடன் பிரச்னையால் திவால் நோட்டீஸ் தந்தவர் என்பதால் மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானதென கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கோரி தமிழக தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் குரானா கடிதம் எழுதினார்.

10 லட்சம் ரூபாய் கடன் பாக்கியை கட்டினால் மட்டுமே எம்எல்சி ஆக முடியும் என நீதிமன்ற வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதை வெண்ணிற ஆடை நிர்மலா செலுத்தினார். கடனில் தத்தளித்தவர் ஒரே நாளில் பத்து லட்சம் ரூபாயை எப்படி கட்ட முடிந்தது என்ற கேள்வி எழுந்தது. எம்எல்சி பதவியை நிர்மலா ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து மேலவையை கலைக்க அதிமுக அரசு முடிவு செய்து, சட்டப்பேரவையில் 14.5.86-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தான் உறுப்பினராக இருப்பதாலேயே மேலவையை கலைப்பதாக இருந்தால் ராஜினாமா செய்யத் தயார் என கருணாநிதி கூறியதையும், சபையை கலைக்க வேண்டாம் என அதன் தலைவர் மாபொசி உருக்கமாக கோரியதையும் எம்ஜிஆர் செவிமடுக்கவில்லை.

மேலும் படிக்க... திருப்புமுனை: தனி ஆளாய் தேர்தல் போக்கையே மாற்றியமைத்த விஜயகாந்த்.. 2006 தேர்தலின் முக்கிய திருப்புமுனை..

தமிழக அரசின் தீர்மானத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் கையெழுத்திட்டதும் 1986 நவம்பரில் மேல்சபை கலைக்கப்பட்டது. அதனால் அதிமுகவில் ஹண்டே, ஜேப்பியார் முத்துலிங்கம் உள்ளிட்ட 14 பேரும், கருணாநிதி, பழனிவேல் ராஜன் உள்ளிட்ட 7 திமுக-வினரும் என மொத்தம் 31 பேர் பதவியிழந்தனர்.இது 125 ஆண்டு பாரம்பரியமிக்க மேலவை மூடுவிழா கண்ட திருப்புமுனை தருணமாக அமைந்தது. சட்டமேலவையை 2010 வரையிலான மூன்று ஆட்சிக் காலங்களிலும் கொண்டுவர கருணாநிதி முயன்றார். கடைசியாக 2010-ல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்த நிலையில் நீதிமன்ற வழக்கால் தடைபட்டது. இந்நிலையில் 2021 திமுக தேர்தல் அறிக்கையில் மேலவை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் மீண்டும் மேலவை வர வாய்ப்புள்ளதா என்பது மே இரண்டாம் தேதி தெரியவரும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: