Home /News /explainers /

திருப்புமுனை: தனி ஆளாய் தேர்தல் போக்கையே மாற்றியமைத்த விஜயகாந்த்.. 2006 தேர்தலின் முக்கிய திருப்புமுனை..

திருப்புமுனை: தனி ஆளாய் தேர்தல் போக்கையே மாற்றியமைத்த விஜயகாந்த்.. 2006 தேர்தலின் முக்கிய திருப்புமுனை..

திருப்புமுனை: தனி ஆளாய் தேர்தல் போக்கையே மாற்றியமைத்த விஜயகாந்த்.. 2006 தேர்தலின் முக்கிய திருப்புமுனை..

கட்சி தொடங்கி ஒரே ஆண்டில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த தேமுதிக, 2006 தேர்தலில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  தமிழகத்திற்கு அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என பல முதல்வர்களை கலைத்துறை தந்துள்ளது. அந்த வரிசையில் இடம்பெற தனக்கென தனி ரசிகர் வட்டத்தை பெற்றிருந்த விஜயகாந்துக்கும் ஆர்வம் ஏற்படவே செய்தது. சிவப்பு மல்லி, சட்டம் ஒரு இருட்டறை, ஏழைஜாதி உள்ளிட்ட பல படங்களில் அரசியல் நெடி தூக்கலாகவே அமைந்தது அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

  ஒரு புறம் நடித்தபடியே மறுபுறம் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி வந்தார் விஜயகாந்த். திரைத்துறையிலும் சக கலைஞர்களுக்கு உதவுபவர் என பெயர் எடுத்த விஜயகாந்த், கேப்டன் என்றே அழைக்கப்பட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் தருவது, இலவச திருமணங்களை நடத்துவது, ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாயை கல்வி உதவித்தொகை வழங்குவது என மாநிலம் முழுவதும் பல உதவிகளை செய்து வந்தார்.

  2000-ஆவது ஆண்டிலேயே மன்றத்திற்கென கொடியை உருவாக்கினார். 2001 உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் பல இடங்களில் வென்றது விஜயகாந்துக்கு உள்ளூர இருந்த அரசியல் விருட்சத்துக்கு தண்ணீர் விட்டதுபோலானது. 2004ல் ரஜினிகாந்திரன் பாபா திரைப்படத்தை முடக்க பாமக நிறுவனர் ராமதாஸ் முயன்றபோது, திரையுலகமே திரண்டு ரஜினி பக்கம் நின்றது. அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த்தே அதற்கு காரணம் என பாமக- நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருதினார்.

  இதன் விளைவாக பாமக-வினருக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் அடிக்கடி மோதல்கள் வெடித்தன. இதற்கு விழுப்புரம் திருவண்ணாமலை உள்ளிட்ட பாமக செல்வாக்கு பொருந்திய வட மாவட்டங்களில் விஜயகாந்த் நற்பணி மன்றம் வலுவாக இயங்கியதும் மற்றொரு காரணம். பாமக-வுடன் மோதல் போக்கு அதிகரித்து வந்த நிலையில் 2004ல் கஜேந்திரா திரைப்படத்திற்கும் அக்கட்சியினரால் சிக்கல் ஏற்பட்டது.

  அப்போது மக்களை சந்திக்காமல் மந்திரியாவது அயோக்கியத்தனம் என அன்புமணி ராமதாஸை நேரடியாக விமர்சித்தார் விஜயகாந்த். அதே சூட்டோடு 2005ம் ஆண்டில் தேமுதிக-வை தொடங்கினார். மதுரை மாநாட்டில் திரண்ட கூட்டத்தை கண்டு தமிழகம் வியந்தது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய ஆளுமைகள் தீவிரமாக செயல்பட்டு வந்தபோதே விஜயகாந்த் துணிச்சலாக அரசியல் களம் கண்டார்.

  பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற மூத்த அரசியல்வாதியை அவைத் தலைவராக்கினார். இரு திராவிட கட்சிகளுக்கு மாற்று என்றும் ஊழல் ஒழிப்பு முழக்கங்களையும் வெளியிட்டார். குறிப்பாக ஆளுங்கட்சியான அதிமுகவை விட திமுக-வையே கடுமையாக வசைபாடினார். அதற்கு கோயம்பேட்டில் இருந்த அவரது திருமண மண்டபத்தை இடிக்க மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கையும் காரணமாக அமைந்தது.

  இச்சூழலில் 2006 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் தயாரான விஜயகாந்த் 232 தொகுதிகளில் தனித்துப் போட்டி என அறிவித்தார். எம்ஜிஆரின் வழித்தோன்றலாகவே காட்டிக் கொண்டதுன் ஜானகி ராமச்சந்திரன் பரிசாக வழங்கிய எம்ஜிஆரின் பிரசார வாகனத்தையே விஜயகாந்த் பயன்படுத்தினார். கருணாநிதிக்கு நெருக்கம் காட்டிவந்தவராய் இருந்தபோதும் அரசியலில் கால் பதித்த பி்ன் தன்னை கருப்பு எம்ஜிஆர் என ஆதரவாளர்கள் விளித்தபோது மகிழ்ந்தார்.

  தேர்தல் முடிவுகள் வெளியானபோது பாமகவுக்கு செல்வாக்குஅதிகமாக இருந்த விருத்தாசலம் தொகுதியில் நின்ற விஜயகாந்த்தை தவிர அவரது கட்சியினர் அனைவரும் தோல்வியைத் தழுவினர். ஆனால் முதல் தேர்தலிலேயே 8,4 சதவீத வாக்குகளை மொத்தமாக பெற்றிருந்தது தேமுதிக. முடிவில், நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக-வின் வெற்றி வாய்ப்புகளை தேமுதிக சேதப்படுத்தியிருந்தது.

  இதனால் திமுக-வுக்கு 96 இடங்களும், அதிமுக-வுக்கு 61 இடங்களும் கிடைத்தன. மேலும் வடமாவட்டங்களில் பல இடங்களில் பாமகவின் வாக்குகளையும் தேமுதிக தனதாக்கிக் கொண்டு மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

  மேலும் படிக்க... திருப்புமுனை: அரசியல் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ‘பஞ்ச் டயலாக்’

  தேமுதிக வரவால், 1952 தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் முதல்முறையாக தொங்கு சட்டப்பேரவை உருவாகும் நிலை ஏற்பட்டது. கூட்டணி கட்சிகள் தயவில் திமுக ஆட்சிஅமைத்தாலும் தனி ஆளாய் தேர்தல் போக்கையே மாற்றியமைத்த விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் 2006 சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தியது வரலாறு.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: DMDK, TN Assembly Election 2021, Vijayakanth

  அடுத்த செய்தி