Home /News /explainers /

திருப்புமுனை: கணவர் எம்ஜிஆரின் பணியை தொடர விரும்புவதாக ஜானகி வெளியிட்ட அறிக்கை... திமுக-வுக்கு சாதகமாக அமைந்தது

திருப்புமுனை: கணவர் எம்ஜிஆரின் பணியை தொடர விரும்புவதாக ஜானகி வெளியிட்ட அறிக்கை... திமுக-வுக்கு சாதகமாக அமைந்தது

Youtube Video

தமிழகத்தில் முதல் முறையாக அமைந்த பெண் முதல்வரின் ஆட்சி, எதிர்க்கட்சியான திமுக-வுக்கு சாதகமாக அமைந்தது.

தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் 1987-ல் மறைந்தபோது அதிமுக-வில் பல்வேறு குழப்பங்கள் நடந்தேறின. அதிமுகவி-ல் நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன். பொன்னையன் போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள் அதிக அளவில் இருந்தனர். இடைக்கால ஏற்பாடாக மூத்த அமைச்சர் நெடுஞ்செழியன் முதல் - அமைச்சராக பதவியேற்றார். மூத்த தலைவர் என்ற அடிப்படையில் முதல்வர் பதவியில் தொடர விரும்பினார். ஆனால் அதை இதர இரண்டாம் கட்டத்தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால் நெடுஞ்செழியனை ஜெயலலிதா மற்றும் ஆதரவாளர்கள் ஆதரித்தனர்.

எம்ஜிஆரின் இறுதிச்சடங்கில் வாகனத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டபோதே எத்தகைய சவால்களையெல்லாம் தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கணித்திருந்தார் ஜெயலலிதா. கட்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் போன்ற இளம் தலைமுறையினரின் ஆதரவு இருந்தாலும், மூத்த தலைவர்களின் ஆசியும் தேவை என்பதை உணர்திருந்த அவர் நெடுஞ்செழியன் முதல்வராக தொடர்வதற்கு ஆதரவளித்தார்.

ஆனால் ஜெயலலிதாவின் எதிர் முகாமில் இருந்த ஆர்.எம். வீரப்பன், நெடுஞ்செழியனை அகற்ற எம்.ஜி.ஆரின் துணைவி ஜானகி ராமச்சந்திரனை முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தினார். அதற்கு அதிமுக எம்எல்ஏ-க்களில் ஒரு தரப்பினர் ஆதரவளித்தனர். 31-12-1987-ல் அறிக்கை வெளியிட்ட ஜானகி, அதிமுக-வில் உள்ளவர்களின் விருப்பத்துக்கு இணங்க மறைந்த கணவர் எம்ஜிஆரின் பணியை தொடர விரும்புவதாக அறிவித்தார். ஆனால் ஜானகிக்கு அரசியல் அனுபவம் போதாது எனக் கூறி முட்டுக்கட்டை போட்ட நெடுஞ்செழியன் முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்துவிட்டார். கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்தார். ஆனால் அதை ஏற்க ஜானகி ராமச்சந்திரன் அணியினர் ஏற்க முன்வரவில்லை.

அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற குழப்பம் எழுந்தது. அப்போது ஆளுநர் குரானாவின் முன் 97 எம்எல்ஏ-க்களை அணிவகுக்கச் செய்தது. ஜானகி அணி. அதை ஏற்று புதிய அமைச்சரவையை அமைக்க ஒப்புதல் அளித்ததுடன் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஜானகிக்கு கால அவகாசம் தந்தார் குரானா. நெடுஞ்செழியன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. 6-1-1988-ல், தமிழகத்தின் முதல் பெண் முதல்வராக பதவியேற்றார் ஜானகி ராமச்சந்திரன். டெல்லி விரைந்த ஜெயலிலதா, பிரதமர் ராஜிவை சந்தித்து ஆதரவு கோரினார். ஆனால் ஒன்றுபட்ட அதிமுக-வையே ஆதரிப்பேன் எனக் கூறி ராஜிவ் கைவிரித்துவிட்டார்.

இதனிடையே கட்சித் தாவலுக்கு பயந்து ஜெயலலிதா தரப்பு எம்எல்ஏ-கள் பெங்களூரில் தங்கவைக்கப்பட்டனர், இந்நிலையில் 1988 ஜனவரி 28ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை கூடியது. அப்போது வரலாறு காணாத அமளி ஏற்பட்டு சட்டப்பேரவையில் மைக். செருப்பு சோடாபாட்டில்கள் வீசப்பட்டன. சட்டப்பேரவையில் ரவுடிகள் புகுந்து தாக்கியதில் பல எம்எல்ஏ-களுக்கு காயம் ஏற்பட்டது. இவ்வளவு அமளிக்கிடையே சபாநாயகர் பி.எச். பாண்டியன் 33 எம்எல்ஏ-க்களை பதவிநீக்கம் செய்வதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அரசு வென்றதாகவும் அறிவித்தார்.

பின்னர், அரசு இயந்திரம் செயலிழந்ததாகக் கூறி ஜானகி ராமச்சந்திரனின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. தமிழகத்தில் அமைந்த முதல் பெண் முதல்வரின் ஆட்சி, 30.1.1988ல் 24 நாட்களில் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இரட்டை இலை சி்ன்னம் முதல் முறையாக முடக்கப்பட்டு ஜானகி அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டன.

மேலும் படிக்க... திருப்புமுனை: திண்டுக்கல் இடைத்தேர்தல்... அதிமுக-வுக்கு கிடைத்த முதல் வெற்றி

1973 முதல் வெற்றிகரமான சின்னமாக திகழ்ந்த இரட்டை இலை முடங்கியதால் உதயசூரியன் சின்னம் 13 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் 1989ல் தடையின்றி உதயமானது, முதல்வர் பதவியை நெடுஞ்செழியனும், ஜானகியும் விட்டுத் தர மறுத்ததும், இரட்டை இலை சின்னத்தை இழந்து அதிமுக கோஷ்டிகள் வெவ்வேறு சின்னங்களில் களம் கண்டதும் தேர்தல் வரலாற்றில் திருப்புனையை ஏற்படுத்திய தருணங்கள் என்றால் மிகையாகாது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK, DMK, MGR, TN Assembly Election 2021

அடுத்த செய்தி