Home /News /explainers /

திருப்புமுனை: திண்டுக்கல் இடைத்தேர்தல்... அதிமுக-வுக்கு கிடைத்த முதல் வெற்றி

திருப்புமுனை: திண்டுக்கல் இடைத்தேர்தல்... அதிமுக-வுக்கு கிடைத்த முதல் வெற்றி

Youtube Video

திமுக-வில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்ட பின், அவர் எடுத்து ஒரு முடிவு தமிழக தேர்தல் வரலாற்றையே திருப்பிப் போட்டது.

திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர் கருத்து வேறுபாடுகள் காரணமாக 14.10.1972-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அதிமுக-வை தொடங்கிய எம்ஜிஆர் தன் அரசியல் பலத்தை ஆழம் பார்க்கவும், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு பாடம் புகட்டவும் தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் குடியரசுத் தலைவரிடம் ஊழல் புகார்களை அடுக்கியும் எம்ஜிஆர் அரசியல் செய்து வந்தார். அப்போதுதான் அவர் எதிர்பார்த்த அந்த தருணம் வந்தது. திண்டுக்கல் தொகுதி எம்.பி.யான திமுக-வைச் சேர்ந்த ராஜாங்கம் மரணமடைய இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் அரசியலில் சாதிப்பாரா, திமுக எனும் ஆலமரத்தை அவரால் எதிர்க்க முடியுமா என பல்வேறு கேள்விகள் எழுந்தன. அவற்றுக்கு திண்டுக்கல் இடைத் தேர்தல் மூலம் விடை அளிக்க எம்ஜிஆர் உறுதி பூண்டார்.

அதிமுக சார்பில் வழக்கறிஞரான மாயத்தேவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆளும் கட்சியான திமுக வுக்கு தொகுதியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நெருக்கடி ஒருபுறம் இருந்தாலும் அதிமுக வெற்றி பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் என்எஸ்வி சித்தன் களமிறக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போதும் எம்ஜிஆரின் வேண்டுகோளுக்கிணங்க வாபஸ் பெறப்பட்டார்.

அப்போது எம்ஜிஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படம் திரைக்கு வர தயாராக இருந்தது ஆனால் படத்தை திரையிடவிடமாட்டோம் என ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் சுவரொட்டி மீதான வரியை மாநகராட்சி திடீரென உயர்த்தியது. இவற்றால் மனம் தளராத எம்ஜிஆர் சென்னை நகரில் சுவரொட்டி கூட ஒட்டாமல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை திரையிட்டார். திமுகவி-ல் இல்லாவிடினும் அவரது மவுசு குறையவில்லை என்பதை உலகம் சுற்றும் வாலிபனின் அசுர வெற்றி பறைசாற்றியது. இந்த வெற்றி தந்த ஊக்கத்தில் தேர்தல் பிரசார களத்தில் எம்ஜிஆர் ஊக்கத்துடன் செயல்பட்டார். திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அனைத்து அமைச்சர்களும் திண்டுக்கல்லில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டனர். முதலமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தல் பிரசார களம் அனல் பறந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுக மற்றும் திமுக தொண்டர்களிடையே ஆங்காங்கே கடும் மோதல்கள் ஏற்பட்டன.

இதனிடையே திண்டுக்கல் தேர்தலில் திமுகவுக்கு தன் ஆதரவை பெரியார் தெரிவித்தார். திண்டுக்கல் தேர்தலில் உங்கள் ஓட்டு தமிழனுக்கா அல்லது அந்நியனுக்கா என்ற கேள்வியை கருணாநிதி எழுப்பினார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 1973 மே இருபதாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. எது நடக்கக் கூடாது என திமுக நினைத்ததோ அது நடந்தது. அதிமுக வேட்பாளர் 2.6 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தார். ஆளும் கட்சியான திமுக 93 ஆயிரத்துக்கும் சற்று அதிக வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தது. ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளருக்கு இரண்டாம் இடம் கிடைத்திருந்தது.

மேலும் படிக்க...மேலும் படிக்க... திருப்புமுனை : அதிமுக ஆட்சியை பின்னாளில் பறித்த முன்னாள் வெற்றி அஸ்திரம்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எம்ஜிஆர் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்ப் பண்பு, கலாசாரம், மரபு, அண்ணாவின் வழி மற்றும் வள்ளுவன் நெறிமுறை உள்ளிட்டவற்றை இதய சுத்தியோடு பின்பற்றுபவன் தான் தமிழன் என ஒளிவு மறைவு இல்லாமல் அதிமுகவுக்கு வாக்குகளை மக்கள் வழங்கி தீர்ப்பளித்து உள்ளனர் என அறிக்கை விட்டார். அதிமுக-வுக்கு கிடைத்த இந்த முதல் வெற்றி...தமிழக தேர்தல் வரலாற்றை மட்டுமின்றி தமிழக அரசியல் வரலாற்றையே திருப்பிப் போட்ட தருணமாக அமைந்தது.

வீடியோ
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Dindigul Constituency, DMK, TN Assembly Election 2021

அடுத்த செய்தி