Home /News /explainers /

திருப்புமுனை : அதிமுக, திமுக ஆகிய இருபெரும் கட்சிகளின் இணைப்பு முயற்சி... ஒரே நாளில் மனம்மாறிய எம்.ஜி.ஆர்

திருப்புமுனை : அதிமுக, திமுக ஆகிய இருபெரும் கட்சிகளின் இணைப்பு முயற்சி... ஒரே நாளில் மனம்மாறிய எம்.ஜி.ஆர்

Youtube Video

அமமுக - அதிமுக இடையிலான இணைப்பு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில், அதிமுக திமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் இணைப்பு முயற்சி குறித்து இப்போது காணலாம்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும் எம்ஜிஆரும் திரையுலகில் மிக நீண்ட காலம் ஒருவரை ஒருவர் சார்ந்து வெற்றிகரமாக திகழ்ந்தவர்கள். 1945ல் ராஜகுமாரி திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாநாயகனாகவும், மு.கருணாநிதி வசனகர்த்தாவாகவும் பணியாற்றியபோது தொடங்கிய நட்பு. அபிமன்யு, மருநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மலைக்கள்ளன், காஞ்சித் தலைவன், அரசிளங்குமரி என நீண்டது. இந்த வெற்றி இணை அரசியலிலும் தொடர 1969ல் கருணாநிதி முதல்வராக எம்ஜிஆர் முக்கிய பங்கு வகித்தது வரை நீடித்த நட்பின் ஆழம் அளவிலாதது. 1970களில் தொடங்கிய பிணக்கு, 1972ல் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டபோது விரிசலடைந்தது.

காலப்போக்கில் திமுக-விடம் இருந்து ஆட்சியை 1977ல் எம்ஜிஆர் கைப்பற்றினார். இருப்பினும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவருக்கும் இடையிலான நட்பும், பிணைப்பும் அரசியலுக்கு அப்பாற்பட்டு கடலடி நீரோட்டம் போலவே இருக்கத்தான் செய்தது.

இந்த சூழலில் பிரிந்திருந்த இருபெரும் ஆளுமைகளையும் இணைக்கும் முயற்சியும் நடைபெற்றது. அதற்கான முயற்சியை மேற்கொண்டவர் தற்போதைய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தையும் பிஜு ஜனதாதள் நிறுவனருமான பிஜு பட்நாயக். மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சி 1979-ல் கவிழ்ந்ததும் சில வார காலம் பிரதமராக நீடித்த சரண்சிங் ஆட்சியும் இந்திரா காந்தி ஆதரவை வாபஸ் பெற்றதால் கவிழ்ந்தது.

அடுத்த பொதுத் தேர்தலுக்காக இந்தியா தயாராகிவந்த நேரம். மீண்டும் இந்திரா காங்கிரஸ் பலம்பெற்றுவிடக் கூடாது எனக் கருதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அப்போதைய மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக், தனது நண்பர் கருணாநிதியை 1972 செப்டம்பரில் அவரது இல்லத்தில் சந்தித்து இரு திராவிட கட்சிகளை இணைப்பது பற்றிய திட்டத்தை முன்வைத்தார்.

வியப்பு மேலிட இதற்கு பின்னணயில் யார் என கருணாநிதி வினவியதாகவும் அதற்கு பட்நாயக்...எம்ஜிஆரிடம் பேசிவிட்டேன், "உங்களது நிபந்தனைகளைக் கூறுங்கள்" என்றதும் கருணாநிதி சில நிபந்தனைகளை விதித்தார். இரு கட்சிகளின் இணைப்புக்குப் பிறகு திமுக என்ற பெயரே நீடிக்க வேண்டும்....முதல்வராக எம்.ஜி.ஆரே தொடரலாம்.....கட்சியின் தலைவராக தானே தொடர்வது என பட்டியலிட்டார் கருணாநிதி. அண்ணாவின் படம் இடம்பெற்றுள்ளதால் அதிமுக-வின் கொடி அப்படியே இருக்கட்டும், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை திரும்பப் பெறவேண்டும் என கருணாநிதி கூறியதும் எளிமையான இந்த நிபந்தனைகளைக் கேட்டு பிஜுவின் முகம் மலர்ந்தது. உடனே பிஜூவின் ஏற்பாட்டில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கருணாநிதியும், எம்ஜிஆரும் தனி அறையில் சந்தித்துப் பேசினர்.

திமுக பொதுச் செயலாளர் கே.அன்பழகன், அதிமுக தரப்பில் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பக்கத்து அறையில் இருந்தனர். இரு தலைவர்களும் கட்சிகள் இணைப்புக்கு ஒப்புக்கொண்டதாகவும் அதற்காக இரு கட்சிகளிலும் அவசர செயற்கு குழுக்கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. சந்திப்பு முடிந்ததும் காரில் எம்ஜிஆரும், பண்ருட்டி ராமச்சந்திரனும் வேலூர் சென்றனர்.

மேலும் படிக்க... தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக 12 ஊராட்சி மக்கள் அறிவிப்பு

மறுநாள். வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எம்ஜிஆர் கட்சிகள் இணைப்பு என்ற தகவல் தவறானது என்றார். அதிமுக அமைச்சர்களும் திமுக-வை காட்டமாக விமர்சித்தனர். அதிமுக-திமுக இணைப்பு கலைந்துபோனது. இது குறித்து 2009ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, வேலூருக்கு எம்ஜிஆருடன் காரில் சென்ற தான் பெயர் கூற விரும்பாத ஒருவர் எம்ஜிஆர் காதில் புகுந்து விளைவுக்கு காரணமானார் என பண்ருட்டி ராமச்சந்திரனை மறைமுகமாக சாடினார். பிஜு பட்நாயக்கின் முயற்சி கைகூடியிருந்தால் 1980 தேர்தல் மட்டுமின்றி தமிழக அரசியல் வரலாற்றிலேயே பெரும் திருப்புமுனை ஏற்பட்டிருக்கும், திருப்புமுனையை தவிர்த்த அத்தருணமும் திருப்புமுனையே.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK, DMK, Explainer, TN Assembly Election 2021

அடுத்த செய்தி