மாவட்ட பிரிவினை சரியாக செய்யாததால் 13 ஆண்டு கால அவதி - கோவில்பட்டியில் தேர்தல் புறக்கணிக்கப்போவதாக 12 ஊராட்சி மக்கள் அறிவிப்பு

12 ஊராட்சி மக்களின் போஸ்டர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள 12 ஊராட்சியில் உள்ள மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

  • Share this:
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து 1986ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்டம் உருவாக்கித்தின் போது கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள இளையரசனேந்தல், அய்யநேரி, அப்பனேரி, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இளையரசனேந்தல் பிர்காவில் இந்த 12 ஊராட்சிகள் கோவில்பட்டிக்கு மிகவும் அருகமையில் உள்ளது. 3 முதல் 12 கிலோ மீட்டர் தொலைவிற்குள் கோவில்பட்டி நகரம் உள்ளதாலும், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என எல்லா தேவைகளுக்கும் கோவில்பட்டி நகரத்தினை நம்பி இருப்பதால் தங்களுடைய வாழ்வாதரத்தினை கருதி கோவில்பட்டி தாலூகாவுடன் இணைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 1989ம் ஆண்டு நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலூகாவில் இருந்த இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியுடன் இணைக்க மக்கள் கருத்து கேட்டு திருநெல்வேலி மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் முன்னாள் இராணுவவீரரும், சமூக ஆர்வலருமான ஜெயபிரகாஷ் நாரயண சாமி என்பவர் கடந்த 2007ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இளையரசனேந்தல் பிர்காவினை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிமன்றம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க அரசுக்கு அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து 2008ம் ஆண்டு மே 1ந்தேதி இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலூகாவுடன் இணைக்கப்பட்டது.

முதலில் வருவாய்துறை மட்டும் இணைக்கப்பட்டது. தொடர்ந்து மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து காவல்துறை, நீதித்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை துறை, கால்நடை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் படிப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லை வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் உள்ளாட்சித்துறை, மின்சாரம், தொடக்க கல்வித்துறை மட்டும் இணைக்கப்படவில்லை. வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தூத்துக்குடி மாவட்டத்திலும், உள்ளாட்சித்துறை, மின்சாரம், தொடக்க கல்வித்துறை மட்டும் திருநெல்வேலி மாவட்டத்திலும் இருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டது. அதனையடுத்து, இவை தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்துடன் இளையரசனேந்தல் பிர்கா இணைக்கப்பட்டாலும் முழுமையாக இணைக்கப்படவில்லை என்பதால் கடந்த 13 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். 12 ஊராட்சிகளை பொறுத்தவரை வருவாய்துறைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், உள்ளாட்சித்துறையை பொறுத்தவரை தென்காசி மாவட்டத்திலும் உள்ளது. இதனால் உள்ளாட்சித்துறையின் கீழ் நடைபெற வேண்டிய பல்வேறு பணிகள் 12 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு சரிவார நடக்கவில்லை என்றும், இது தொடர்பாக இரு மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர்.

கோவில்பட்டி மிக அருகில் இருப்பதால் எல்லா பணிகளும் தங்களுக்கு எளிதில முடிவடைகிறது. ஆனால் இந்த பிரச்சினை காரணமாக முதலில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கொண்டி இருந்த மக்கள் மாவட்டம் பிரித்த பின்னர் தற்பொழுது 96 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்காசிக்கு சென்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 3 அல்லது 4 பஸ்கள் மாறி தென்காசிக்கு செல்ல வேண்டியது இருப்பதால் ஒருநாள் தங்களுடைய வேலை பாதிப்பது மட்டுமின்றி, மாவட்ட பிரச்சினையை காரணம் காட்டி தங்கள் பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை என்றும், ஒரு பிரச்சினை என்றால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் அலைய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால் பிரச்சினைக்கு முடிவு கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 13 ஆண்டுகளாக தங்களது பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும், தேர்தல் வரும் போதும் மட்டும் அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் அதன் பின்னர் தங்களை கண்டுகொள்ளவதில்லை என்றும், தங்களுடைய வேதனைகளை அரசு புரிந்து கொள்ளவில்லை என்பதால் 12 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் வரும் 2021 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும், ஜனநாயக கடமையை செய்ய முடியவில்லை என்று மன வருத்தம் இருந்தாலும், எங்களின் வேதனை அரசுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக முடிவு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் 12 கிராமங்களிலும் இளையரசனேந்தல் பிர்க்கா உரிமை மீட்பு குழு மற்றும் தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் தேர்தல் புறக்கணிப்பு குறித்த போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. இந்த 12 கிராமங்களும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் வருகிறது. இப்பகுதியில் சுமார் 19 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரம் வாக்காளர்கள் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக 12 ஊராட்சிகளிளும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: