• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருப்புமுனை: தோல்வியை காணாத எம்ஜிஆர்-க்கு தோல்வி ஏற்பட்டு திருப்புமுனையாக அமைந்த தேர்தல்...

திருப்புமுனை: தோல்வியை காணாத எம்ஜிஆர்-க்கு தோல்வி ஏற்பட்டு திருப்புமுனையாக அமைந்த தேர்தல்...

Youtube Video

தேர்தல் வரலாற்றில் தோல்வியே காணாமல் பயணம் செய்த எம்ஜிஆர்-க்கு, மிகப்பெரும் தோல்வி ஏற்பட்டது... அதற்கான, திருப்புமுனை தருணத்தை இப்போது பார்க்கலாம்...

  • Share this:
1972-ல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர். அதற்கு அடுத்த ஆண்டே திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றியை சுவைத்தார். அடுத்ததாக 1974 தொடக்கத்தில் புதுச்சேரி பேரவை தேர்தலிலும் 30-ல் 12 இடங்களைப் பெற்று தனிப்பெருங்கட்சியாகி ஆட்சி அமைத்தது அதிமுக, இந்திரா காந்தி எம்ஜிஆருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றாததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று ஆட்சியை அதிமுக பறிகொடுத்தது. திண்டுக்கல் இடைத்தேர்தல், 1974 புதுவை பேரவைத் தேர்தல் என வரிசையாக வெற்றிகளைக் குவித்த எம்ஜிஆர் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காத்திருந்தார். 1975-ல் அவசர நிலையை இந்திரா பிரகடனப்படுத்தியபோது முந்தைய தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த கருணாநிதி, இப்போது கடுமையாக காங்கிரசை எதிர்த்தார். அதைத் தொடர்ந்து திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. எம்ஜிஆரோ, எமர்ஜன்சியை ஆதரித்தார்.

இந்நிலையில் 1977 பிப்ரவரியில் மக்களவைத் தேர்தல் நடைபெற பிரதமர் இந்திரா காந்தி ஏற்பாடு செய்தார். புதுச்சேரியில் கிடைத்த ஏமாற்ற தழும்பு மறையாத நிலையில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து இந்திரா காந்தி அறிவிக்காதது எம்ஜிஆரை மேலும் காயப்படுத்தியது. சினிமாவுலகில் தன்னை பகைத்தவர்களை எம்ஜிஆர் நன்றாக பழகியபடியே சத்தமின்றி பழிவாங்குவார் என தகவல்கள் உலவியதுண்டு. ஆனால் இந்திரா காந்தி தன்னை தொடர்ந்து கோபமூட்டியபோதும் எம்ஜிஆர் அமைதி காத்தார். என்ன செய்வது பிரதமராயிற்றே. ஆனால் தக்க தருணத்திற்காக காத்திருந்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கூட்டணியை தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்தனர்.

மறுபுறம் நாடெங்கும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்திருந்தது. இந்திரா காந்தியே ரே பரேலி தொகுதியில் தோற்றிருந்தார்.சில மாதங்கள் கழித்து பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இதுதான் சமயமென காங்கிரசுடன் உறவை முறித்து தேர்தல் களம் கண்டு முதல்வரானார் எம்ஜிஆர். சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த இந்திரா காந்தி, மீண்டும் எம்.பி.யாக விரும்பியபோது, கர்நாடகாவில் சிக்மகளூர் தொகுதியை ஒரு எம்.பி. ராஜினாமா செய்ய, அங்கு கடும் களம் கண்டு இந்திரா வெற்றி பெற்றார். எனினும், சஞ்சய் காந்தி தொடர்பான ஊழல் புகாரை தூசி தட்டி எடுத்த மொரார்ஜி தேசாயின் மத்திய ஜனதா அரசு இந்திரா காந்தியின் எம்.பி. பதவியை பறித்து சிறையிலும் தள்ளியது.

சில காலம் கழித்து, தஞ்சாவூரில் எஸ்.டி.சோமசுந்தரம் ராஜினாமா செய்தததால் மக்களவைத் தொகுதி காலியானது. அங்கு இந்திரா காந்தி போட்டியிட விரும்பினார். டெல்லி சென்ற எம்ஜிஆரை மூப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து தஞ்சாவூர் தொகுதியில் இந்திரா போட்டியிடுவது குறித்து பேசினர்.அதற்கென்ன ஓகே எனக் கூறிய எம்ஜிஆர் அடுத்ததாக பிரதமர் மொரார்ஜியை சந்தித்தார். பின்னர் அவரது தொனியே மாறியது. தேர்தல் தோல்விக்குப் பின் மதுரைக்கு இந்திரா வந்தபோது திமுக-வினர் கல்வீசி தாக்கியதுபோல் அசம்பாவிதம் நடக்கும் என்பதால் அவர் போட்டியிடுவது பாதுகாப்பாக இருக்காது எனக் கூறினார். அதனால் காங்கிரஸ் கட்சி வேறு ஒருவரை நிறுத்தியது. எனினும் எம்ஜிஆர் அவரை ஆதரித்து பிரசாரம் செய்தார் அவரும் வென்றார்,

ஆனாலும் இந்திராவுக்கு தஞ்சாவூரில் வாய்ப்பு தராததால் எம்ஜிஆர் பழிவாங்கியதாக காங்கிரஸ் கட்சியினர் கருதினர். பின்னர், மொரார்ஜி தேசாய் ஆட்சி கவிழ்ந்து இந்திரா காந்தி தயவால் சரண் சிங் பிரதமரானார். ஆனால் இரு வாரங்களுக்குள் ஆதரவை இந்திா வாபஸ் பெற்றார். அதைத் தொடர்ந்து மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் எம்ஜிஆர் மீதிருந்த கோபத்தில் திமுக-வுடன் இந்திரா கைகோர்த்தார், ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. மதுரை கல்வீச்சு சம்பவத்தை மறந்து கருணாநிதியுடன் ஒரே மேடையில் இந்திரா பேசினார்.

மேலும் படிக்க... திருப்புமுனை: எம்ஜிஆருக்கு நல்ல படிப்பினையை கற்றுத் தந்த புதுச்சேரி

தேர்தல் பிரசாரத்தில் எம்ஜிஆரை இந்திரா கடுமையாக விமர்சித்தார். பல்கேரிய நாட்டு கப்பல் வாங்க நடநந்த பேரத்தில் ஊழல் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக சுமத்தியது. 1980 ஜனவரியில் நடந்த மக்களவைத் தேர்தல் முடிவில் எம்ஜிஆருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நெப்போலிய மன்னன் வாட்டர்லூ யுத்தத்தில் தோற்றதுபோல் தனது முதல் தோல்வியை எம்ஜிஆர் சந்தித்திருந்தார்.

39 தொகுதிகளில் அதிமுக இரு தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. 1973 முதல் தேர்தல் களத்தில் தோல்வியே காணாதிருந்த எம்ஜிஆர் முதல் படுதோல்வியை அடைந்ததற்கு தஞ்சை தொகுதியை தராமல் எம்ஜிஆர் துரோகம் செய்ததாக இந்திரா கருதியது முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. மேலும் பிரதமரானதுமே 1980 பிப்ரவரியில் அதிமுக அரசைக் கலைத்தும் இந்திரா மற்றொரு அதிர்ச்சியை அளித்தார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: