திருப்புமுனை: எம்ஜிஆருக்கு நல்ல படிப்பினையை கற்றுத் தந்த புதுச்சேரி

Youtube Video

கட்சி தொடங்கிய ஒன்றரை ஆண்டுகாலத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் எம்ஜிஆருக்கு நல்ல படிப்பினையாக கற்றுத் தந்தது. அந்த திருப்புமுனை தருணத்தை இப்போது பார்க்கலாம்.

  • Share this:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆட்சிகள் கவிழ்வதும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதும் சர்வ சாதாரணமான விஷயம். அந்த அனுபவம்...மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஆரம்ப நாட்களிலேயே கிடைத்தது. 1972ல் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய சில மாதங்களில் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியான திமுக-வை மூன்றாமிடத்துக்குத் தள்ளி முதல் தேர்தலிலேயே அதிமுக அபார வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றி அளித்த தெம்பு எம்ஜிஆரை பெரிய களத்தை எதிர்கொள்ள மனதளவில் தயார்படுத்தியிருந்தது. அதற்கேற்றாற் போல் புதுச்சேரி யூனியன் பிரதேசம் வாகாய் ஒரு களம் அமைத்துத் தந்தது. 1974 தொடக்கத்தில் புதுச்சேரி சட்டப்பேரவைக்குத் தேர்தல் வந்தது. தமிழகத்தில் திமுக-வுக்கு எதிராக ஊழல் புகார்களை தயாரிக்க உதவிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி தேர்தலில் அதிமுக-வுடன் கைகோர்த்தது.

புதுவையில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக, தனித்துப் போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தனித்து களம் கண்டது. பிரிந்து கிடந்த ஸ்தாபன காங்கிரசும், இந்திரா காங்கிரசும் நெருங்கி கொண்டிருந்த தருணம் என்பதால் இந்திரா காந்தியுடன் கூட்டணி சேர காமராஜ் முன்வந்தார். வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் வெளியானபோது திமுக-வுக்கு இங்கும் அதிர்ச்சி காத்திருந்தது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 12-ல் அதிமுக வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்திருந்தது. ஆளுங்கட்சியாக இருந்த திமுக வெறும் இரு இடங்களில் வென்று சரிவைக் கண்டிருந்தது.

காங்கிரஸ் மற்றும் ஸ்தாபன காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில் வென்றிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும் சுயேச்சைக்கு ஒரு இடமும் கிடைத்திருந்தன. எந்த கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணி 14 இடங்களில் வென்றிருந்தபோதும் பெரும்பான்மை இல்லை.

எப்படியாவது நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுவிடலாம் என எண்ணி ராமசாமி என்பரை முதலமைச்சராக பதவியில் அமர்த்தினார் எம்ஜிஆர்.

திமுக-வை பிரிந்தது முதல் இந்திரா காந்தியுடன் இணக்கம் ஏற்பட்டிருந்தாதல் ஆதரவு கோரி அவரை அணுகியபோது ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து தனக்குத் தெரிந்த ஒரு தொழில் அதிபரை மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய ஆதரவளித்தால் புதுச்சேரியில் ஆதரவுக்கரம் நீட்டுவதாகவும் கூறியிருந்தார்.

சொன்னபடியே பிரதமர் இந்திராவுக்கு தந்த வாக்கை எம்ஜிஆர் காப்பாற்றினார். இப்போது இந்திரா காந்தியின் முறை. புதுச்சேரி பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஆனால் நினைத்ததற்கு மாறாக அதிமுக அணிக்கு 14 வாக்குகளே கிடைத்திருந்தன. அதாவது அதிமுக-வின் 12 வாக்குகளும், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டின் இரண்டு வாக்குகளுமாக சேர்த்து 14 வாக்குகள். சொன்னை வார்த்தையை காப்பாற்ற தவறியிருந்தார் இந்திரா காந்தி. அதனால் 1974-ல் மார்ச் 6 முதல் 27 வரை 21 நாட்கள் மட்டுமே நீடித்த அதிமுக ஆட்சி அற்ப ஆயுளில் கவிழ்ந்தது.

மேலும் படிக்க...திருப்புமுனை: திண்டுக்கல் இடைத்தேர்தல்... அதிமுக-வுக்கு கிடைத்த முதல் வெற்றி

வெற்றிகரான தோல்வியையும் தேர்தல் அரசியலின் தந்திரங்களையும் எம்ஜிஆரை உணரச் செய்த திருப்புமுனை தேர்தல் இது என்றால் மிகையாகாது.

வீடியோ





உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: