திருப்புமுனை: மாற்று அணியாக உருவான மக்கள் நலக்கூட்டணி

Youtube Video

தமிழகத்தில் 30 ஆண்டு கால சாதனையை மாற்றி அமைத்து திருப்புமுனையை ஏற்படுத்திய ஒரு கூட்டணி குறித்து இப்போது பார்க்கலாம்.

  • Share this:
2011 முதல் தேர்தல் கூட்டணிச் சந்தையில் விஜயகாந்துக்கு தொடர்ந்து மவுசு அதிகரித்தபடியே இருந்தது. விஜயகாந்த்தே நினைத்து பார்க்காத வகையில் 2011ல் தேமுதிக-வுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தார். 2014-ல் தேமுதிக-வுடன் கூட்டணி வைக்க விரும்பிய கருணாநிதி அது கைகூடாததால் 2016 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க விரும்பினார். அரசியலுக்கு வரும்முன் கலைஞர், கலைஞர் என நெருக்கம் காட்டிய விஜயகாந்த் ஏனோ நழுவும் மீனாய் விலகினார்,

இதனிடையே தேர்தலில் தனித்துப் போட்டி என துணிச்சலான முடிவை ஜெயலலிதா எடுத்தார். அப்போது திமுக, அதிமுகவுக்கு போட்டியாக மாற்று அரசியலை முன்வைத்த மக்கள் நலக் கூட்டணி உருவாகியிருந்தது, மதிமுக, இடதுசாரிகள், விசிக மற்றும் தமாகா போன்ற கட்சிகள் இருந்த அந்த அணி விஜயகாந்துக்கு 2015 நவம்பரில் அழைப்பு விடுத்தது.

ஆனால் போக்கு காட்டிய விஜயகாந்த் தனித்துப் போட்டி என 2016 மார்ச்சில் அறிவித்தார். பின்னர் கடைசி நேரத்தில் கைகோர்த்தார் விஜயகாந்த். கூட்டணி அறிவிப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் எனக் கூறிய வைகோ, நிர்பந்தத்தால் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்.

2011 தேர்தலில் அதிமுக அணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக 7.88சதவீதம், மார்க்சிஸ்ட் 2.41 சதவீதம், இந்திய கம்யூனிஸ்ட் 1.97 சதவீதம், விசிக 1.51 சதவீதம் என மநகூ கட்சிகள் 13.77 சதவீத வாக்குகள் பெற்றிருந்தன. அவற்றுடன் 2011 தேர்தலை புறக்கணித்த மதிமுக-வின் வாக்குகள் மற்றும் தமாகாவின் வாக்குகளையும் சேர்த்தால், மூன்றாமிடம் உறுதி என கூட்டணித் தலைவர்கள் நம்பினர்.

கூட்டணியில் இருந்த கட்சிகள் மீது ஊழல் புகார் இல்லை என்பது வலுசேர்க்கும் அம்சமாக இருந்த போதிலும், தேமுதிக இணைந்த பிறகு, அதன் பரிமாணமே மாறியதுபோல் தோன்றியது. சில மேடைகளில் விஜயகாந்த் உள்ளிட்டோர் தடாலடியாக நடந்து கொள்ள, நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர். முடிவில் 2016 மே மாதம் நடந்த தேர்தல் பல ஆச்சரியங்களை அள்ளி வீசியது. 1984ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைத்த ஆளுங்கட்சி என்ற சாதனையை அதிமுக படைத்திருந்தது.

89 தொகுதிகளைக் கைப்பற்றி, சட்டமன்ற வரலாற்றிலேயே அதிக இடங்களை வென்ற எதிர்க்கட்சி என்ற பெருமையை பெற்றதுடன் திமுக ஆறுதல் அடையவேண்டியிருந்தது. மக்கள் நலக்கூட்டணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, 29-ல் களம் கண்ட மதிமுக, தலா 25 இடங்களில் நின்ற இடதுசாரிகள் மற்றும் விசிக என அனைத்து கட்சிகளுக்கும் தோல்வியே மிஞ்சியது. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் டெபாசிட்டை இழந்தார். காட்டுமன்னார்கோவிலில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் தோற்றார்.

இதுபோல் பாஜகவின் தமிழிசை மற்றும் சீமானும் டெபாசிட் இழந்தனர். போட்டியிட்ட 233 தொகுதிகளிலும் பாமக தோல்வி கண்டது, தேர்தலில் திமுகவை விட 3 சதவீத வாக்குகளை அதாவது மொத்தம் 41 சதவீத வாக்குகளைப் பெற்ற அதிமுக, 30 இடங்கள் கூடுதலாக பெற்றது. அதே 30 இடங்களை திமுக வென்றிருந்தால் தனித்தே ஆட்சியை பிடித்திருக்க முடியும்.

ஆனால் 55க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயித்த வாக்கு வித்தியாசம் வெறும் 100 முதல் 5 ஆயிரம் வாக்குகள் மட்டுமே என்பதும் அதில் அதிமுக-வை வீழ்த்த களம் கண்ட மக்கள் நலக் கூட்டணி மறைமுகமாக அதிமுக வெற்றிக்கு உதவியதையும் மறுக்க முடியாது. அதேபோல் 41 தொகுதிகளில் நின்ற காங்கிரஸ், 8 இடங்களில் மட்டுமே வென்றதும் அக்கட்சிக்கு அதிக இடம் ஒதுக்கிய திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

அதிமுக வெற்றிக்கு காரணமாக இருந்த விஜயகாந்துக்கும், தனித்துப் போட்டியிட்ட பாமக-வுக்கும் ஜெயலலிதா நன்றி சொல்ல வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் நைய்யாண்டித்தனத்துடன் அறிக்கை வெளியிட்டார்.

மேலும் படிக்க...திருப்புமுனை: ஜெயலலிதாவை கொள்கைப் பரப்புச் செயலாளராக்கி அழகு பார்த்த எம்ஜிஆர்

திமுக தோல்விடைவதற்கான முக்கிய காரணமாக இருந்த மக்கள் நலக்கூட்டணியும், கருணாநிதி வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தும் திமுக-வுடன் விஜயகாந்த் கூட்டணி சேராததும் 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் திருப்புமுனை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது.


உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: