1996-ல் பதவியேற்ற திமுக அரசு, ஜெயலிலதா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது ஊவல் புகார் தொடர்பாக பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது. சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதாவும் ஊராட்சிகளுக்கு வண்ணத்தொலைக்காட்சி வாங்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். 1996ல் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு ஜெயலலிதாவை பின்னாளில் பாடாய்படுத்தியது.
ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவரும், அடுத்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடனே அரசியல் பணியாற்றுகின்றனர். அவ்வாறே எதிர்ப்புகளைக் கடந்து 2001-ல் மீண்டும் அதிமுக-வை அரியணை ஏற்றும் முனைப்பில் இருந்தார் ஜெயலலிதா. அதற்கான காலம் கணிந்து தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஆண்டிபட்டி மற்றும் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதா சார்பில், புதுக்கோட்டை மற்றும் புவனகிரி தொகுதிகளில் மேலும் இரு வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டன.
இதனிடையே புதிய திருப்பமாக அதிமுக-வுடன் தமிழ் மாநில காங்கிரசும், காங்கிரசும் கூட்டணி அமைத்தன, எந்த ஜெயலலிதாவுடன் அணி சேருவதை எதிர்த்து 1996ல் த.மா.கா உருவானதோ அதே அதிமுக-வுடன் த.மா.கா. கூட்டணி அமைத்தது காலத்தின் கோலம். அதே போல், த.மா.கா.வின் தாய்க்கட்சியான காங்கிரசும் அதிமுக அணியில் இடம்பெற்றது மற்றொரு திருப்பம். இதுபோதாதென பாமக-வும் இடதுசாரிகளும் அதிமுக-வுடன் கைகோர்த்திருந்தன.
இந்நிலையில் வேட்புமனுத்தாக்கல் பரிசீலனையின்போது கிருஷ்ணகிரி மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளில் ஜெயலிலதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் 3 ஆண்டுகளும், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கில் 2 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினர். இதுபோல் புதுக்கோட்டை மற்றும் புவனகிரி தொகுதிகளிலும் ஜெயலலிதா சார்பில் தாக்கலான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஒரே நேரத்தில் அதிகபட்சம் இரு தொகுதிகளில் மட்டுமே ஒருவர் மனுத்தாக்கல் செய்யவேண்டும் என்ற விதிமுறையை மீறி, நான்கு தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்ததன் அடிப்படையிலும் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதனால் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடாத நிலை ஏற்பட்டது. தேர்தலில் அதிமுக வென்றால் யார் முதல்வர் என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன, அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தீவிர பிரசாரத்தில் இறங்கினார் ஜெயலலிதா. மே 10ம் தேதி நடந்த தேர்தலின் முடிவுகள் வெளியானபோது அதிமுக 132 இடங்களில் வென்றிருந்தது. அந்த அணி 196 இடங்களை கைப்பற்றியிருந்தது. அதிமுக எம்எல்ஏ-க்கள் கூடி ஜெயலலிதாவை சட்டமன்ற குழுத் தலைவராக தெரிவு செய்தனர். அதே வேகத்தில் ஆளுநர் பாத்திமா பீவியை சந்தித்து எம்எல்ஏ-களின் ஆதரவுக் கடிதத்தை ஜெயலலிதா கொடுத்தார். வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நபர், முதல்வராக பதவியேற்பதா என புருவங்கள் உயர்ந்தன. ஆனால் பலரும் எதிர்பாராத வகையில் பாத்திமா பீவி, ஜெயலிதாவை பதவியேற்க அழைத்தார். ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
மேலும் படிக்க..
. உங்கள் தொகுதி : தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய தொகுதி கவுண்டம்பாளையம்..
ஜெயலலிதா பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாது என தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதா பதவி விலகினார். இந்த திருப்பங்களெல்லாம் போதாது என்பது போல் தமிழக மக்களுக்கு பெரிதும் பரிச்சயமற்ற ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் அரியணையில் அமர வைத்தார் ஜெயலலிதா. எனினும் அடுத்த சில மாதங்களில் வழக்குகளில் இருந்து நிவாரணம் பெற்று, மீண்டும் முதல்வரானார் ஜெயலிலதா. இவ்வாறாக 2001 தேர்தலும் பதவியேற்பும் திருப்பங்களுங்கெல்லாம் தலை என்பது போல் அமைந்திருந்தது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.