93 வயது.. 1000 திருவிழா.. மதுரை சித்திரை திருவிழாவின் பெருமை விசிறி தாத்தா!
- Reported by:VETRIVEL
- news18-tamil
- Published by:Anupriyam K
Last Updated:
மதுரை சித்திரை திருவிழாவில் விசிறி தாத்தா (நடராஜன்) 93 வயதிலும் விசிறி வீசுவதில் அயராது உழைக்கிறார். 69 வருடங்களில் 1000 திருவிழாக்களில் பங்கேற்றுள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவிற்கு மக்கள் வருடம் முழுவதும் காத்து கொண்டிருக்கின்றனர். அப்படி இந்த திருவிழாவோடு கொண்டாடப்படும் ஒருவர் தான் விசிறி தாத்தா. இவரின் இயற்பெயர் யாருக்குமே தெரிந்திருக்காது. இவரின் விசிறியால் ஆசிர்வாதம் கிடைப்பதையே மதுரை மக்கள் பெருமையாக கருதுகின்றனர். இந்த வருட சித்திரை திருவிழா கடந்த மாதம் 29 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினசரி அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது. 10 நாட்களும் வீதியுலாவில் பங்கேற்று மக்களுக்கு விசிறி வருபவர் தான் விசிறி தாத்தா.
பல தலைமுறைகளை பார்த்த இந்த விசிறி தாத்தா தற்போது நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், தனது இயற்பெயர் நடராஜன் என தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், 93 வயதிலும் அயராது உழைத்து வருகிறார். கோயில்களுக்கு சென்று விசிறி வீசுவதையே தனது வாழ்நாள் பணியாக வைத்துள்ளார் என்பதே பெரிய ஆச்சரியாக உள்ளது.
மீனாட்சி கொடுத்த உசுரு என்பதால் அவரின் அருளால் இந்த வயதிலும் விசிறியை தோளில் சுமந்து மாசி வீதிகளை சுற்றி வருகிறார். மதுரை மக்களை பார்ப்பதே கொண்டாட்டம் என கூறுகிறார். மதுரை மட்டுமல்லாது, திருவண்ணாமலை, ராமேஸ்வரம் என பல கோயில் திருவிழாக்களில் பங்கேற்று மக்களுக்கு சேவை செய்து வருகிறார். இதுவரை 1000 திருவிழாக்களில் பங்கேற்றிருப்பதாக பெருமையாக கருதுகிறார்.
advertisement
தனது 17 வயதில் இந்த பயணத்தை தொடங்கிய இவர் 69 வருடம் விசிறி கொண்டே இருப்பதால், கடவுளின் அருளால் உடல் வலியே இருக்காது எனவும் கூறுகிறார். இது போதாது என்று அழகரையும் நடந்தே சென்று வழியனுப்புவதாக கூறுகிறார். மதுரை திருவிழாவில் அழகருக்கும், மீனாட்சிக்கும் எவ்வளவு மவுசு உள்ளதோ, அதே அளவு விசிறி தாத்தாவையும் மக்கள் வலைவீசி தேடுவார்கள்.
காஞ்சி பெரியவர் கையால் மாலை வாங்கி அணிந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், நான் வீசுவது மூலம் மக்கள் வியர்வை தணிந்து களைப்பு போகும் போது நிம்மதியாக இருக்கும் என கூறினார். இதுவரை காமராஜர் முதல் இந்திராகாந்தி வரை அனைவருக்கும் விசிறி விட்டிருக்கிறேன். தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை செய்வதே எனது ஆசை என மகிழ்ச்சியாக கூறுகிறார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
Location :
Tamil Nadu
First Published :
May 02, 2025 8:34 PM IST
தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/
93 வயது.. 1000 திருவிழா.. மதுரை சித்திரை திருவிழாவின் பெருமை விசிறி தாத்தா!









