4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் போட்டிகள் இம்முறை பிரிட்டனின் பிர்மிங்கமில் நடைபெறுகிறது. ஜுலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதிவரை நடைபெறவுள்ள இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை, 36 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருந்தனர். 100 மீ மற்றும் 4*100 மீ தொடா் ஓட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி தேர்வாகியிருந்தார். இதேபோல், ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபு தேர்வாகியிருந்தார்.
advertisement
இந்நிலையில், காமன்வெல்த் அணிக்கு தேர்வாகியுள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தனலட்சுமி மற்றும் ஐஸ்வர்யா பாபு ஆகியோர் தோல்வி அடைந்தனர். இதையடுத்து இருவரும் காமன்வெல்த் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற பி.வி சிந்துவை கவுரவுப்படுத்திய அமுல்!
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தனலட்சுமி, தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் 4*400 கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்காகத் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபுவும் தேசிய அளவில் மும்முறை தாண்டுதல் போட்டியில் பல்வேறு பதக்கங்களையும் விருதுகளையும் வென்றுள்ளார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற 61வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஸ்வர்யா பாபு தங்க பதக்கம் வென்றதோடு முந்தைய சாதனையையும் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
