சிவாஜி கணேசன் நடிப்பில் பீம்சிங் இயக்கிய பாலும் பழமும் திரைப்படம் 1961 ஆம் ஆண்டு வெளியானது. அந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் பாலும் பழமும் ஒன்று. போன்ற 'ஏ' சென்டர்களில் மட்டுமில்லாமல், போன்ற 'பி' சென்டர்களிலும் படம் 100 நாட்கள் ஓடியது. சென்னையில் 20 வாரங்களை கடந்து ஓடி வசூலை குவித்தது.
பொதுவாக சிவாஜி நடிக்கும் திரைப்படங்களில் அவரைத் தாண்டி ஒருவர் பெயர் வாங்குவது கடினம். எம் ஆர் ராதா போன்ற ஒரு சிலர்தான் அப்படி பெயர் வாங்கி இருக்கிறார்கள்; பேசப்பட்டு இருக்கிறார்கள். பாலும் பழமும் திரைப்படத்தில் சரோஜாதேவி தனது நடிப்பால் சிவாஜியிடமிருந்தே பாராட்டை பெற்றார் என்பது ஆச்சரியமான தகவல். இந்தப் படத்தில் புற்று நோய்க்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் இருக்கும் மருத்துவர் ரவியாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். சாந்தி என்ற நர்சாக சரோஜாதேவி நடித்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள்.
அதன் பிறகு தான் சரோஜாதேவிக்கு டிபி நோய் இருப்பது தெரியவரும். அந்தக் காலத்தில் அது தீராத வியாதிகளில் ஒன்றாக கருதப்பட்டது. முழு நேரமும் மனைவியை கவனிப்பதில் சிவாஜி கணேசன் நேரத்தை செலவிட, சொல்லாமல் கொள்ளாமல் அவரிடம் இருந்து விலகி செல்வார் சரோஜாதேவி. அவர் ரயிலில் அடிபட்டு இறந்ததாக செய்தி வரும். சிவாஜியும் அதனை நம்புவார். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் தனது வளர்ப்பு தந்தை எஸ்வி சுப்பையாவின் மகள் சவுகார் ஜானகியை திருமணம் செய்ய வேண்டியதாகும். வேண்டா வெறுப்பாக தாம்பத்தியம் நடத்திக் கொண்டிருக்கையில் டிபி நோய் சரியாகி சரோஜாதேவி திரும்ப வருவார். இந்த நேரத்தில் விபத்து ஒன்றில் சிவாஜி கணேசனின் கண் பார்வை பறிபோய் இருக்கும். நீலா என்ற நர்சாக சிவாஜி கணேசனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் சாந்தியாகிய சரோஜாதேவி.
சிவாஜி கணேசனின் முதல் மனைவிதான் நீலா என்ற உண்மை தெரிய வரும்போது என்னவாகும்? சிவாஜி கணேசனுக்கு பார்வை திரும்ப கிடைத்ததா? அவரும் சரோஜாதேவியும் ஒன்றிணைந்தார்களா? என்பதை உணர்ச்சி பொங்க பீம்சிங் சொல்லியிருப்பார். இந்தப் படத்தின் கதையை ஜி பாலசுப்பிரமணியம், பசுமணி இணைந்து எழுதி இருந்தனர். பீம்சிங் திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியடைய கன்னடத்தில் பிரார்த்த ஜீவா என்ற பெயரிலும், ஹிந்தியில் சாத்தி என்ற பெயரிலும் ரீமேக் செய்தனர். 1968 ல் வெளியான சாத்தி திரைப்படத்தை சிவி ஸ்ரீதர் இயக்கியிருந்தார். அங்கும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
டிபி நோயாளியாக மெலிந்த தோற்றத்துடன் சரோஜாதேவி படத்தில் காட்சி அளிப்பார். அந்த நேரத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்ததும், சாப்பாட்டிற்கு பதில் பழச்சாறு மட்டும் அருந்தி வந்ததும் அவரது உடல் எடையை இழக்க வைத்து. அந்தத் தோற்றம் மற்றும் நடிப்புக்காக சரோஜாதேவியை பாராட்டிய சிவாஜி, 'என்னைவிட சிறப்பாக நடித்திருக்கிறாய் சரோ' என்றிருக்கிறார். இதனை சரோஜாதேவியே ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
பாலும் பழமும் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு துணையாக இருந்தது எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையும் கண்ணதாசனின் பாடல்களும். ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்..., என்னை யார் என்று எண்ணி எண்ணி..., பாலும் பழமும் கைகளில் ஏந்தி..., போன்ற பாடல்கள் மங்காத புகழுடன் இன்னும் ரசிக்கப்படுகிறது. இந்தப் படத்தின் இசைத்தட்டில், தென்றல் வரும்.. என்ற பி சுசிலா பாடிய பாடல் இடம் பெற்றிருந்தது.
சவுகார் ஜானகியை வைத்து இந்தப் பாடலை படமாக்கினார்கள். பொதுவாக சௌகார் ஜானகிக்கு நாட்டியம் என்றால் அலர்ஜி. இந்தப் பாடலுக்கு நிறைய ரிகர்சல் எடுத்து நடனமாடி இருந்தார். அதனால் பாடல் எப்படி படத்தில் வந்திருக்கிறது என்பதை அறிய ஆவலுடன் திரைப்படத்தை பார்த்திருக்கிறார் சௌகார் ஜானகி. தனி நடனமாக எடுத்ததால் படத்தில் எங்கு இந்தப் பாடல் இடம் பெறும் என்பதும் அவருக்கும் தெரியாது. ஒருவித த்ரில்லுடன் திரைப்படத்தை பார்த்தவருக்கு பெருத்த ஏமாற்றம். கடைசி வரை அந்தப் பாடல் வரவே இல்லை. படத்தின் நீளத்தை குறைக்க வேண்டி வந்த போது, இயக்குனர் பீம்சிங் அந்தப் பாடலை படத்திலிருந்து தூக்கியது பிறகுதான் சௌகார் ஜானகிக்கு தெரியவந்துள்ளது.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் பாடல் யூடியூபில் உள்ளது. ஆனால் இந்தப் பாடலுக்கு சரோஜாதேவி நடனமாடிக் கொண்டிருப்பார். எனில் உண்மையில் இந்த பாடலுக்கு நடனமாடியது சரோஜாதேவியா அல்லது சௌகார் ஜானகியா என்ற குழப்பம் ஏற்படும். ஆடியது சௌகார் ஜானகி தான். ஆனால், யூடிபில் சரோஜாதேவியின் வேறு பாடல் காட்சிகளை வெட்டி ஒட்டி இந்தப் பாடலுடன் வெளியிட்டுள்ளனர். இதனால் இந்தப் பாடலில் ஆடியது சரோஜாதேவி என்றே இன்னும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.