காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட அரிய நாணயங்களின் நாணயவியல் கண்காட்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நாணயவியல் கண்காட்சிக்கு அக்கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கண்காட்சியில் கடந்த 1835 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை உள்ள நாணயங்கள், பல்லவர்கள், சேர, சோழ, பாண்டியர் மற்றும் விஜயநகரப் பேரரசர் காலத்து நாணயங்கள்,
நெகிழிப் பணம் மற்றும் நெகிழி நாணயங்கள், வெளிநாட்டு, உள்நாட்டு தபால் வில்லைகள், சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை உள்ள ஒரு ரூபாய் நோட்டு மற்றும் நாணயம்,
பழங்கால காசுகளான ஓட்டை காலணா, குதிரை காலணா, தம்பிடிக்காசு உட்பட ஏராளமான நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியை கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் பார்வையிட்டனர்.
இந்நாணயங்கள் அனைத்தையும் கடந்த 20 ஆண்டுகளாக சேமித்து வைத்து கண்காட்சிக்கு உதவிய தொல்லியல் ஆய்வாளர் இரா.சு.ஜவஹர் பாபு கல்லூரி நிர்வாகத்தால் கௌரவிக்கப்பட்டார்.
இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் ந.அப்பாத்துரை, ம.கணபதி ஆகியோர் முன்னின்று செய்தனர்.