விருதுநகர் அருகே போலீஸ் துப்பாக்கியுடன் செல்பி எடுத்து சமுகவலைதளத்தில் பரப்பிய நபரால் காவலர்கள் இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி காவல் நிலையத்தில் அன்பரசன் என்பவர் இரண்டாம் நிலை காவலராகவும் ஆறுமுகவேல் என்பவர் தலைமைக் காவலராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதத்தில் நாருகாபுரம் கிராமத்தில் மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் ஜான்பாண்டியனை விருதுநகர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக இவர்கள் இருவரும் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது வெளியே வந்த காவலர்கள் இருவரும் இருக்கன்குடியைச் சேர்ந்த மாடேஸ்வரன் என்பவரிடம் கையில் இருந்த துப்பாக்கியை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு டீ குடிக்க சென்றுள்ளனர்.
இந்த நேரத்தில் மாடேஸ்வரன் கையிலிருந்த துப்பாக்கியுடன் செல்பி எடுத்து தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக பதிவேற்றம் செய்துள்ளார்.
துப்பாக்கியுடன் பதிவேற்றம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிய தகவல் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகருக்கு தெரியவந்துள்ளது.
அவர் இது தொடர்பாக கவனக்குறைவாக பணியில் ஈடுபட்ட அன்பரசன் மற்றும் ஆறுமுகவேல் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட காவலர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.