ஹோம் /விருதுநகர் /

உணவுப் பிரியர்களை சுண்டியிழுக்கும் பாலவநத்தம் சீரணி மிட்டாய்- தயாரிப்பு முறை தெரியுமா?

உணவுப் பிரியர்களை சுண்டியிழுக்கும் பாலவநத்தம் சீரணி மிட்டாய்- தயாரிப்பு முறை தெரியுமா?

விருதுநகர் சீரணி மிட்டாய்

விருதுநகர் சீரணி மிட்டாய்

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தத்தில் விற்க்கப்படும் சீரணி மிட்டாய் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தற்போது ஆடி மாதம் என்பதால் தமிழகத்தில் ஆங்காங்கே திருவிழாக்கள் கலை கட்ட துவங்கியுள்ளன. பலகாரங்கள் இல்லாமல் திருவிழா எப்படி? திருவிழாவிற்கு வந்த விருந்தாளிகளை உபசரித்து கவனிப்பதோடு, அவர்கள் திரும்பி செல்லும் போது நம்ம ஊர் ஸ்பெசல் இனிப்பு வகைகளை கொடுத்து அனுப்புவது நம் வழக்கம்.

  கருப்பட்டிக்கு பெயர் போன தென்மாவட்டங்களில், கருப்பட்டியில் செய்யப்படும் கருப்பட்டி மிட்டாய் மிகவும் பிரபலம். அதிலும் விருதுநகர் பாலவநத்தம் சீரணி மிட்டாய்க்கு தனி இடம் கொடுக்கலாம்.

  விருதுநகர் அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ளது பாலவநத்தம் எனும் அழகிய கிராமம். இக்கிராமத்தில் தயார் செய்யப்படும் சீரணி உலக புகழ் பெற்றது.

  விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சீரணி மிட்டாய்

  இந்த மிட்டாயை விருதுநகர் அருப்புக்கோட்டை வட்டார பகுதிகளில் சீரணி மிட்டாய் என்றும் வெளியூர் பகுதிகளில் கருப்பட்டி மிட்டாய், தேன் குழல் மிட்டாய், ஏணி மிட்டாய் என்றும் அழைத்து வருகின்றனர். இந்த மிட்டாய் சாத்தூர், கோவில்பட்டி பகுதிகளிலும் பிரபலம் என்றாலும் பாலவநத்தம் சீரணி மிட்டாய்க்கு என தனி மவுசு உண்டு என்கின்றனர் இப்பகுதி மக்கள். காரணம் மற்ற பகுதி மிட்டாய்களை விட இது சுவையில் மாறுபட்டும் அதிக மொரு மொருப்பாகவும் காணப்படுவது தான்.

  சீரணி மிட்டாய் தயாரிப்பு முறை

  சீரணி மிட்டாய் செய்வதற்கு முதல் நாளே அதற்கு தேவையான பச்சரிசி மாவையும் உளுந்தையும் நன்கு ஊர வைத்து, பின்பு அடுத்த நாளில் அதை ஒரு துளையிடப்பட்ட துணியில் எடுத்துக் கொண்டு எண்ணெயில் பிழிந்து (மற்ற பகுதிகளில் மாவு பிழிய சொம்பு பயன்படுத்துவர் ) மிதமான சூட்டில் பொரித்து அதை மீண்டும் தயார் செய்து வைத்துள்ள கருப்பட்டி பாகில் ஊர வைத்து, பின்பு வட்ட வட்டமாக கோபுர வடிவில் தேன் சொட்ட சொட்ட அடுக்கி வைக்கின்றனர்.

  வட்ட வட்டமாய் சங்கிலி தொடராய் இருக்கும் சீரணி மிட்டாய் அழகை கண்டாலே நாக்கில் நீர் சொட்டும் என்பதில் ஐயமில்லை. வெளியூர் செல்லும் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு இங்கு வந்து சீரணி மிட்டாய் வாங்கி செல்வதையும் இங்கு காண முடிகிறது.

  இது குறித்து பேசிய பல ஆண்டுகளாக சீரணி மிட்டாய் வியாபாரம் செய்யும் மணிகண்டன் ஸ்வீட்ஸ் உரிமையாளர் ஒரு நாளைக்கு 60 முதல் 80 கிலோ மிட்டாய் விற்கப்படுவதாகவும், கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்

  தற்போது சாதரண நாட்களில் கருப்பட்டி வெல்லத்தில் செய்யப்பட்ட மிட்டாய், சீனியில் செய்யப்பட்ட மிட்டாய் தயார் செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் தனிக்கருப்பட்டியில் செய்யப்பட்ட ஸ்பெசல் கருப்பட்டி மிட்டாய் கிடைக்கும்.

  செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Virudhunagar