Home /virudhunagar /

நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த பாலவநத்தம் ஜமீன் பாண்டித்துரைத் தேவர் தெரியுமா?

நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த பாலவநத்தம் ஜமீன் பாண்டித்துரைத் தேவர் தெரியுமா?

ஜமீன் பாண்டித்துரை தேவர்

ஜமீன் பாண்டித்துரை தேவர்

விருதுநகர் பாலவநத்தம் ஜமீனாக இருந்த பாண்டித்துரை நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டாற்றினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Virudhunagar, India
  முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் என மூன்று சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்த கதை நம் அனைவருக்கும் தெரியும். நான்காவது தமிழ்ச்சங்கம் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மூன்று தமிழ் சங்கங்களும் பாண்டியர்கள் காலத்தோடு சென்று விட்டன.

  அதற்கு பிந்தைய காலத்தில் தமிழ் மொழியை பாதுகாக்கவும், வளர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டது தான் நான்காம் தமிழ்ச்சங்கம். இந்த நான்காம் சங்கத்திற்கும் இன்றைய விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பாலவநத்தம் கிராமத்திற்கும் தொடர்பு உள்ளது. அது என்னவென்றால் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியது பாலவநத்தம் ஜமீன்‌ என்றழைக்கப்படும் பாண்டித்துரை தேவர் தான்.

  பாண்டித்துரைத்தேவர்:

  இவர் 1867-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் பிறந்தார். இவரது தந்தை பொன்னுசாமி தேவர் ராமநாதபுரம் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர். இவரின் சிறுவயதிலேயே தந்தை இறந்து விட்ட காரணத்தினால் இவரின் சொத்துக்கள் அனைத்தையும் ஷேசாத்திரி ஐயங்கார் என்பவர் பராமரித்து வந்தார்.

  குதிரை லாயம்


   

  இவருக்கு 17வயது வந்தவுடன் இவரின் சொத்துக்கள் அனைத்தும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் ஒன்று தான் பாலவநத்தம் ஜமீன். அன்று முதல் பாலைவனத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட காரணத்தால் பாலவநத்தம் ஜமீன்‌ என்றழைக்கப்பட்டார்.

  கல்வெட்டு


  தமிழ்ச்சங்கம் அமைக்க தனக்கு கிடைத்த ஜமீன் சொத்துக்களை பயன்படுத்தியது மட்டுமல்லாது, தனது ஆசிரியர்களில் ஒருவரான இராமசாமிப்பிள்ளை என்றழைக்கப்படும் ஞானசம்பந்தப்பிள்ளை மூலம் தேவாரத் தலைமுறை பதிப்பையும், சிவஞான சுவாமிகள் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்து வெளியிட்டார்.

  கல்வெட்டு


  அரிய தமிழ் நூல்களை கண்டெடுத்து அவை அழியா வண்ணம் அச்சிட்டு வந்த தமிழ்த்தாத்தா உவேசாவுக்கு மணிமேகலை, புறப்பொருள் வெண்பா மாலை அச்சிட பொருளுதவியும் செய்துள்ளார்.

  அரண்மனை உள்பகுதி


  இவை தவிர கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கு சுதேசி கம்பெனி துவங்க உதவியது. இவரும் இவரது உறவினரான மன்னர் பாஸ்கர சேதுபதியும் சேர்த்து விவேகானந்தரை சிகாகோ அனுப்பியது என தனது சொத்துக்கள் அனைத்தையும் சமுதாய முன்னேற்றத்திற்கே பயன்படுத்தியுள்ளார்.

  அரண்மனை வாசல்


  இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள பாலவநத்தம் கிராமத்திற்கு சென்ற போது ஜமீன்தாரின் உறவினரையும், ஜமீன்தாரரின் நினைவாய் எஞ்சி இருக்கும் குதிரை லாயத்துடன் கூடிய இடத்தையும் காணமுடிந்தது.

  நுழைவு வாயிலுடன் கூடிய அந்த இடத்தில் 1927ல் கட்டப்பட்ட விநாயகர் கோவிலும் அதையொட்டியே குதிரை லாயமும், வீடும் காணப்படுகிறது. இந்த இடம் பாண்டித்தேவரின் ஜமீன் சொத்துக்களில் ஒன்று என்றாலும் அவர் இங்கு வந்து சென்றதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனினும் அவர் இங்கு வந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது. இந்த இடம் தற்போது ஜமீன்தாரின் பேத்தி சுசிலா துரைப்பாண்டியின் பராமரிப்பில் உள்ளது.

  இது பற்றி அவர் கூறியதாவது, ‘இந்த இடம் தாத்தாவிடனுடையது தான் என்றாலும், இந்த இடத்துக்கு அவர் வந்து சென்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை என்றும் ஆனால் தமிழ் சங்கம் அமைத்து அனைத்தையும் ஊருக்காக செலவிட்ட அவரின் நினைவாக இந்த ஒரு இடம் மட்டுமே உள்ளதாகவும், இதனாலே நிறைய நபர்கள் இங்கு வந்து விசாரித்து செல்வதாகவும் தெரிவித்தார்.

  மேலும் உவேசா, வ.உ.சி ஆகியோர்க்கு தாத்தா பொருளிதவிகள் செய்துள்ளார். அவர்கள் பிரபலமான அளவிற்கு கூட தாத்தா ஆகவில்லை என்றும் தாத்தா அமைத்த தமிழ்ச்சங்கம் இன்றும் மதுரையில் இருக்கும் போது தாத்தாவின் நினைவாக எதுவும் இல்லை என்பது கவலையளிக்கிறது என்றார். அதனாலே இந்த இடத்தை பராமரித்து வருவதாகவும் இதன் அருகே அவரின் உருவச்சிலையுடன் கூடிய கல்வெட்டை நிறுவ முயற்சி செய்வது வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு அரசாங்கம் முன்வந்து உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Virudhunagar

  அடுத்த செய்தி