Home /virudhunagar /

விருதுநகரில் தரம் பிரிக்கப்படாமல் திறந்த வெளியில் தீ வைக்கப்படும் குப்பைகள்: பொதுமக்கள் அவதி

விருதுநகரில் தரம் பிரிக்கப்படாமல் திறந்த வெளியில் தீ வைக்கப்படும் குப்பைகள்: பொதுமக்கள் அவதி

எரிக்கப்படும் குப்பைக் கிடங்கு

எரிக்கப்படும் குப்பைக் கிடங்கு

விருதுநகர் நகராட்சி குப்பைக் கிடங்கில் திடக்கழிவுகள் அப்படியே திறந்த வெளியில் தீ வைத்து எரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை வழிகாட்டுதலின்படி, ‘தனியாக ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் ஆகிய இடங்களிலிருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உலோக பொருட்களை தனியே பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும். எஞ்சிய திடக்கழிவுகளை அரைத்து தூளாக்கி சுத்திகரிக்க வேண்டும்.

    ஆனால் விருதுநகர் மாத்து நாயக்கன்பட்டி சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கழிவுகள் கையாளப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகளோடு குப்பைகளை தீ வைத்து எரிக்கும் நிலையே காணப்படுகிறது.

    குப்பைக் கிடங்கு


    நகராட்சி குப்பை கிடங்கிற்கு சென்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை குப்பைகள் குவியலாக காணப்படுகிறது. குப்பைகள் நிறைந்த அப்பகுதி திறந்த வெளி கழிப்பறையாகவும் பயன்படுத்தப்படுவதால் பெரும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள வி.வி.ஆர் நகர், பாரதிநகர் மற்றும் பெருமாள் கோவில் தெரு பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    குப்பைக் கிடங்கு


    காய்கறி கழிவுகளை மட்டும் தனியே பிரித்து எடுத்து, உரமாக மாற்ற நுண் உர மையம் வி.வி.ஆர் நகரில் அமைக்கப்பட்டது. ஆனால் அது பெரும்பாலான நேரங்களில் பூட்டிய படியே காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். ஏற்கனவே முறையாக குப்பைகள் சேகரிக்கப்பட்டாமல் நகரில் ஆங்காங்கே குப்பைகள் குவியலாக காணப்படும் நிலையில் சேகரிக்கப்படும் குப்பைகளும் முறையாக கையாளாப்படாத நிலையே காணப்படுகிறது.

    குப்பைக் கிடங்கு


    இது தொடர்பாக நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் கேட்ட போது, அவர் நகராட்சி குப்பைகள் அனைத்தும் முறையாக மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யும் பொருட்களை சிமெண்ட் தொழிற்சாலை முதலான தொழிற்சாலைகளுக்கு அனுப்ப படுவதாகவும்,காய்கறி கழிவுகளை உரமாக மாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் நகராட்சி குப்பைகள் எரிக்கப்படுவது குறித்து அவரிடம் கேட்ட போது நகராட்சி பணியாளர்கள் குப்பைகளுக்கு தீ வைப்பது இல்லை.

    எரிக்கப்படும் குப்பைக் கிடங்கு


    அங்கிருக்கும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் சேகரிக்க வரும் நபர்கள் தீ வைத்து செல்வதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் இது பற்றி நகராட்சி தூய்மை பணியாளர் ஒருவரிடம் விசாரித்த போது பிரிக்கப்படாத குப்பைகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டு, பின் சிறிது காலத்திற்கு பின்னர் தீ வைத்து எரிக்கப்படுவதாய் கூறினார். இருவரது கூற்றும் முரணாக உள்ளதால் நகராட்சி குப்பைகள் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி