ஹோம் /விருதுநகர் /

பொம்மை வைத்து வழிபாடு- விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் சிறப்புகள் என்ன?

பொம்மை வைத்து வழிபாடு- விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் சிறப்புகள் என்ன?

விருதுநகர் பராசக்தி கோவில்

விருதுநகர் பராசக்தி கோவில்

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பொம்மை வைத்து வழிபடும் பழக்கம் இருந்துவருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விருதுநகர் என்ற பெயரை கேட்டாலே நிறைய பேருக்கு‌ விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலும், அதன் பங்குனி ‌திருவிழாவும் தான் நினைவுக்கு வரும். தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் விருதுநகர் பாராசக்தி மாரியம்மன் கோவில் பக்தர்களை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கோவில் வரலாறு:

புகழ்பெற்ற இம்மாரியம்மன் கோவில் வரலாறு 400 ஆண்டுகள் பழமையானது. செவிவழி கிடைக்கப்பெற்ற தகவலின் படி, இக்கோவில் அமைந்துள்ள ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்து வயது சிறுமி ஒருவர் இங்குள்ள கூலக்கடை என்னும் கடையில் அடைக்கலம் கேட்டதாய் கூறப்படுகிறது. அக்கடைக்காரர்கள் இக்கோவில் அமைந்துள்ள இடத்தில் இச்சிறுமிக்கு ஒரு குடிசை அமைத்து கொடுத்துள்ளனர்.

பராசக்தி அம்மன் கோவில்

பின்பு அந்த குடிசையிலேயே அந்த சிறுமி இறந்துவிட்டதாகவும், இறந்த அக்கன்னியை தெய்வமாக வழிபட முடிவு செய்து, தினசரி விளக்கேற்றி பூஜைகள் செய்து வந்தனர். அப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த காரணத்தால் அவர்களால் தொடர்ந்து பூஜை செய்ய இயலவில்லை.

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொம்மைகள்

அதனால் அவர்கள் மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் உதவி கேட்டதாகவும், பின்பு வியாபாரிகள் அக்கோவிலை பராமரிக்கும் வேலையை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விருதுநகர் விருதுபட்டியாக இருந்த போது, 1780ல் கோயில் உள்ள இடத்தில், சிறிய பீடம் அமைத்து வழிபட்டு வந்தனர். 1859ல் பீடம் மீது, அம்மன் சிலை வைத்து வழிபடத் துவங்கினர். அன்று முதல், இக்கோயிலின் முக்கிய பண்டிகையாக, பங்குனி பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

பராசக்தி மாரியம்மன் கோவில்

1918ல் கோயிலில், முதல்முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மண் சுவரால் ஆன கோயில் மூலஸ்தானத்திற்கு, 1923ல் புதிய கட்டடம் கட்டப்பட்டது. 1933 முதல் பங்குனி பொங்கல் திருவிழாவை, வெகு விமரிசையாக கொண்டாட துவங்கினர்.

கோவில் அமைப்பு:

பரப்பாக காணப்படும் பஜாரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் மிகவும் பிரபலமானது என்றாலும் மற்ற கோவில்களை போல் அல்லாமல் சிறிய அளவிலே காணப்படுகிறது. எனினும் சூலாயுதத்துடன் கூடிய இதன் பிரமாண்ட கோபுர அமைப்பு மற்ற மாரியம்மன் கோவில்களில் இருந்து இந்த கோவிலை தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது.

மண்பொம்மைகள்:

கோவிலின் வெளிப்புற கடைகளில் பூஜை பொருட்களை தவிர்த்து, மண்ணால் செய்யப்பட்ட அழகிய பொம்மைகளை காண முடிகிறது. அதை பக்தர்கள் வாங்கி கோவிலில் வைத்து வழிபட்டு செல்கின்றனர்.

இதை வாங்கி வைப்பதன் நோக்கம் தான் என்ன என்று பொம்மை விற்கும் கடைக்காரரிடம் கேட்ட போது அவர் விவரிக்க தொடங்கினார். திருமண வரன் தேடுவோர், குழந்தை இல்லாதவர்கள், வீடு கட்ட வேண்டுபவர்கள் அதை போன்ற இந்த மண்பொம்மைகளை வாங்கி வைத்து வேண்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்றார். மேலும் இந்த பொம்மைகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன என கேட்ட போது இந்த பொம்மைகள் யாவும் விருதுநகர் சுற்றுவட்டார கிராமங்களில், மண்பாண்டங்கள் செய்வோரால் முறையாக விரதம் கடைபிடிக்கப்பட்டு, வண்டல் மண், களிமண் கொண்டு செய்யப்படுவதாய் கூறினார்.

திருமண வரன் தேடுவோர்க்கு ஆண், பெண் பொம்மைகளும், குழந்தை வரம் வேண்டுவோர்க்கு குழந்தை பொம்மைகளும், வீடுமனை விரும்புவோர்க்கு வீடு பொம்மைகளும், இவை தவிர கை,கால், கண் மாதிரி பொம்மைகளும் காணப்படுகின்றன.

இதையெல்லாம் பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் கூறுகின்றனர்.

விஷேச நாட்கள்:

மழைக்கு மாரியம்மனையும், வெயிலுக்கு வெயிலுகந்தம்மனையும் நம்பியுள்ள விருதுநகர் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத திருவிழாவை அக்னி சட்டி மற்றும் 21 அக்னி சட்டி எடுத்தல், கயிறு குத்துதல், பறவை காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்தி வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். திருவிழாவிற்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது, வெளியூரில் இருந்தும் மக்கள் பெருமளவில் கலந்து கொள்வது வழக்கம்.

செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar