தமிழ்நாட்டில் பல ஆறுகள் தேடும் நிலையில் தான் உள்ளன. அதற்கு நம் ஊர் மட்டும் விதிவிலக்கா என்ன? இங்கும் அதே நிலை தான் என்பதை போல விருதுநகரின் பிரதான நதியான கௌசிகா மகாநதி பல ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து காணப்படுகின்றது.
சோழ நாட்டில் ஓடும் காவிரிக்காக இங்கிலாந்து குரல் கொடுக்கும்போது, நாம் நம் ஊரில் உள்ள நீர்நிலைகளை கவனிக்க தவறிவிட்டோமா என தோன்றுகிறது. முன்னொரு காலத்தில் பரிசல் விட்டு பயணம் செய்யும் அளவிற்கு செழித்து இருந்த கௌசிகா மகாநதி தற்போது ஆடு தாண்டும் ஓடையாகி உள்ளது.
இந்த நதி வடமலைகுறிச்சி கண்மாய்களுக்கு வைப்பாற்றின் உபரிநீராய் வந்து பின் அங்கிருந்து சின்னமூப்பன்பட்டி, மீனாட்சிபுரம், அகமது நகர், பர்மா காலனி, அன்னை சிவகாமிபுரம், பாத்திமா நகர், ஆத்துமேடு ஆகிய பகுதிகளை கடந்து குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் வரை செல்கிறது.
மற்ற நதிகளைப்போல் மலைகளில் இருந்து பிறக்கவில்லை என்றாலும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீருக்கு முக்கிய நீராதாரமாய் விளங்குகிறது இந்த கௌசிகா மகாநதி.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கௌசிகா நதிநீர் தான் இப்பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது.
ஆனால் இன்று தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளும், பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ளமையால் ஆற்றில் கலக்கும் கழிவுநீரும் தான் என்கின்றனர்.
ஆத்துப்பாலம், புதிய பேருந்து நிலையம் செல்லும் பாலம் போன்றவற்றிலிருந்து பார்க்கும் போதே கௌசிகா ஆற்றின் பரிதாப நிலையை புரிந்து கொள்ளலாம். சாக்கடை கலந்து, கருவேல மரங்கள் நிறைந்து அவற்றின் நடுவே கௌசிகா நதி சிறிய வடிகால் நீர் போல வழிந்தோடிக்கொண்டிருக்கிறது.
இதனால் அல்லம்பட்டி ஆத்துமேடு பகுதி மக்கள் சுகாதார கேட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை நம்பி பாசனம் செய்யப்பட்டு வந்த நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளானது வேறு கதை.
சில ஆண்டுகளுக்கு முன்பு கௌசிகா நதியை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, தூர்வாரப்பட்டது. ஆனால் சரியாக தூர்வாரப்படாத காரணத்தால் மீண்டும் சில மாதங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துவிட்டன. தற்போது அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் வெள்ள நீரை சேகரிக்க முடியவில்லை என்றும், நதியை முறையாக தூர்வாரி தடுப்பணைகள் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar