ஹோம் /விருதுநகர் /

Virudhunagar | நாட்டு ஆடுகளுக்கு புகழ் பெற்ற சாத்தூர் ஆட்டுச்சந்தை பற்றி தெரியுமா?

Virudhunagar | நாட்டு ஆடுகளுக்கு புகழ் பெற்ற சாத்தூர் ஆட்டுச்சந்தை பற்றி தெரியுமா?

விருதுநகர்

விருதுநகர் ஆட்டுச் சந்தை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடை பெற்று வரும் சாத்தூர் ஆட்டுச்சந்தை நாட்டு ஆடுகளுக்கு புகழ் பெற்ற சந்தையாக விளங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Sattur, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்று வரும் சாத்தூர் ஆட்டுச்சந்தை நாட்டு ஆடுகளுக்கு புகழ் பெற்ற சந்தையாக விளங்குகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது சாத்தூர் ஆட்டுச்சந்தை. ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் இரண்டு மணிக்கு தொடங்கும் இந்த சந்தை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. சாதரணமாக 5 மணி வரை நடைபெறும் சந்தை, பண்டிகை நாட்களில் ஆறு, ஏழு மணி வரை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், ஆட்டு வியாபாரிகளும் பெருமளவில் வந்து செல்லும் இந்த ஆட்டு சந்தை மதியத்திற்கு மேல் தொடங்குவதால், அருகில் இருக்கும் எட்டையபுரம் ஆட்டுசந்தை முடிந்த பின்னர் அங்கிருந்து வரும் வியாபாரிகள் இங்கேயும் வந்து மீதம் இருக்கும் ஆடுகளை விற்று செல்வது வழக்கம்.

சாத்தூர் ஆட்டுச் சந்தை 

நாட்டு ஆடுகள்:

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த ஆட்டு சந்தைக்கு, விருதுநகரை சுற்றி காணப்படும் நாட்டு ஆடுகளான கன்னி ஆடு, வெள்ளாடு, கொடி ஆடுகள் பெருமளவில் விற்பனைக்கு வருகின்றன.

சாத்தூர் ஆட்டுச் சந்தை

நாட்டு ஆடுகளின் தனித்துவம் என்ன என்று கேட்ட போது, இந்த நாட்டு ஆட்டில் கறியானது எடை குறைவாக தான் இருக்கும். ஆனால் அதன் சுவை குறையாமல் இருக்கும். மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட ஆடுகள் என்பதால் இந்த ஆடுகளுக்கு எப்போதும் தனி மவுசு இருந்து கொண்டே இருக்கும் என்றனர்.

சாத்தூர் ஆட்டுச் சந்தை

ஆட்டு வியாபாரி ஒருவர் பேசுகையில், தான் முப்பது ஆண்டுகளாக இந்த சந்தையில் ஆடு விற்பனை செய்து வருவதாகவும், ஆட்டின் எடை மற்றும் தன்மையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றார். தற்போது ஐப்பசி மாதம் என்பதால் பெரும்பாலோர் மாலையணிந்து விரதம் இருப்பர். அதனால் இந்த மாதத்தில் விலை சற்று குறைவாகவே இருக்கும். தை மாதத்திற்கு பின் ஆடுகளின் விலை அதிகரிக்கும் என்றார்.

ஒரு காலத்தில் அதிகளவில் ஆடுகள் வந்து சென்ற சந்தைக்கு இன்று ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து, சந்தையும் சுருங்கி விட்டது.

முன்பெல்லாம் ஆட்டு சந்தைக்கு ஆடுகளை மேய்ச்சல் முறையில் மேய்த்து வந்து ஆடுகளை விற்று விட்டு, மீதமுள்ள ஆடுகளை வீட்டுக்கு கொண்டு செல்வர். இதில் ஆடுகள் விற்கவில்லை என்றாலும் விவசாயிகளுக்கு பெரிதாக ஒன்றும் நஷ்டம் ஏற்பட போவதில்லை.

ஆனால் இன்று ஆடுகள் ஆட்டோக்களில் ஆடுகளை கொண்டு வர வேண்டிய சூழல் உள்ளதால், செலவீனம் கருதி விவசாயிகள் யாரும் சந்தைக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் கால்நடை வளர்ப்பும் குறைந்து வருவதும் ஆடுகளின் எண்ணிக்கை குறைவிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar