Home /virudhunagar /

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள் (மே 27)

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள் (மே 27)

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

Virudhunagar District: விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள் (மே 27)

    தூய அன்னை மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சி அடுத்த கீழ்க்குடி கிராமத்தில் தூய அன்னை மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 8 ஜோடி பெரிய மாடுகளும், 11 ஜோடி சிறிய மாடுகளும் பந்தயத்தில் பங்கேற்று  சீறிப்பாய்ந்தன.

    சிறிய மாட்டிற்கு 6 கி.மீ தூரமும், பெரிய மாட்டிற்கு 8 கி.மீ தூரமும் பந்தய துாரமாக நிர்ணயிக்கப்பட்டது.வெற்றி பெற்ற மாடுகளுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
    சீறிப் பாய்ந்து சென்ற காளைகளை, ஆயிரக்கணக்கான மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் நின்று ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

    பந்தயத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மாட்டு வண்டி பந்தயங்களை காண திருச்சுழி, அருப்புக்கோட்டை பரளச்சி, கீழ்குடி, பெருநாழி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

    20 டன் ரேசன் அரிசி கடத்தல்.. லாரி பறிமுதல்-டிரைவர் கிளீனர் தப்பி ஓட்டம்

    விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் படந்தால் விலக்கு அருகே சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் வேகமாக சென்றதால் போலீசார் லாரியை விரட்டிச் சென்றனர்.

    வேகமாகச் சென்ற லாரியை பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் இருட்டில் தப்பி ஓடியுள்ளனர். பின்னால் விரட்டிச் சென்ற போலீசார் லாரியில் சோதனை செய்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து அதனை சோதனை செய்து பார்த்தபோது அதில் சுமார் 400 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. இதன் எடை சுமார் 20 டன் ஆகும்.

    இதனையடுத்து ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்த லாரியையும் அதில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்த போலீசார் உணவு கடத்தல் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் கிளீனர் குறித்த விவரம், கடத்தப்பட்ட ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டுவரப்பட்டது மேலும் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுமார் 10 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த விசைத்தறி தொழிலை நம்பி நெசவாளர்கள் மற்றும் அதனை சார்ந்த சாயம் பூசுதல், பசை ஓட்டுதல் போன்ற தொழில்களை செய்யும் தொழிலாளர் என மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
    தற்போது தொடர்ந்து அதிகரித்துவரும் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    நூல் வாங்க முடியாமலும் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாமலும் நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

    இந்த நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் நெசவாளர்கள் நேற்று முதல் 5 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  குறிப்பாக பஞ்சு நூகௌ  உள்நாட்டுத் தேவைக்குப் போக மீதியை ஏற்றுமதி செய்ய வேண்டும். விசைத்தறி தொழிலை பாதுகாக்க தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். நூல் விலையை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. கட்டும் நெசவு உற்பத்தியாளர்களுக்கு சலுகை விலையில் நூல் சப்ளை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  நெசவாளர்கள் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த உள்ளனர்.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 7 ஆயிரம் விசைத்தறிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சேலைகள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிக்கு நெசவு வேலை செய்யும் நெசவாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

    பஸ்-லாரிகளில் ஏர்ஹாரன் பயன்படுத்தக் கூடாது-போலீசார் எச்சரிக்கை

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது குறித்து அரசுபணிமனை மேலாளர்கள், தனியார் பஸ் கம்பெனி உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுடனான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில், ராஜபாளையம் பொறுப்பு டி.எஸ்.பி சபரிநாதன் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த கூட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் (நெடுஞ்சாலை), நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் லாவண்யா ஆகியோர் தலைமை வகித்து ஆலோசனைகள் வழங்கினர்.

    ராஜபாளையம்- தென்காசி ரோடான மெயின்ரோடு,மதுரை ரோடுகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காகவும், பாதாள சாக்கடை திட்டத்திற்காகவும் குழாய்கள் பதிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் இரவில் மட்டுமே பணிகள் நடைபெற்று வருகின்றன.இருப்பினும் சாலைகள் சீரமைக்கப்படும் வரை வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தாமல் சீரான வேகத்தில் கவனமாக இயக்கி ஒத்துழைப்பு தரவேண்டும்.
    அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனை தாங்களே முன்வந்து அகற்றிவிடக்கோரி கல்விநிறுவன பஸ்கள், நூற்பாலை பஸ்கள் மற்றும் லாரிகள்,தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு உத்தரவு கடிதம் அனுப்பட்டு விட்டது. இதையும் மீறி பயன்படுத்தப்படும் ஏர்ஹாரன்கள் போலீஸ் மூலம் அகற்றப்பட்டு அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் தென்காசி ரோட்டில் காந்தி கலைமன்றம் அருகே சாந்தி தியேட்டர் அருகே ஸ்டேட் பேங்க் முன்பு பஸ் நிறுத்தம் செயல்பட அனுமதி கிடையாது. அங்கு வாகனங்களை நிறுத்தி ஆட்களை ஏற்றவோ இறக்கவோ கூடாது. இது ஆட்டோக்களுக்கும் பொருந்தும். தெற்கே இருந்து வடக்கு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் காந்திசிலை ரவுண்டானாவில் இருந்து இடது புறமாக சென்று நீதிமன்றம் வழியாக மாடசாமிகோவில் தெருவை அடைந்து பஞ்சு மார்க்கெட் நேரு சிலை வழியாக மதுரை ரோட்டை சென்றடைய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசி ரோடு வரையிலான இணைப்பு சாலை கூடிய விரைவில் வர இருப்பதாலும், திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிசாலையும் நடைமுறைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாலும் போக்குவரத்து இயல்பு வாழ்க்கை திரும்ப வாய்ப்புள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

    வாஷிங் மிஷின் எரிந்து கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு பகுதியில் ராஜேஷ் என்பவர் வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி வருவதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
    இதை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது வாஷிங் மிஷின் எரிந்து கொண்டு இருந்தது.

    இதன் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். விசாரணையில் வாஷிங் மிஷின் மீது துணியை போட்டு விட்டு மின்சாரம் துண்டிக்காததால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.இந்த தீ விபத்து காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கல்லூரி மாணவி 4 பேர் மாயம்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சின்ன காமன் பட்டியைச் சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் மேட்ட மலையில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை . சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம் பட்டியைச் சேர்ந்தவர் பரலோக தாஸ். இவரது மூத்த மகள் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கூமாபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (21). இவர் விருதுநகர் அருகே ஆமத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மார்க்கெ ட்டிங் செல்வதாக கூறி விட்டு சென்ற மனோஜ் குமார் அதன் பின்னர் எங்கு சென்றார்? என தெரிய வில்லை.
    பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து அவரது சகோதரர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நரிக்குடி அருகே உள்ள நல்லுக்குறிச்சி சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (வயது 21). சம்பவத்தன்று இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை வீரசோழன் போலீசில் புகார் செய்துள்ளார்.அதில், தனது மகன் கீழசெம்பூரை சேர்ந்த இளம் பெண்ணுடன் மாயமானதாகவும்  எனவே தனது மகனை மீட்டு தருமாறு தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல் 2021-22-ம் ஆண்டிற்கான (1.4.2018 முதல் 31.3.2021 வரை)

    முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
    விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் “முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்” என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்திற்கு ‘‘உறுப்பினர் செயலர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரிய மேடு, சென்னை -3’’ என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்-10.6.2022 ஆகும்.

    பிரதோஷத்தை முன்னிட்டு  சதுரகிரியில் திரளான பக்தர்கள் தரிசனம்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்தக் கோவிலுக்கு நேற்று  வைகாசி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு 5 நாட்கள் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    பிரதோஷ தினமான நேற்று  மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்கும் முன்பு குவிந்தனர்.
    காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
    பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பிரதோச சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    45 நாட்கள் வேலைநிறுத்தம்- கம்பி மத்தாப்பு ஆலைகள் மூடலால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நாக்பூர் உரிமம் பெற்ற ஸ்பார்க்ளர் எனப்படும் கம்பி மத்தாப்பு உற்பத்தி ஆலைகள் 100 இயங்கி வருகின்றன. கம்பி மத்தாப்பு எலக்ட்ரிக், கலர், கிரீன், ரெட் என 4 விதமான மத்தாப்புகள் தயாரிக்கப்படுகின்றது.
    இதில் ரெட் தவிர மற்ற மூன்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்திதான் தயாரிக்க முடியும். பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தீர்ப்பு அளித்துள்ளது.

    கம்பி மத்தாப்பு ஆலைகளில் ரெட் எனப்படும் மத்தாப்பு மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதனை தயாரிக்க ஸ்ட்ரான்சியம் நைட்ரேட் என்ற சிவப்பு உப்பு பயன்படுத்தப்பட்டது. இதில் 2 சதவீதம் பேரியம் நைட்ரேட் கலந்து இருப்பதாக கூறி மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கம்பி மத்தாப்பு ஆலைகளில் ஆய்வு செய்து உரிமத்தை ரத்து செய்தனர் .
    இதனால் விரக்தி அடைந்த கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 2-ந்தேதி முதல் ஆலைகளை மூடினர். 45 நாட்களுக்கு மேலாகியும் கம்பி மத்தாப்பு ஆலைகள் இயங்கவில்லை. இந்த தொடர் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது . கம்பி மத்தாப்பு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என எந்த இடத்திலும் கூறவில்லை.
    சிவப்பு உப்பை பயன்படுத்தி ஒரு வகை மத்தாப்பு மட்டும் தயாரித்தாலும், பெசோ அதிகாரிகள் ஆலையின் உரிமைத்தை ரத்து செய்கின்றனர். இந்தியாவில் 95 சதவீதம் பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் கம்பி மத்தாப்பு உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது .

    ஆனால் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் எந்தவித கெடுபிடி இல்லாமல் கம்பி மத்தாப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது.

    இதனால் சிவகாசி பட்டாசு வியாபாரிகள் வெளிமாநிலங்களில் கம்பி மத்தாப்புக்கு ஆர்டர் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆலைகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி