தென் கைலாயம் என்ற புகழுக்குரிய சதுரகிரி மலை தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற பெற்ற சிவன் கோவில்களில் ஒன்று. நான்கு மலைகள் சூழ்ந்த பகுதியில், இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்துள்ள சிவனை தரிசிக்க தமிழ்நாட்டின் பல பகுதிகளில்இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். இம்மலையிலுள்ளகோவில் மதுரை மாவட்ட வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆனால் மலைக்கு வரும் பாதை விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. வத்திராயிருப்பு பாதை தவிர வேறுசில மலைப்பாதைகளும் இங்குள்ளன. ஆனால் வத்திரயிருப்பு பாதை மட்டுமே பாதுகாப்பானது என்று அதில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
வத்திராயிருப்பு தானிப்பாறை நுழைவு வாயிலில் பராமரிப்பு கட்டணம் ரூபாய் 10 செலுத்தி விட்டு மலையை நோக்கி நடக்க தொடங்கினால் சுமார் ஒரு கிலோமீட்டர் வரை நடப்பதற்கு ஏதுவாக சிமெண்ட் தளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் இருக்கும் கரடு முரடான மலைப்பாதை தான் உண்மையில் நம்மை சோதிக்கும்.
இப்பயணத்தின் போது கையில் குடிநீர், உணவுப்பொருள் வேண்டும் என்றால் எடுத்து வைத்து கொள்ளவும். குறிப்பாக மலையில் குரங்குகள் அதிகம் காணப்படும் அதனால் உணவுப்பொருள் கொண்டு வந்தால் கவனமாக கொண்டு வர வேண்டும்.
மாங்கனி ஓடை :
இந்த மலையேற்றில் உள்ள முதல் கடின பகுதி இங்கு தான் துவங்குகிறது. சாதாரண நாட்களில் இதை கடப்பது எளிது. ஆனால் மழைக்காலத்தில் இங்கு ஓடையில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். கடந்து செல்வது கடினம்.
மாங்கனி ஓடையை கடந்த பின்னரும் சில தூரம் சிமெண்ட் பாதை செல்லும். அடுத்ததாக நாம் அடைவது வழுக்குப்பாறை. பெயருக்கு ஏற்ப மழை நேரத்தில் வழுக்கும் தன்மை உடைய பாறை அது. அதன் மேல் ஏறி தான் மேலே செல்ல வேண்டி இருக்கும். பாறையின் கீழே ஓடையில் நீர் ஓடிக்கொண்டிருக்கும் கவனமாக கடக்க வேண்டும்.
சங்கிலிப்பாறை :
சிறிது நேர பயணத்திற்கு பின்னர் நாம் அடைவது சங்கிலிப்பாறை. இங்கேயும் ஓடையில் நீர் ஓடிக்கொண்டிருக்கும். கயிற்றை பிடித்து தான் ஓடையை கடக்க வேண்டும். நீரோட்டம் அதிகமாக இருக்கும் காலத்தில் சற்று கடினம் தான்.
அடுத்து கரடு முரடான மலைப்பாதை துவங்கும் உண்மையில் இங்கு தான் நம்முடைய மனவலிமை மற்றும் உடல் வலிமை சோதனைக்கு உள்ளாகும். இடை இடையே சிறு சிறு ஓடைகளும், பள்ளதாக்குகளையும் ரசித்தபடி ஏறினால் களைப்பு தெரியாது. ஓய்வு தேவையென்றால் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்து செல்லலாம். இந்த மலையில் சுந்தரமூர்த்தி, சுந்தர மகாலிங்கம், சந்தான மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம் என ஐந்து வகையான லிங்கங்கள் காணப்படுகின்றன.
இவையெல்லாம் சித்தர்களால் உருவாக்கப்பட்டவை. இதில் காட்டு லிங்கம் இருக்கும் வனப்பகுதிக்குள் செல்ல நமக்கு அனுமதி கிடையாது. மூலிகை காற்று வீசும் இந்த மலைக்கு ஒரு முறை சென்று வந்தாலே நிறைய பலன்களை அடையலாம் என்பது நம்பிக்கை.
கோவிலை அடையும் முன்பாக பலா மரத்தடியில் கருப்பசாமி கோவில் இருப்பதை காணலாம். இதற்கு முன்னர் வழியில் கண்ட வனதுர்க்கை இரட்டை கோரக்கர் குகை பகுதிகளை போல பக்தர்கள் இங்கேயும் வழிபட்டு செல்வர். அடுத்ததாக நாம் சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோவில்களை அடையலாம். இதுவரை தான் நமக்கு அனுமதிக்கப்பட்ட பகுதி.
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்குகின்றனர். அதை வாங்கி சாப்பிட்ட பின்னர் சிறிது ஓய்வெடுத்து மீண்டும் கீழே இறங்க தொடங்கலாம்.
இதற்கு மேல் உள்ள தவசிப்பாறை எனும் இடத்தில் சித்தர்கள் தவம் செய்த குகை உள்ளதாகவும் அங்கு செல்ல தற்போது அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.
குடிநீர் தொட்டிக்குள் கிடந்த நாயின் சடலம்..! - மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்!
இந்த மலை ஏற ஒருவருக்கு சராசரியாகமூன்று மணிநேரம் ஆகும். முழுமையான ஆன்மீக அனுபவம் மட்டும் அல்ல. ஒரு மலையேற்ற அனுபவம் வேண்டுபவர்களும் இங்கே ஒருமுறை சென்று வரலாம். மாதத்தில் அமாவாசை, பெளர்ணமி என எட்டு நாட்கள் மட்டுமே இங்கு வர அனுமதி. அந்த நாட்களிலிலும் மழை இருந்தால் அனுமதி மறுக்கப்படும்.
எனவே வர விரும்புவோர் இந்த நாட்களை மனதில் வைத்து வர வேண்டும். விருதுநகர் மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து இங்கு பேருந்து வசதியும் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar