Home /virudhunagar /

பராமரிப்பின்றி கிடக்கும் 13-ம் நூற்றாண்டு பழமையான பாலவநத்தம் சிவன் கோவில்- வரலாறு தெரியுமா?

பராமரிப்பின்றி கிடக்கும் 13-ம் நூற்றாண்டு பழமையான பாலவநத்தம் சிவன் கோவில்- வரலாறு தெரியுமா?

விருதுநகர் சிவன் கோவில்

விருதுநகர் சிவன் கோவில்

விருதுநகர் மாவட்டத்தில் 1,000ஆண்டு பழமையான பாலவநத்தம் சிவன் கோவில் பராமரிப்பின்றி கிடக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Aruppukkottai, India
    விருநகர் மாவட்டத்தில் உள்ள 1000 ஆண்டு பழமையான சிவன் கோயில் ஒன்று போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.

    விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ளது பாலவநத்தம் எனும் கிராமம். இங்கே அமைந்துள்ள கைலாச நாதர் கோயில் 1000ம் ஆண்டு பழமையானது. இந்தக் கோவில் தற்போது போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. பாலவநத்தம் கண்மாய் பேருந்து நிலையத்தில் இறங்கி இடப்பக்கமாக நடந்து சென்றால் சிறிது தொலைவில் இந்த பழமையான கைலாச நாதர் கோயிலை அடையலாம்.

    கோவில் மையம்


    கோவிலின் வெளிப்புறத்தில் தெப்பக்குளம் ஒன்று நீரின்றி பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. கல்யாண மண்டப வடிவில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலின் அமைப்பு நம்மை ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படுத்தும் என்பதில் ஐயமில்லை. கோவிலில் இறைவனாக கைலாச நாதரும், இறைவியாக அனந்த வள்ளி தாயாரும் காட்சி தருகிறார்கள்.

    கோவில் நுழைவுவாயில்


     

    இது போக பைரவர், முருகன், விநாயகர் ஆகியோர்க்கு சிறு சன்னதிகள் உள்ளன. கோயிலின் மண்டப தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளையும் கல்வெட்டுகளையும் காணலாம். கோவில் தூண்களிலும், கோவிலின் சுற்றுப்புற சுவர்களிலும் கல்வெட்டுகள் காணப்படுகிறது.

    சுண்ணாம்பு பூசப்பட்ட நிலையில் கல்வெட்டு


    ஆனால் இவை யாவும் மக்களின் அறியாமல் அவற்றின் மீது வெள்ளைப்பூச்சு செய்யப்பட்டு தெளிவில்லாமல் உள்ளது. கோவில் தூண்களில் உள்ள சிற்பங்களும் இதே போன்று வண்ணப்பூச்சு செய்யப்பட்டு இதே நிலையில் தான் உள்ளன.

    கோவில் வரலாறு:

    13ம் நூற்றாண்டில் பிற்கால பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் இவ்வூரில் கைலாச நாதர் மற்றும் அனந்த வள்ளி தாயாருக்கு இங்கே கற்றளி ஒன்றை கட்டியுள்ளார். கற்றளி என்றால் கற்கள் கொண்டு கட்டப்பட்ட கற்கோவில் என்று பொருள். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் இக்கோவில் இன்றும் அதன் பழமை மாறாமல் உள்ளது.

    கோவில் நந்தி


    குலசேகர பாண்டியன் காலத்திற்கு பின்னர் மாறன் சுந்தரவர்ம பாண்டியன் மற்றும் விக்கிரம பாண்டியன் ஆகியோரால் இக்கோவில் திருப்பணி செய்யப்பட்டது என அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கல்வெட்டு கூறுகிறது.

    கோவில் சிற்பம்


    கோயிலில் உள்ள பாண்டியர் கால கல்வெட்டில் ‘புங்க நாட்டு காஞ்சியில் உடையார் கைலாச நாதர் கோயில்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சுண்ணாம்பு பூசப்பட்ட நிலையில் கல்வெட்டு


    ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோவில் தற்போது இந்து அறநிலையத்துறை துறையின் மேற்ப்பார்வையில் ராமநாதபுரம் தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. எனினும் போதிய நிதி உதவி கிடைக்காமல் கோவிலை பராமரிப்பு செய்ய முடியா நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.

    இக்கோயிலின் காப்பாளர் கூறும்போது கோயில் கல்வெட்டுகள் மீது உள்ள சுண்ணாம்பு பூச்சுகளை அகற்றி புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த நிதி திரட்டி வருவதாகவும் விரைவில் இப்பணிகள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி