Home /virudhunagar /

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்ட இன்றைய செய்திகள்

  1.நூல் விலை உயர்வு-பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு

  சந்தையில் நாளுக்கு நாள் நூல் விலை உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் வரும் 25 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஏழு தினங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  சந்தையில் ஏறி வரும் நூல் விலை உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் வரும் 25 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஏழு தினங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும் அதேபோல் விசைத்தறி கூடங்கள், சைசிங் பேக்டரிகள் மற்றும் பேண்டேஜ் நிறுவன தொழிற்சாலைகள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவ துணி ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஆறுமுகப் பெருமாள் கூறியதாவது, சந்தையில் நாளைக்கு நாள் நூல் விலை உயர்வால் மருத்துவ பேண்டேஜ் துணி உற்பத்தி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை உயர்வை கண்டித்து ஒரு வார வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் இத்தொழிலை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

  2.தண்ணீர் லாரி மோதி 2 வயது சிறுவன் பலி

  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து குமாரவேல் (வயது32) இவரது மனைவி இந்திரா.இவர்களுக்கு 3 வயதில் ஜோதீஸ்வரி என்ற பெண் குழந்தையும், 2 வயதில் சோலை ராஜா என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இன்று மதியம் இரண்டு குழந்தைகளும் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி தண்ணீர் லாரி அங்கு விளையாடிக் கொண்டி ருந்த சோலை ராஜா மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவன் வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தான். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த சோலைராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
  வீட்டு வாசலில் தண்ணீர் லாரி மோதி ரத்த வெள்ளத்தில் மகன் இறந்து கிடப்பதை பார்த்துதாய் இந்திரா கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

  இதுகுறித்து தகவலறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்தி தண்ணீர் லாரியை ஓட்டி வந்த வீரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி (17 ) என்பவரை கைது செய்தனர்.

  மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து லைசென்ஸ் வாங்காத சிறுவனை வைத்து தண்ணீர் வாகனத்தை இயக்கிய வாகன உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் மேட்ட மலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  3.விருதுநகர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற 16 வயது சிறுமிி

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் படிப்பை பாதியில் நிறுத்திய அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள சோப்பு கம்பெனியில் வேலைக்குச் சென்றார்.

  அப்போது அந்த சிறுமிக்கும் அங்கு வேலை பார்த்த மிஷின் ஆபரேட்டர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரைச் சேர்ந்த அழகுராஜா என்பவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

  இதையடுத்து அழகுராஜா அந்த சிறுமியை தனது ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். இதில் அந்த சிறுமி கருவுற்றாள். இந்த நிலையில் பிரசவத்துக்காக அந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார். அங்கு டாக்டர்கள் விசாரித்தபோது கருவுற்ற சிறுமிக்கு 16 வயது என தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரணை செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

  போலீசார் சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்த அழகுராஜா மீது போக்சோ, குழந்தைகள் திருமண தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

  4.தந்தை மீது சரமாரி தாக்குதல் மகன்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு

  திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியைச் சேர்ந்தவர் கூடலிங்கம் (வயது 70). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகன் தர்மர் என்பவரிடம் 5 பவுன் நகையை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நகையை தருமாறு மகனிடம் கூடலிங்கம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கூடலிங்கம் நகை குறித்து மகனிடம் கேட்டுள்ளார்.

  இதில் ஆத்திரமடைந்த தர்மர், மற்றொரு மகன் காட்டு ராஜா ஆகியோர் தந்தை என்றும் பாராமல் கூடலிங்கத்தை கம்பு, கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதற்கு உடந்தையாக உறவினர்கள் நீலா, சின்ன முனியாண்டி ஆகியோர் இருந்துள்ளனர்.

  தாக்குதலில் காயமடைந்த கூடலிங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் தர்மர், நீலா, காட்டு ராஜா, சின்ன முனியாண்டி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  5.செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்

  அஞ்சல் துறையில் செயல்படுத்தப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
  சுகன்ய சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்) என்பது பிரதமர் மோடி யால் ஜனவரி 22-ந் தேதி 2015-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
  இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

  இந்த திட்டத்தின்படி, 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் கணக்கை தொடங்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம்.
  பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கை தொடங்கலாம்.

  குறைந்தபட்சமான தொகையாக ரூ. 250 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூ.250இந்த கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250-ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். மொத்தம் 15 ஆண்டுகள் மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

  தற்பொழுது 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.இந்த கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. கணக்கு ஆரம்பித்த தேதியிலிருந்து 21 வருடம் கழித்து கணக்கு முதிர்வடையும்.

  மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கணக்கிலுள்ள இருப்புத்தொகையிலிருந்து 50 சதவிகித பணத்தை அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக பெற்றுக்கொள்ளலாம்.

  பெண்ணின் திருமணத்திற்கு பிறகு கணக்கு முதிர்வடைவதற்கு முன்பே கணக்கை எந்தவித வட்டி இழப்புமின்றி முடித்து கொள்ளலாம்.இந்த கணக்கை முதிர்வடைவதற்கு முன், கணக்கை முடித்து முன் முதிர்வு தொகையினை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெற்றுக்கொள்ளலாம்.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று செல்வ மகள் திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கி பயன்பெறலாம்.

  6.வத்திராயிருப்பு பகுதியில் எலுமிச்சை பழம் விளைச்சல் அமோகம்- விவசாயிகள் மகிழ்ச்சி

  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, அர்ச்சுனாபுரம், கான்சாபுரம், அத்தி கோவில், வ.மீனாட்சிபுரம், தாணிப்பாறை, சுந்தரபாண்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  இந்த ஆண்டு இந்த பகுதியில் எலுமிச்சை பழம் விளைச்சல் நன்றாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். எலுமிச்சை காய் கிலோ ரூ.100-க்கும், எலுமிச்சைபழம் கிலோ ரூ.160-க்கும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
  வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்துள்ளோம். 2 ஆண்டுகளாக பெய்த தொடர் மழையால் இந்த பகுதியில் உள்ள கண்மாய்களிலும், கிணறுகளிலும் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது. தண்ணீர் நன்றாக இருப்பதால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்துள்ளது.
  தற்போது எலுமிச்சை பழ மொத்த வியாபாரிகளுக்கு எலுமிச்சை காய் ரூ.100-க்கும், பழம் கிலோ ரூ.160-க்கும் விற்பனை செய்கிறோம்.
  கடந்த ஆண்டு விளைச்சல் இருந்தும் எலுமிச்சை பழம் கிலோ ரூ.60 முதல் ரூ. 80 வரைக்கும் மட்டுமே வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதனால் சென்ற வருடம் பாதிப்பு அடைந்தோம். இந்த ஆண்டு எலுமிச்சை பழம் விளைச்சல் அமோகமாக உள்ளது. கோவில் திருவிழாக்கள் நடை பெறுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் எலுமிச்சை பழத்தின் விலையும் உயர்ந்துள்ளது. எலுமிச்சை பழத்தை நல்ல விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.
  கடைகளில் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்கின்றனர். ஒரு எலுமிச்சை பழம் ரூ.15 வரை சில்லரைக்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். விளைச்சல் அமோகமாக இருப்பதாலும், விலையும் உயர்ந்து இருப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  7. அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனை பறிமுதல் செய்ய நடவடிக்கை வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுமார் 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகராட்சி ஆகும். தொழில் நிமித்தமாக வந்து செல்லும் வெளிநபர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்தை தாண்டும்.
  நூற்பாலை, விசைத்தறி கூடங்கள், ஆயத்த ஆடை நிறுவனங்கள் என பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கனரக வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்லும் நகரமாக ராஜபாளையம் வளர்ச்சி அடைந்து வருகிறது.முக்கியத்துவம் வாய்ந்த ராஜபாளையத்திற்கு பைபாஸ் சாலை வசதி, பைபாஸ் சர்ஜரி நோயாளி போன்று இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
  மக்கள் மேலும் மேலும் அல்லல்படும் வகையில் கடந்த ஆட்சியில் சத்திரப்பட்டிரோடு மேம்பால பணிகள்,தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம்,பாதாள சாக்கடை திட்டம் என 3 திட்டப்பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டு சாலையை தோண்டுகிறார்கள்... தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
  சத்திரப்பட்டிரோடு தடைபட்ட நிலையில் தென்காசிசாலை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது அதிலும்தாமிரபரணி, பாதாள சாக்கடைக்கு என இரவு நேர ங்களில் மட்டும் குழிகள் தோண்டப்பட்டு அவசரகதியில் மூடி மறைக்கப்படுகின்றன்.
  ஒரு திரைப்படத்தில் வடிவேல் கூறும் திங்கவும்,கழுவவும் ஒரு கையை தான் பயன்படுத்த வேண்டியதுள்ளது என அங்கலாய்ப்பதை போல நகரத்தை விட்டு வெளியே செல்லவும்,உள்ளே வரவும் ஒரே ரோடான தென்காசிமெயின் ரோடு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.இரவில் தோண்டப்படும் குழிகளில் தூசி கிளம்பி ஊட்டி மேகத்தால் மூடப்பட்டது போல ராஜபாளையம் தூசியால் மூடப்பட்டு அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.
  தனியார் பள்ளிகள்,தனியார் நூற்பாலைகளுக்கென பஸ்,வேன்கள் உள்ளன.இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தும்கொத்தனார்,நூற்பாலை வேலைக்கு செல்பவர்கள் காலத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.இதில் கொடுமை என்னவென்றால் இந்த ஒரே ரோட்டில் வந்து செல்லும் வாகனங்கள் காதை செவிடாக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பானை (ஏர் ஹாரன்கள்) கதற விடுகிறார்கள்.
  தொடர்ச்சியாக ஹாரன் அடித்தால் விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை ராஜபாளையத்தில் கண்கூடாக பார்க்க முடிகிறது.காந்திசிலை ரவுண்டானா அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணி பெண்கள் ஹாரன் சத்தம் கேட்டு திடுக்கிடுகிறார்கள்.
  போக்குவரத்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கமுன்வர வேண்டும். ஊதுகிற அபாய சங்கை ஊதிவிட்டோம்.போக்கு வரத்து காவல்துறை அதிகாரிகள் காதில் விழுகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்.

  8.ஜல்லிக்கட்டுக்கு இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்

  ஜல்லிக்கட்டுக்கு காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரரர்கள் விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

  விருதுநகர் மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் அரசாணை பெற்று நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டுகளில் அச்சிடப்பட்ட டோக்கன் மூலம் காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
  தற்போது அரசின் நெறிமுறைகளுக்குட்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைனில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் , மாடுபிடி வீரர்களுக்கும் தனித்தனியாக உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களுடன் பதிவு செய்யும் முறை நடப்பாண்டுஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் காளைகளை தழுவக்கூடிய மாடுபிடி வீரரர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் வகையில் ஆன்லைன் முறையில் முன் பதிவு செய்ய வேண்டும்.
  28.5.2022 அன்று திருச்சுழி தாலுகா என்.பள்ளபட்டி கிராமத்தில் நடைபெற இருக்கும் ஜல்லிகட்டு நிகழ்விற்கு காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரரர்கள் தங்களது ஆவணங்கள் மற்றும் விவரங்களை விருதுநகர் மாவட்ட தேசிய தகவலியல் மைய இணைய தளத்தில்(virudhunagar.nic.in)24.5.2022மற்றும்25.5.2022 ஆகிய 2 நாட்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
  சரியான விவரங்களை விடுபாடின்றி பூர்த்தி செய்யப்பட்டிருப்பதோடு முறைப்படி ஆவணங்களை பதிவேற்றம் செய்திருப்பின் தங்களது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும்.
  அதனைத் தொடர்ந்து 26.5.2022 மற்றும் 27.5.2022 ஆகிய 2 நாட்கள் மாடு பிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் தங்களது ஆன்லைன்; அனுமதிச் சீட்டினை இ-சேவை மையங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  ஜல்லிகட்டு நிகழ்விற்கு இணையதள முன் பதிவு அங்கீகரிக்கப்பட்ட அனுமதி சீட்டு பெற்ற காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  9.ஆர்.எஸ்.எஸ். வாகன பேரணியை தடுத்து நிறுத்திய போலீசார்- 42 பேர் கைது

  இந்தியாவின் 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் வாகன பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி விருதுநகர் முதல் சாத்தூர் வரை இன்று வாகன பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  இன்று காலை 9 மணியளவில் காமராஜ் வித்யா சாலையில் இருந்து வாகன பேரணி தொடங்கியது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி இல்லை என்று தெரிவித்ததால் ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பா.ஜ.க.வினர் தேசிய கொடியுடன் நடை பயணம் சென்றனர்.
  அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக பேரணியை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சிவசாமி தொடங்கி வைத்தார். கோட்ட தலைவர் சிவலிங்கம், பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், சிறுபான்மை பிரிவு சாதிக் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  இந்த பேரணியில் பங்கேற்ற 42 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.

  10.ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கமகமக்கும் கறிவிருந்து-அலைமோதிய கூட்டம்

  விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, தமிழ்பாடி கிராமத்தில் மந்தையப்பர் கோயில் திருவிழாவையொட்டி 127 கிடாய் பலியிடப்பட்டு ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கறி விருந்து நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு கழிவுகளில் கலந்து கொண்டனர்.

  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருப்புக்கோட்டை சாலை பகுதியில் அமைந்துள்ளது தமிழ்பாடி கிராமம் இக்கிராமத்தில் உள்ள மந்தையப்பர் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி 127 கிடாய்கள் பலியிடப்பட்டு படையலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கறி விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
  இந்தக் கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர். இளம் மற்றும் திருமணமான பெண்கள் கறி விருந்துக்கு செல்வது கிடையாது. ஆனால் பெண் குழந்தைகள் மற்றும் வயதான பாட்டிமார்கள் கரி விருந்தில் பங்கேற்க தடையில்லை எனக் கூறப்படுகிறது.
  கறி விருந்து திருவிழாவையொட்டி உள்ளூர் வெளியூர் ஆண்கள் திரளாக கலந்துகொண்டு கறி விருந்தில் பங்கேற்றனர்.

  செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
  Published by:Karthick S
  First published:

  Tags: Virudhunagar

  அடுத்த செய்தி