Home /virudhunagar /

தாயில்பட்டி காட்டுப்பகுதியில் விளையும் பிரண்டை.. அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர்கள் கைது.. - விருதுநகர் மாவட்ட செய்திகள்

தாயில்பட்டி காட்டுப்பகுதியில் விளையும் பிரண்டை.. அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர்கள் கைது.. - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District: விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய செய்திகள் சில

    1. பக்தர்கள் உடலில் சேறு பூசி பத்ரகாளி அம்மனுக்கு வினோத நேர்த்திக்கடன்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இருஞ்சிறை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன்,ஸ்ரீ லட்சுமி அம்மன், வைகாசிப்பொங்கல் உற்சவ திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் உடலில் சேறு பூசி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இருஞ்சிறை கிராமத்தில் அருள்மிகு.ஸ்ரீ பத்திரகாளியம்மன்ஸ்ரீ லட்சுமி அம்மன், வைகாசிப்பொங்கல் உற்சவ திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பொங்கல் உற்சவ திருவிழாவானது கடந்த மே.17 ஆம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி ஒரு வார காலத்திற்கு பக்தர்கள் விரதமிருந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.மேலும் இந்த திருவிழாவில் பக்தர்கள் தங்களது உடல் முழுவதும் சேற்றினை பூசி சேத்தாண்டி வேடமிட்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.அதன் பின்னர் ஆண்கள் பெண்கள் என அனைவரும் உருண்டு கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து பெண்கள் தீச்சட்டி எடுத்து வந்து கோயில் ஆலயத்தை வலம் வந்தும்,மாவிளக்கு ஏற்றியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    அதன் பின்னர் பொங்கல் உற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மனுக்கு சக்தி கரகமும்,மற்றும் சில நிமிடங்கள் அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொல்லும் நிகழ்வும் நடைபெற்றது.இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கரகமும,கருப்பசாமியும் ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து அதன்பின்னர் ஆலயத்தையும் சுற்றிவந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுகள் நடைபெற்றன.கொரோனோ நோய்த்தொற்றின் காரணமாக நடைபெறாமல் இருந்த வைகாசிப்பொங்கள் திருவிழாவானது கலை நிகழ்ச்சிகளுடனும் மற்றும் மாபெரும் அன்னதான நிகழ்வுடன் கடந்த இரண்டு வருடங்களுக்குப்பிறகு நடைபெற்றதால் உள்ளூர்,வெளியூர், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த உற்சவ திருவிழாவில் பெரும் திரளாக கலந்துகொண்டு அம்மனை வணங்கி அருள்பெற்று சென்றனர்.

    2.சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் அனுமதி

    வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை ஒட்டி சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற வைகாசி மாத பிரதோஷம், அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் வருகிற வருகிற 27-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய மலை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வைகாசி பிரதோஷம் மற்றும் அமாவாசை தினத்தை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் மலையேற அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட 5 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புகள் இருந்தால் அன்றைய தினம் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்க ப்படமாட்டார்கள் என்றும் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல கூடாது இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளன.
    3.கருணாநிதி பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி

    3.  கருணாநிதி பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி வருகிற 3-ந் தேதி நடக்கிறது.

    தமிழ் வளர்ச்சித் துறையின் 2021- 22-ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கருணாநிதி பிறந்தநாளான வருகிற 3-ம் தேதி முற்பகலில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தின் வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    இதில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், கல்லூரிகளுக்கு, கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பப்படும். போட்டிக்கான தலைப்புகள், போட்டி நடைபெறும் நாளில் அறிவிக்கப்படும்.கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம்பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வீதத்திலும் வழங்கப்பட உள்ளன.
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.

    4.மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் 7 நாள் தொடர் வேலைநிறுத்தம்

    ராஜபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் ஒருவார வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளதால் நாள்தோறும் ரூ. 1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    இந்தியா முழுவதும் பஞ்சு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கேண்டி நூல் ரூ.40 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை இருந்த நிலை, தற்போது ரூ.1 லட்சத்து 10,000 முதல் ரூ.1 லட்சத்து 15,000 வரை கடுமையான விலை உயர்வு கண்டுள்ளது. ஏற்கனவே ஆர்டர் எடுத்து உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. தொழில் செய்ய இயலாத நிலைமை ஏற்பட்டு வருகிறது.
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மற்றும் ஏற்றுமதிக்கான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இதன்மூலம் நேரடியாக 10 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
    நூல் விலையேற்றம் குறித்து மருத்துவ உற்பத்தியாளர் சங்க கூட்டம் ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆறுமுகப் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மருத்துவத் துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நூல் விலை கடுமையாக உயர்வை கண்டித்து தொழில் செய்ய இயலாத நிலை உள்ளதால் இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை ஏற்றுமதிக்கான பேண்டேஜ் உற்பத்தி செய்யும் விசைத்தறி கூடங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், சைஸிங் தொழிற்கூடங்கள் வேலை நிறுத்தம் செய்து தங்களது எதிர்ப்பை காட்ட முடிவு செய்யப்பட்டது. எனவே உடனடியாக மத்திய அரசு தலையிட்டு பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி நெசவு தொழிலை பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ராஜபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் ஒருவார வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளதால் நாள்தோறும் ரூ. 1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    5.அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது

    விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்ததுடன், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    விருதுநகர் தாயில்பட்டி, தாயில்பட்டி பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்ததுடன், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகள் சோதனை சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி, வெற்றிலையூரணி, கோட்டையூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு, பட்டாசு திரி தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் வந்தன.
    அதன்பேரில் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் தலைமையில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், சையது இப்ராஹிம், ராமசாமி, சதீஷ்குமார், ஆகியோர் தலைமையில் வெற்றிலையூரணி அரசரடி காலனி, ஒத்தக்கடை, மண்குண்டாம்பட்டி, ஓ.பி.ஆர். நகர், கோட்டையூர், வடக்குத்தெரு, கலைஞர் காலனி, எஸ்.பி. எம். தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    தாயில்பட்டி வடக்குத்தெருவில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தங்கராஜ் (வயது 29), ஜெயபிரகாஷ் (50), கட்டணஞ்செவல் பொம்பையா (63) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து தலா 30 கிலோ சோல்சா வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல பட்டாசு, வெள்ளை திரி தயாரித்ததாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு பல இடங்களில் அனுமதியின்றி தயாரித்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். குண்டர் சட்டம் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- தாயில்பட்டி, வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல ஆண்டுகளாக வீடுகளில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பது, கருந்திரிகள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

    இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டதன் பேரில் வீடுகளில் பட்டாசு தயாரிக்கும் பணி 70 சதவீதம் குறைந்துள்ளது. இதன்மூலம் பட்டாசு விபத்துகளும் தவிர்க்கப்பட்டுள்ளன. அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    6. விருதுநகர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் திடீர் தீ

    விருதுநகர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து புகை கிளம்பியது. இதனால் குழந்தைகள் நல பிரிவில் சிகிச்சையில் இருந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் பதற்றமடைந்து வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.
    இதுகுறித்து தகவலறிந்த அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மின்ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் இணைப்பு பெட்டியை ஆய்வு செய்தனர். அப்போது வேறு ஏதும் பாதிப்பு இல்லை என தெரியவந்ததால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் சிகிச்சை பிரிவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மருத்துவக்கல்லூரி டீன் சங்குமணி கூறியதாவது:-நேற்று மாலை திடீரென மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்ட நிலையில் ஜெனரேட்டர் பயன்பாட்டிற்கு வந்தது.

    அப்போது திடீரென மின் இணைப்பு பெட்டியில் லேசான தீப்பொறி பறந்து புகை கிளம்பியது. இதனை கண்டு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் இருந்த தாய்மார்கள் பதற்றமடைந்து குழந்தைகளுடன் வெளியேறினர். ஆனால் உடனடியாக அரசு டாக்டர்கள் குழு மற்றும் மின் ஊழியர்கள் ஆய்வு செய்ததில் பாதிப்புஏதும் ஏற்படவில்லை என்று தெரிந்தவுடன் அவர்கள் மீண்டும் குழந்தைகளுடன் சிகிச்சை பிரிவிற்குள் வந்தனர்.இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

    7.மின்னல் தாக்கி பாலிடெக்னிக் மாணவர் பலி

    விருதுநகர் சிவஞானபுரத்தை சேர்ந்தவர் சங்கிலி கருப்பசாமி. பா.ஜ.க. பிரமுகரான இவரது மகன் சிவராமன் (வயது 17). விருதுநகர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை கண்மாய் கரைக்கு சென்றார். அப்போது மின்னல் தாக்கி அந்த இடத்திலேயே உடல் கருகி கிடந்தார். வெளியே சென்ற சிவராமனை காணவில்லை என குடும்பத்தினர் தேடிச்சென்றனர். அப்போது சிவராமன் கண்மாய் கரையில் கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சிவராமனை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிவராமனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    8.காட்டுப்பகுதியில் பிரண்டையை அறுவடை செய்து கிலோ ரூ.4-க்கு விற்கும் விவசாயிகள்

    காட்டுப்பகுதியில் வளரும் பிரண்டையை அறுவடை செய்து கிலோ ரூ.4-க்கு மருந்து தயாரிக்க விவசாயிகள் அனுப்பி வைக்கிறார்கள். விருதுநகர் தாயில்பட்டி, காட்டுப்பகுதியில் வளரும் பிரண்டையை அறுவடை செய்து கிலோ ரூ.4-க்கு மருந்து தயாரிக்க விவசாயிகள் அனுப்பி வைக்கிறார்கள். பிரண்டை அறுவடை காட்டுப்பகுதியில் முள்வேலிகளில் படர்ந்து வளரும் செடியினங்களில் பிரண்டையும் ஒன்று. மருத்துவ குணம் நிறைந்த தாவரமாக இது விளங்குகிறது. சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளில் பிரண்டையும் சேர்க்கப்படுகிறது.
    கிராமங்களில் கைவைத்தியங்களுக்கும் பிரண்டையை பயன்படுத்துவதை பார்த்து இருப்போம். தற்போது பல்வேறு மருந்துகள் தயாரிப்புக்கு, மருந்து நிறுவனங்கள் பிரண்டையை மூலப்பொருளாக பயன்படுத்துவதால் அதன் தேவை அதிகரித்து இருக்கிறது. எனவே வெளிமாநிலங்களில் இருந்து பிரண்டையை மொத்தமாக கொள்முதல் செய்ய ஆர்டர்கள் வருகின்றன. எனவே வேலி ஓரங்களில் வளரும் பிரண்டையை தேடி கிராமங்களில் விவசாயிகள் அலைந்துகொண்டிருக்கிறார்கள். பிரண்டை அறுவடையானது மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பரமக்குடி, பார்த்திபனூர், வெம்பக்கோட்டை, பேரையூர், எரிச்சநத்தம், பூசாரி நாயக்கன்பட்டி, தாயில்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

    காட்டுப்பகுதியில் தேடிச்சென்று பிரண்டை செடிகளை பறித்து தரம் பிரித்து நன்கு காய வைத்து மும்பை, குஜராத், புனே, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மருந்துகள் தயாரிக்க அனுப்பி வைத்து வருகிறார்கள். இதுகுறித்து மடத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி மனோகரன் கூறியதாவது:- காட்டுப்பகுதியில் தானாக வளர்ந்துள்ள பிரண்டை செடிகள் 30 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படுகிறது. இந்த செடிகளை அழியாமல் காக்கும் வகையில் செடிகளின் மேல் பகுதி மட்டுமே அறுவடை செய்யப்படுகிறது. தூர்ப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் தொடர்ந்து அறுவடை செய்து வருகிறோம். மழைக்காலத்தில் மட்டுமே அறுவடை செய்ய முடியாது. கிலோ ரூ.4-க்கு எடுத்துக்கொள்கிறார்கள். எங்கள் பகுதியில் இருந்து ஆண்டுக்கு 400 டன் பிரண்டை செடிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மருத்துவ குணம் உள்ளதால் இச்செடிகளுக்கு எப்போதும் தேவை இருக்கிறது. இதனை விவசாயிகள் மாற்றுத்தொழிலாக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


    செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி