Home /virudhunagar /

கசந்து போன காதல்கள் - இளம்பெண் தற்கொலை.. ஆக்கிரமிப்பை கண்டித்து கிராமத்தினர் சாலை மறியல்.. - விருதுநகர் மாவட்ட செய்திகள்

கசந்து போன காதல்கள் - இளம்பெண் தற்கொலை.. ஆக்கிரமிப்பை கண்டித்து கிராமத்தினர் சாலை மறியல்.. - விருதுநகர் மாவட்ட செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

Virudhunagar District: கசந்து போன காதல்கள் - இளம்பெண் தற்கொலை.. ஆக்கிரமிப்பை கண்டித்து கிராமத்தினர் சாலை மறியல்.. - விருதுநகர் மாவட்ட செய்திகள்


    • மாவட்ட அளவிலான முதலாம் ஆண்டு சிறப்பு செஸ் போட்டி

      விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செஸ் சூப்பர் கிங்ஸ் செஸ் அகாடமி நடத்திய மாவட்ட அளவிலான முதலாம் ஆண்டு சிறப்பு செஸ் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

      விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சி.எஸ்.ஐ போர்டிங் நடுநிலைப்பள்ளியில் செஸ் சூப்பர் கிங்ஸ் செஸ் அகாடமி நடத்திய 7,10,13 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் மாவட்ட அளவிலான முதலாம் ஆண்டு சிறப்பு செஸ் போட்டிகள் நடைபெற்றது.இதில் 7 மற்றும் 17வது பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த செஸ் போட்டிகளில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் , காரியாபட்டி உள்ளிட்ட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

      போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலைமணி, சிஎஸ்ஐ போர்டிங் பள்ளி தாளாளர் செல்லப்பாண்டி, சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் நெல்சன் துரைராஜ், ஆடிட்டர் கிருபா ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர் டுவிங்கிளின் ஞானபிரபா ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.போட்டி ஏற்பாடுகளை செஸ் சூப்பர் கிங்ஸ் அகாடமியை சேர்ந்த சாமுவேல் செய்திருந்தார். இந்த போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

      2.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்;ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

      விருதுநகர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ஸ்ரீ சுபலட்சுமி அறக்கட்டளை, பாரதி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய  இலவச கண் பரிசோதனை முகாம் அருப்புக்கோட்டை வேலாயுதபுரத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் கிருஷ்ணன்கோவில் சங்கர மருத்துவமனையில் இலவச மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

      இந்த சிறப்பு முகாமில் 12 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அல்லிராணி, மெட்டுகுண்டு சுவாமிகள், பாரதி இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த தன்னார்வலர்கள், சங்கரா கண் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

      3. கோயில் பொது இடம் தனிநபர் ஆக்கிரமிப்பு - ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

      விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் கோயில் அருகே உள்ள பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உச்சிமாகாளி அம்மன் திருக்கோயில் அருகே அரசு பொது இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இக்கோயிலில் இந்த ஆண்டு வைகாசி பொங்கல் விழாவையொட்டி கோயில் முன்பாக உள்ள பொது இடத்தில் கிராம மக்கள் நாடக மேடை அமைப்பதற்காக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

      அப்போது நிலத்தை ஆக்கிரமித்து உள்ள தனிநபர் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும் பொது இடத்தில் உள்ள இடத்தை மீட்க கோரியும் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் கிராம பொதுமக்கள் திருச்சுழி, கமுதி, நரிக்குடி சாலையில் விரகு மரங்களை சாலையில் போட்டு அமர்ந்து சுமார் 2 மணிநேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      இதனால் அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து முற்றிலுமாக தடை பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்து போலீசார் மூலம் சரி செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பணியாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.

      4. அம்மன் பட்டி காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா-சிலம்பம் அரங்கேற்றம்

      விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அம்மன் பட்டி காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி சிலம்பம் அரங்கேற்ற நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. மாணவ மாணவிகள் இளைஞர்கள் செல்வம் சுற்றி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

      விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டி கிராமத்தில் அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை யொட்டி தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் அரங்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

      கிராமத்தின் நடுவே உள்ள நாடக மேடைப் பகுதியில் சிலம்பம் பயின்ற சிறுவர் சிறுமியர்கள் இளைஞர்கள் சிலம்பம் சுற்றி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். சிலம்பம் அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறுவர்-சிறுமிகள் சிலம்பு சுற்றியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியை உள்ளுர் வெளியூர் மக்கள் திரளாக கண்டு ரசித்தனர்.

      5. சிவகாசியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

      விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்திரா நகரை சேர்ந்த பாபு (வயது 49) பெயிண்டர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர் பிரிந்து சென்றுவிட்டதால் பாபு 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் ஷர்மிளா‌ (20) இவர் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு திவான் பாட்சா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
      ஒரு மாதத்திலேயே காதல் கசந்துவிட்டதால் 2-வதாக அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.

      அவருடன் கருத்து வேறு பாடு ஏற்பட்டதால் அவரைப் பிரிந்து 8 மாதங்களுக்கு முன்பு தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் மேட்ட மலையைச் சேர்ந்த கார்த்திக் ராமையா என்பவருடன் சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.அவருடனும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஷர்மிளா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
      இதுபற்றிய புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      6. விருதுநகரில் அடுத்தடுத்து கல்லூரி மாணவிகள் தொடர் மாயம்-பெற்றோர்கள் பீதி

      விருதுநகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வெளியில் சென்ற மாணவி பின்னர் விடுதிக்குத் திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
      இதுபற்றி முருகன் வச்சகாரபட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

      விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த அச்சம் பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று அவர் மாயமாகி விட்டார்‌.அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி மணிகண்டன் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார் .அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

      7. நூல் விலை கிடுகிடு உயர்வு- 2-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

      விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர், முத்துசாமிபுரம், புனல்வேலி போன்ற பகுதிகளில் உள்ள ஏராளமான விசைத்தறி கூடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
      தற்போது நூல் விலை உயர்வு கடுமையான அளவில் ஏற்றம் கண்டு உள்ளதால் தொழில் செய்ய இயலாத நிலையில் விசைத்தறி கூடங்கள் நேற்று மூடப்பட்டன. கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஒரு கேண்டி நூல் விலை ரூ. 90 ஆயிரம் இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்வு கண்டுள்ளது.

      இதன் காரணமாக ஏற்கனவே 6 மாத காலத்திற்கு முன்பே ஆர்டர் எடுத்து தொழில் செய்து வரும் நிலையில், இந்த கூடுதலான விலையேற்றத்தை சமாளிக்க இயலாத நிலையில் 2 தினங்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர். 2வது நாளாக இன்றும் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு இருந்தன.

      உடனடியாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி நூல் பஞ்சு ஏற்றுமதியை தடை செய்து மேலும் சில விலக்குகள் கொடுத்தால் மட்டுமே தொடர்ந்து தொழில் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விசைத்தறி நெசவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

      8. நெல்லை- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க கோரிக்கை

      நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர ரெயிலாக இயக்கப்படும் சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
      நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வியாழக்கிழமைதோறும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண் 6029) இயக்கப்படுகிறது. 3 மாத காலத்திற்கு நவீனரக ஹெச்.எல்.பி. ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் இந்த ரெயில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக மேட்டுப்பாளையம் சென்றடைகிறது.

      நெல்லையில் இருந்து தென்காசி, பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் முதல் ரெயில் ஆகும். மேலும் ஊட்டி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் முதல் ரெயிலும் இதுதான்.மேலும் நெல்லையில் இருந்து செல்லும் போது வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பழனிக்கு சென்றடைவதால் காலை 5.30 மணி அளவில் கோவிலில் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு வசதியாக உள்ளது. கோவைக்கு காலை 6.30 மணிக்கு செல்லும் நிலையில் வர்த்தகர்களுக்கு தங்களது வர்த்தக பணியை மேற்கொள்ளவும் இந்த ரெயில் வசதியாக உள்ளது. கோடை கால சீசனையொட்டி ஊட்டி செல்வதற்கும் இந்த ரெயில் தென்மாவட்ட மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பது உறுதி.மேலும் மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமை இந்த சிறப்பு ரெயில் (எண் 6030) இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை நெல்லை வந்தடைகிறது.

      எனவே தென் மாவட்ட மக்களுக்கு பல்வேறு வகையில் வசதியாக உள்ள இந்த சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே தென்மாவட்ட எம்.பி.க்கள் இதுகுறித்து தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி இந்த சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
      மேலும் தற்போதைய நிலையில் பஸ் கட்டணத்தைவிட இந்த ரெயில் கட்டணம் குறைவாக இருப்பதால் இந்த ரெயிலில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இந்த ரெயிலை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
      மக்கள் சேவை தான் ரெயில்வே துறையின் முக்கிய நோக்கம் என்ற அடிப்படையில் ரெயில்வே நிர்வாகம் இந்த சிறப்பு ரெயிலை தொடர்ந்து தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

      9.விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் வழக்கில்4 பேருக்கு நீதிமன்ற காவல் நீீட்டிப்பு

      விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஜீனத் அகமது, ஹரிஹரன், மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோர்ட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பேரையும் அழைத்து வந்து ஆஜர்படுத்தினார்கள். அவர்களை மீண்டும் வருகிற 30-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் 4 பேரையும் மதுரை சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

      10. கோவில் திருவிழாவில் பெண்ணிடம் நகை திருட்டு

      விருதுநகர் மாவட்டம் சிவகாசி மருதுபாண்டியர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சுந்தரி (வயது 63). இவர் அதே பகுதியில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சுந்தரி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை யாரோ மர்ம ஆசாமிகள் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து நகை திருடு போனதை உணர்ந்த மூதாட்டி சுந்தரி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாயமான நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்

    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி