Home /virudhunagar /

விருதுநகர் மாவட்டத்தின் (14.05.22) இன்றைய முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தின் (14.05.22) இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

அரசுஅரசு பள்ளி மாணவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் குறித்து விளக்கம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்.

    1. கீழ்குடி- பெருநாழி சாலை மேம்பால பணிகள் மந்தம் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள வாகைகுளம், கள்ளக்காரி,கீழ்குடி, பெருநாழி இடையிலான சாலை மேம்பால பணிகள் கடந்த ஆறு மாத காலமாக மந்த கதியில் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் கிராம மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேம்பால பணிகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாகைகுளம் கள்ளக்காரி, கீழ்குடி பெருநாழி இடையே சாலைகள் மோசமாக இருந்த நிலையில் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து தற்போது தற்போது கடந்த சாலைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சாலை மேம்பால பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் வெளியூர் செல்வதற்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    மேம்பால பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் வாகனங்கள் கரடுமுரடான பாதையில் பயணிக்கும்போது சேதமடைந்த வருவதாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதேபோல கர்ப்பிணிப் பெண்கள் வயதான முதியவர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற சாலை வழியாக செல்வதால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய இக்கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது, கடந்த ஆறு மாத காலங்களுக்கு முன்பாக மேம்பால பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் அவசரத் தேவைகளுக்கு இச்சாலையை பயன்படுத்தாத சூழல் உருவாகியுள்ளது.

    அதேபோல் அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலை மேம்பால பணிகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    2. அரசுஅரசு பள்ளி மாணவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் குறித்து விளக்கம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி தனியார் கல்லூரியின் வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறை சார்பில் வடமலாபுரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்விரிவாக்கப்பணி நடந்தது.

    இதில் “108 ஆம்புலன்ஸ் செயல்முறை விளக்கம்” என்ற தலைப்பில் திருத்தங்கல் அரசு மருத்துவ மனையின் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ அலுவலர் ராஜசேகர், பைலட் குமார ராஜா ஆகியோர் பங்கேற்றனர். ரரஜசேகர் பேசுகையில், மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்பு குறித்த பிரச்சினைகளுக்கு 108 ஆம்புலன்சை அழைக்கலாம். உயர்ரக வசதிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ் விருதுநகரில் உள்ளது என்று கூறிய அவர், அதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளக்கினார்.

    குமார ராஜா பேசுகையில், விபத்துகள் மூலம் ஒவ்வொரு வகையான பாதிப்புகளை அடைந்தவர்களை எவ்வாறு கவனிக்க வேண்டும்? என்பதையும்,எப்படி முதலுதவி செய்ய வேண்டும்? என்பதையும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் செயல்முறை விளக்கம் அளித்தார். மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். வடமலாபுரம்அ ரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செங்கமலநாச்சியார் நனறி கூறினார்.

    இந்தநிகழ்வில் 66 கல்லூரி மாணவர்களும், 80 பள்ளி மாணவர்களும், 6 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல், கணினிப் பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர்கள் கார்த்தீஸ் பாண்டியன், மனோஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    3. செயல்பாடமால் உள்ள எக்ஸ்ரே பரிசோதனை நிலையம்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்று வட்டார கிராம பகுதிக ளுக்கு தலைமை மருத்துவமனையாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி,நெடுங்கு ளம், கொடிக்குளம்,சேது நாராயணபுரம், பட்டுப்பூ ச்சி, சுந்தரபாண்டியம், மகாராஜபுரம், தம்பிபட்டி,மேலக்கோபாலபுரம்உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளியாக வந்து சிகிச்சை பெற்று சொல்கின்றனர்.

    இந்த மருத்துவமனை 92 படுக்கைகள் கொண்டு உள்ளது. 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்தில் காயமடையும் நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவந்து இந்தமருத்துவமனையில் தான் முதலுதவி சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மேலும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டால் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாளர்கள் இல்லாததால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க முடியாத நிலை உள்ளது.அத்துடன் எக்ஸ்ரே கருவியும் தற்போதுள்ள நவீன கருவியாக இல்லை.எக்ஸ்ரே பிரிவிற்கு பணியா ளர்கள் இல்லாததால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் வெளியே உள்ள தனியார் எக்ஸ்ரே நிலையத்திற்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து எக்ஸ்ரே எடுக்கும் சூழ்நிலை உள்ளது.

    வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணியாளர்கள் 5 பேர் பணி செய்யக்கூடிய இடத்தில் ஒருவர், இருவர் மட்டுமே பணியில் உள்ளனர். தற்போது வரை தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யாமல் இருப்பதால் வெளி நபர்களை வைத்து மருத்துவமனையில் தூய்மை பணி செய்யப்பட்டு வரு கிறது.மேலும் இந்த அரசு மருத்துவமனைக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் இரவு காவலாளி இல்லாத தால் இரவு நேரங்களில் வெளி ஆட்கள் யார் வந்து செல்கிறார்கள் என்று கண்காணிக்க முடியாத நிலையும் உள்ளது.

    வத்திராயிருப்பு தாலுகாவாக அறிவிக்கப்ப ட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படாமல் இருப்பதால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் உடனடியாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களும்,நவீன எக்ஸ்-ரே கருவியும் அமைத்துக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    4. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2 பேர் சஸ்பெண்ட்

    விருதுநகர் மாவட்ட துணைப்பதிவாளர் (பால்வளம்), விருதுநகர் சரக கட்டுப்பாட்டில் உள்ள ஆர்.56 ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கணக்குகள் திடீர் ஆய்வு செய்யப்பட்டது.
    அதில் அதிக கையிருப்பு தொகை வைத்திருந்தது மற்றும் ரொக்க சிட்டாவின்படி ரூ.6 லட்சத்து 24 ஆயிரத்து 415.20 கையிருப்பு தொகை குறைவாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கையிருப்பு குறைவுக்கு காரணமான காசாளர் வேல்முருகன் மற்றும் கையிருப்பு குறைவை கண்டறிந்து தடுக்க தவறிய சங்க மேலாளர் (பொறுப்பு) தங்கமாரியப்பன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து விருதுநகர் துணை ப்பதிவாளர் (பால்வளம்) உத்தரவிட்டுள்ளார்.

    5. பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணைய அழைப்பு

    பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது ஒரு உறுப்பினர் ஆண்டுக்கு ரூ.330 பிரீமியம் செலுத்தி ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
    பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது ஒரு உறுப்பினர் ஆண்டுக்கு ரூ.330 பிரீமியம் செலுத்தி ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது.

    காப்பீட்டுக் காலம் ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் கவரேஜ் தானாகவே புதுப்பிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டு கவரேஜ் காலத்தின் மே 31 அல்லது அதற்கு முன் அவரவர் வழங்கிய விருப்பத்தின்படி சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு தவணையில் தானாகப் பற்று வைக்கப்படும். பிரீமியம் ஆண்டுக்கு ரூ.330 ஆகும்.
    இத்திட்டத்தில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். எந்தவொரு காரணத்திற்காகவும் காப்பீடு செய்தவர் மரணம் அடைந்தால் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும்.
    பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும், இது விபத்து மரணம் மற்றும் இயலாமைக்கான காப்பீட்டுத் திட்டமாகும். காப்பீட்டு காலம் ஜூன் 1 முதல் அடுத்த ஆண்டு மே 31 வரை ஒரு வருடத்திற்கு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு தானாகவே புதுப்பிக்கப்படும். ஆண்டுக்கு ரூ.12 பிரீமியம் தொகை ஆகும்.

    இத்திட்டத்தில் வயது - 18 முதல் 70 வயது வரை சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம். ஊனமுற்றோருக்கு ரூ.1 லட்சம் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும். இந்த இரண்டு திட்டத்திற்கான புதுப்பிப்பு காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தானாக வங்கிகளின் மூலம் புதுப்பிக்கப்படும்.

    எனவே இத்திட்டத்தில் உள்ள பயனாளிகள் இந்த இரண்டு மாதங்களிலும் தங்கள் வங்கி கணக்கில் போதுமான இருப்பு தொகையினை வைத்து தொடர்ந்து, இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் இணையாத பொதுமக்கள் உடனடியாக இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    6. திமுக நகர செயலாளராக மணிகண்டராஜா தேர்வு

    ராஜபாளையம் தி.மு.க. 15-வது கட்சி உட்தேர்தலில் ராஜபாளையம் வடக்கு நகர செயலாளராக எஸ்.ஏ. மணிகண்டராஜா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு அமைச்சரும், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் தேர்தல் ஆணையாளர் சீனிவாசன் முன்னிலையில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அப்போது கே.கே.எஸ்.எஸ்.ஆர். சுப்புராஜ், ராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    மேலும் நகர அவைத்த லைவராக பிச்சைக்கனி, துணைசெயலாளர்களாக (பொது) முகமது இக்‌ஷாஸ் இப்ராகிம், காளிராஜன், மகளிரணி துணை செயலாளராக (ஆதி) பொன்னுத்தாய், பொருளாளராக செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகளாக இமாம்ஷா, பொன்னுச்சாமி, அர்ச்சனா ஆகியோரும் வைரமுத்து,முத்துமணி, நாகூர்அலி,மதியழகன், முனியாண்டி, ராணிபாலாதேவி, ஜோசப், ராஜன், பார்த்திபன், பிரகாஷ், பழனிசாமி, கார்த்திக் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்க ளாகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    7. மாவட்ட சிறையில் கைதிகள் திடீர் மோதல்-1 காயம்

    விருதுநகர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    இதே சம்பவம் தொடர்பாக இவரது கூட்டாளிகள் இருளாண்டி, வசந்த பாண்டி, இருள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் சிலம்பரசன் வழக்கு தொடர்பாக ஜாமீன் பெற்று வெளியே வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது கூட்டாளிகள் 3 பேரும் தங்களுக்கும் ஜாமீன் விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு சிலம்பரசன் மறுத்ததாக தெரிகிறது.
    இதனால் ஆத்திரமடைந்த இருளாண்டி, வசந்த பாண்டி, இருள் ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று ஜெயிலுக்குள் சிலம்பரசனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் சிலம்பரசன் படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை சிறை காவலர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஜெயில் சூப்பிரண்டு தாமரைக்கனி விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி கைதிகள் இருளாண்டி, வசந்த பாண்டி, இருள் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்ட ஜெயில் கைதிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    8.கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் மாயம்-போலீஸ் தீவிர விசாரணை

    தெலுங்கானா மாநில த்தை சேர்ந்தவர் சாயா ரெட்டி. இவரது மகன் பரணிதர ரெட்டி இவர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவரது கடந்த சில வாரங்களாக செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.
    இதனால் பதட்டமடைந்த சாயா ரெட்டி கிருஷ்ணன் கோவிலில் உள்ள கல்லூரி விடுதிக்கு நேரில் வந்து விசாரித்தபோது பரணிதர ரெட்டி கடந்த 3-ம் தேதி விடுதியை காலி செய்து விட்டு சென்றதாக தெரி வித்தனர்.

    இந்நிலையில் சாயா ரெட்டி செல்போனுக்கு மகன் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் தான் நல்ல வேலையில் இருப்பதாகவும், தேட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் மகன் மாயம் குறித்து சாயா ரெட்டி கிருஷ்ணன்கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி பள்ளப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (25). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த 7 பவுன் நகையை வங்கியில் அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணத்துடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை முத்து கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்துடன் மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.
    விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தையை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று காதல னுடன் மதுரைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு அந்தப்பெண் சென்றார். ஆனால் அவர் காதலனுடன் செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் அருகே உள்ள மேல சின்னையா புரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி‌. இவரது மகள் பி.காம் முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அந்தப் பெண் திடீரென மாயமானார். இதுகுறித்து வச்சகாரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    9. அரசு பஸ் டிரைவர்கள்- கண்டக்டரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்-பரபரப்பு

    விருதுநகர் அருகே உள்ள பேய்க்குளம் சென்று விட்டு விருதுநகர் நோக்கி ஒரு டவுன் பஸ் இன்று காலை 7.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்சில் இடம் இல்லாமல் படிக்கட்டு வரை நின்று கொண்டிருந்தனர்.
    சில கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தனர். இந்த பஸ்சை ஜெயராமன் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கண்டக்டர் முத்துராஜா படிக்கட்டில் பயணம் செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று தெரிவித்து மாணவர்களை உள்ளே வரும்படி கண்டிப்புடன் கூறி உள்ளார்.
    ஆனால் பஸ்சில் இடம் இல்லாமல் எப்படி உள்ளே வர முடியும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அந்த பஸ் 8.30 மணி அளவில் , விருதுநகர் பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் சிலர் தகராறு செய்தனர்.

    இதையடுத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர், டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கியுள்ளனர். இதனைக் கண்ட மற்றொரு அரசு பஸ் டிரைவரான பெரிய கருப்பன் என்பவர் சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
    அப்போது கல்லூரி மாணவர்கள் அவரையும் தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து 2 டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் மாணவர்களை திருப்பி தாக்கியதாக கூறப்படுகிறது. காலை நேரம் என்பதால் பஸ் நிலையத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

    அவர்களின் முன்னிலையில் கல்லூரி மாணவர்கள், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் மோதிக்கொண்டால் விருதுநகர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழக டிரைவர் மற்றும் கண்டக்டரை கல்லூரி மாணவர்கள் தாக்கிய தகவல் மற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தெரிய வந்தது.
    இதையடுத்து விருதுநகர் பஸ் நிலையம் மற்றும் நகரப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை டிரைவர்கள், கண்டக்டர்கள் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை மாணவர்கள் தாக்கிய பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதன் காரணமாக விருதுநகரில் சுமார் ஒரு மணி நேரம் அரசு பஸ்கள்

    இயக்ககப்படவில்லை. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ சுலோசனா, தென்றல், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இருந்தபோதிலும் அவர்கள் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ்களில் செல்ல முடியாமல் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் விருதுநகர் பஸ் நிலையத்தில் வெகுநேரம் காத்து நின்றனர்.
    தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினர். அதன் பின்னரே பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

    மேலும் தாக்குதலில் ஈடுபட்ட 4 மாணவர்களையும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் 4 மாணவர்களும் உன்னிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களில் 2 மாணவர்கள் விருதுநகரில் உள்ள கல்லூரியிலும், 2 மாணவர்கள் சிவகாசியில் உள்ள கல்லூரியிலும் படித்து வருகின்றனர் என்பதும் தெரியவந்தது.

    மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்ததாக கூறி அரசு பஸ் டிரைவர்கள் ஜெயராமன், பெரியகருப்பன், கண்டக்டர் முத்துராஜா ஆகிய 3 பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    இந்த மோதல் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் கூறும்போது, எங்களை அவதூறாக பேசியதால் தாக்கினோம் என்று தெரிவித்துள்ளனர். இதன்பின்னர் டி.எஸ்.பி. அர்ச்சனா விருதுநகர் பஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Virudunagar

    அடுத்த செய்தி