Home /virudhunagar /

விருதுநகர் மாவட்ட இன்றைய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்.!

விருதுநகர் மாவட்ட இன்றைய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்.!

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District: விருதுநகர் மாவட்ட இன்றைய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்.!

    1. மயான மேடையில் அடையாளம் தெரியாத பெண் சடலம்-டிஎஸ்பி விசாரணை

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே பிள்ளையார்குளம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள மயானத்தின் தகன மேடையில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அ.முக்குளம் போலீசார் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த நிலையில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் பிள்ளையார்குளம் கிராமத்தின் மயானப்பகுதியை திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் நரிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் இராம்நாராயணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இறந்துபோன பெண் சடலத்தின் அருகே பூச்சி மருந்து பாட்டில்கள் கிடந்ததாலும் மேலும் மருந்தை கலக்கி பயன்படுத்திய சுவடுகள் தென்பட்டதாலும் பூச்சி மருந்தை குடித்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    2.யானைகள் அட்டகாசம்! கூட்டமாக வந்து தென்னை மா மரங்களை ஒடித்து நாசம்!

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தென்னந்தோப்புகளில் காட்டு யானை கூட்டங்கள் மா, தென்னை மரங்களை ஒடித்து நாசப்படுத்தி உள்ளன. விவசாயப் பகுதிக்குள் யானை கூட்டங்கள் புகாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நச்சாடைபேரி கருப்பசாமி கோவில் உள்ளது. அப்பகுதியில் ஏராளமான தென்னை, மா மரங்கள் உள்ளன. இப்பகுதிக்குள் யானைக் கூட்டங்கள் வராதவாறு ஏற்கனவே அகழிகள் தோண்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தாலும், தற்போது அகழிகள் பராமரிக்கப்படாத காரணத்தினால் யானை கூட்டங்கள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அப்பகுதியில் உள்ள அய்யனார் ராஜா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பை ஆறுமுகசாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து உள்ளார்.

    இப்பகுதியில் இதுவரை யானைக் கூட்டங்கள் வரவில்லை. தற்போது முதன்முறையாக நள்ளிரவில் யானை கூட்டங்கள் புகுந்து தென்னை மரங்களையும், மா மரங்களையும் பிடுங்கி சாய்த்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து குத்தகைதாரர் ஆறுமுகச்சாமி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சேதத்தின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு உரிய நிவாரணத் தொகை வழங்குமாறும், யானைக் கூட்டங்களை வேறு இடத்திற்கு விரட்டுமாறு வனத் துறையினருக்கும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    3. கந்துவட்டி புகாரில் பைனான்சியர் அதிரடி கைது போலீஸ் நடவடிக்கை

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் காளையார்குறிச்சி தெருவில் குடியிருப்பவர் பன்னீர்செல்வம். இவர் தீப்பெட்டி தொழில் நடத்தி வருகிறார்.
    தொழில் அபிவிருத்திக்காக 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த பைனான்சியர் ராமு என்ற ராமசாமியிடம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு வட்டி மாதம் ரூ. 30 ஆயிரம் கொடுத்து வந்துள்ளார்.
    சில வருடங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட தால் பன்னீர் செல்வத்தால் வட்டியை சரிவர கொடுக்க முடியவில்லை.

    இதனால் பைனான்சியர் ராமு என்ற ராமசாமி தனது அலுவலகத்திற்கு பன்னீ ர்செல்வத்தை வரவழைத்து உட்காரவைத்து வட்டி ஏன் கொடுக்கவில்லை? என கூறி அடித்ததாகவும், குடும்பத்தாரைப் பற்றி அவதூறாக பேசி வெற்று பேப்பரில் கையெழுத்து, புரோ நோட்டில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் ராமு என்ற ராமசாமி அலுவலகத்தில் பணிபுரியும் காளிராஜ் மற்றும் விஜயராகவன் ஆகியோர் தனது வீட்டிற்கு வந்து மிரட்டியதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் பன்னீர்செல்வம் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் பைனான்சியர் ராமசாமி, அவரது அலுவலகத்தில் வேலைபார்க்கும் காளிராஜ், விஜயராகவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பைனான்சியர் ராமசாமியை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

    4. பிளஸ் 1 மாணவிக்கு திருமணம்-பெரும் பரபரப்பு

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மாத்தூர். இந்த ஊரை சேர்ந்தவர் கார்த்திக். ஜவுளி வியாபாரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விருதுநகரில் பிளஸ்-1 படித்த உறவுக்கார சிறுமியை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் எரிச்சநத்தம் பகுதியில் குடியிருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பமானார். அவர் விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றதாக தெரிகிறது. 17 வயது பெண் குழந்தை பெற்றதால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    5. சினிமா பட பாணியில் கள்ள நோட்டுகும்பல் கைது-போலீஸ் அதிரடி

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை - சேதுநாராயணபுரம் விலக்கு பகுதியில் கேர ளாவை சேர்ந்த சஜித்கு மார்(வயது45), கூடலூரை சேர்ந்த கனகசுந்தரம் (55), திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியை சேர்ந்த மணி (35), கொடைக்கானல் பகுதியை சேர்ந்த செல்வம் (38) ஆகியோர் சினிமா படப்பிடிப்பின்போது பயன்படுத்தப்படும் ரூ.67.87 லட்சம் போலி ரூபாய் நோட்டுக்களை காரில் கொண்டு வந்தனர்.

    இவர்கள் கூமாப்பட்டி கொடிக்குளத்தை சேர்ந்த பூமிராஜ்(30), அவரது நண்பர்கள் பாலமுருகன்(30), குபேந்திரன்(28), வினோத்(35), ராஜா(35) உள்ளிட்டோரிடம் பணம் இரட்டிப்பு பரிமாற்றம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

    அப்போது கேரளாவை சேர்ந்த சஜித்குமார், கூமாபட்டி கொடிக்குளத்தை சேர்ந்த பூமிராஜ் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வத்திராயிருப்பு போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் போலி ரூபாய் நோட்டுக்களை, அசல் ரூபாய் நோட்டுகளுடன் கலந்து மக்களை ஏமாற்றி புழக்கத்தில்விட திட்ட மிட்டது தெரியவந்தது.அதையடுத்து சஜித்குமார், கனகசுந்தரம், பூமிராஜ், குபேந்திரன், பாலமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
    இதையடுத்து அவர் கைதான 5 பேரிடமும் தீவிர விசா ரணை நடத்தினார்.
    மேலும், அவர்களிடம் இருந்த ரூ.36 ஆயிரத்து 500 மற்றும் 67.87 லட்சம் போலி ரூபாய் நோட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தப்பி ஓடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தப்பியோடிய செல்வம், தாண்டிக்குடி மணி, கூமாபட்டி வினோத், ராமசாமியாபுரம் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    6. செல்போனால் வந்த வினை பிளஸ் 2 மாணவி கர்ப்பம் பெரும் அதிர்ச்சி சம்பவம்

    விருதுநகர் முத்தால் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பிளஸ் 2 படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் அவருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதனால் பெற்றோர் அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்தனர். அவரது தாய் வேலைக்கு சென்று விடுவதால் மகளை தனது பெற்றோர் வீட்டில் தங்க வைத்திருந்தார்.

    அப்போது மாணவியை, விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான ரமேஷ் (19) என்பவர் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். ரமேஷ் மாணவியின் ‌செல்போன் எண்ணை வாங்கி அவ்வப்போது பேசி வந்துள்ளார். அவர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று உல்லாசமாக இருந்து வந்ததாகவும், மேலும் இரண்டு முறை தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்று மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக அவரது தாய் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி மாணவியிடம், அவரது தாய் கேட்டபோது, உறவினர் ரமேஷ் திருமண ஆசை காட்டி தன்னிடம் நெருக்கமாக இருந்ததாக தெரிவித்தார்.
    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் இது பற்றி விருதுநகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் ரமேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ரமேஷ் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .

    மாணவியின் படிப்புக்காக வாங்கி கொடுத்த செல்போன், அவரது வாழ்க்கையை திசை மாற்றி விட்டது என்பதை அறிந்து அவரது பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    7. அகழ்வாய்வில் யானைத் தந்தத்தால் ஆன அணிகலன்கள் கண்டெடுப்பு

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் அருகில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளை யல்கள், சுடுமண்ணால், விலை உயர்ந்த சூதுபவளம் மண்பானைகள் சுடு மண்ணால் செய்யப்பட்ட மண் கிண்ணங்கள், மண் குடம், புகை பிடிக்கும் கருவி, சில்லு வட்டுகள், சங்கி னால் செய்யப்பட்ட விளை யாட்டு பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண் அகல் விளக்கு கண்டறியப் பட்டது.

    இந்நிலையில் நேற்று நடந்த அகழாய்வின்போது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் ஆகிய அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளது. யானை தந்ததால் செய்யப்பட்ட அணிகலன் 5சென்டி மீட்டர் நீளமும், 0.8 சென்டி மீட்டர் விட்டமும், 61 கிராம் எடை கொண்டதாக உள்ளது, அதே போல் சுடுமண் தொங்கட்டான் 2.2 சென்டி மீட்டர் நீளமும், 1.01 சுற்றளவும் 65 கிராம் எடையும் கொண்டதாக உள்ளது.

    தற்பொழுது கண்டறியப்பட்ட இரு அணிகலன்கள் மூலம் தொன்மையான மனிதர்கள் சுடுமண் பொருட்களை பல்வேறு வகையில் பயன்படுத்தி உள்ளதும் பெண்கள் அணி கலங்களை அழகிய வடிவில் பயன்படுத்தி உள்ளது வியப்பை ஏற்படுத்தி யுள்ளது.
    அகழாய்வுகளில் திறக்க ப்படாமல் மிகுந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய எட்டு மணி மணிகள் கிடைத்துள்ளன. அதனை ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் நாளை திறக்கப்படுவதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர், இணை இயக்குனர் பரத்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    8. சிவகாசியில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த வாகனம்-உயிர் சேதம் தவிப்பு

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 48). இவர் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி செயலாளராக உள்ளார். நேற்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நண்பர்கள் எட்வின் நோவா, மதுரைவீரன் ஆகியோருடன் சிவகாசியில் உள்ள கட்சி பிரமுகர் ஒருவரை சந்திக்க காரில் வந்துள்ளார். காரை மதுரைவீரன் ஓட்டி வந்தார். சிவகாசியில் உள்ள கட்சி பிரமுகரை சந்தித்துவிட்டு அரசு மருத்துவமனை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

    இரவு 8.45 மணிக்கு அரசு மருத்துவமனையை கடந்து சென்ற காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மதுரை வீரன் காரை நிறுத்திவிட்டு முன்பக்கம் சென்று பார்த்தபோது காரிலிருந்து தீப்பற்றி எரிந்தது. இதை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
    இந்த சம்பவத்தில் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்தனர். இதில் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    9.விருதுநகர் மார்க்கெட்டில் மளமளவென குறைந்த உளுந்து விலை

    விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து விலை குறைந்து காணப்பட்டது.
    விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.200 குறைந்து ரூ.8,300 முதல் ரூ.9,500 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,200 முதல் ரூ.11,200 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.8,100 முதல் ரூ.9,600 வரையிலும் விற்பனை ஆனது.

    பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.11,500 முதல் ரூ.11,900 வரையிலும், பாசிப்பயறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.8,500 வரையிலும் விற்பனையானது. துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.10,700 முதல் ரூ.11,600 வரையிலும் விற்பனையானது.மல்லி லைன் ரகம் 40 கிலோ ரூ.5,600 முதல் ரூ. 5,900 வரையிலும், மல்லி நாடுரகம் ரூ.5,400 முதல் ரூ.5,600 வரை விற்பனையானது.முண்டுவத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.19 ஆயிரம் வரையிலும், புது வத்தல் ரூ.17 ஆயிரம் முதல் ரூ.25 வரையும் விற்பனையானது.

    கடலை எண்ணெய் 15 லிட்டர் 50 விலை குறைந்து ரூ.2,800 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4,372 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.110 விலை குறைந்து ரூ. 2,530 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆக விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.300 குறைந்து ரூ. 4,900 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.60 விலை உயர்ந்து ரூ.3,820 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.4,200 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.

    பொரிகடலை விலை ரூ.3,750 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4 ஆயிரம் ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,110 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,020 ஆகவும், ரவை 25 கிலோ ரூ.1,180 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.910 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.8,100 ஆகவும் விற்பனை ஆனது. பட்டாணி பருப்பு ரூ.8,300 ஆகவும் விற்பனை ஆனது. மசூர் பருப்பு ரூ.9,300 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பி ரகம் 50 கிலோ ரூ. 17,500 ஆகவும், ஏ ரகம் ரூ.18 ஆயிரம் ஆகவும், சி ரகம் ரூ.15,500 ஆகவும், ரோபஸ்டா ஏ ரகம் ரூ.8 ஆயிரமாகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.11 ஆயிரமாகவும் விற்பனையானது.

    10. தொழிலதிபர் வீட்டில் பெரும் கொள்ளை முயற்சி-போலீசார் விசாரணை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திகணேஷ் (வயது 45). தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தார் வெளியூர் சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சக்தி கணேஷ் நேற்று முன்தினம் காந்திநகரில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கிவிட்டு மீண்டும் நேற்று வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டை சுற்றி மிளகாய் பொடி போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சக்திகணேஷ் உடனடியாக அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் உதவியுடன் அப்பகுதியில் தடயங்களை சேகரித்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் வீட்டில் உள்ள பொருட்களை சிதறடித்து சென்றுள்ளனர்.ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தடயங்களை மறைக்க மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி