இந்தியாவின் எந்த ஒரு மாநில அரசினுடைய சின்னத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழ்நாடு அரசின் சின்னத்திற்கு உள்ளது.வட்டவடிவ தமிழ்நாடு அரசினுடைய சின்னத்தில் இடம் பெற்றுள்ள கம்பீரமான கோபுரம் தான் அதன் சிறப்பு. அந்த சின்னத்தில் இடம்பெற்றுள்ள கோபுரம் தான் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் கோபுரம்.
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுடைய வடபத்ர சயனர் சன்னதி ராஜ கோபுரம் தான் தமிழ்நாடு அரசின் இலச்சினையில் இடம் பெற்றுள்ளது. இந்த கோபுரம் தமிழ்நாடு அரசின் முத்திரையில் இடம் பெற்றதில் பெரிய வரலாறு உள்ளது. இன்றைய தமிழ்நாடு அன்று மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது அப்போதைய முதல்வர் ஓமந்தூரார் மெட்ராஸ் மாகணத்திற்கென ஒரு தனி முத்திரையை உருவாக்க விரும்பினார். இதற்காக மதுரையை சேர்ந்த ஓவியரான கிருஷ்ணா ராவ் என்பவரை வைத்து தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த கோபுரத்தை மையமாக வைத்து சின்னத்தை தயார் செய்து அதை மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைத்தனர்.
அப்போது அவர்கள் தேர்வு செய்தது ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம். இதை அப்போதைய பிரதமர் நேரு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அப்படி இருக்கையில் ஒரு மாநிலத்தினுடைய சின்னமாக இந்து கோவிலுடைய கோபுரத்தை பயன்படுத்த அனுமதிக்க இயலாது என்று கூறி மறுத்து விட்டார். இதற்கு மாநில அரசு இது மத அடையாளம் அல்ல. எங்கள் மாநிலத்தின் சிறந்த கட்டிட கலைக்கான சிறந்த ஓர் சான்று என்று விளக்கம் தந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் மத அடையாளமாக கடவுளின் சிலைகள் இன்றி காட்சியளிக்கிறது. கடவுள் சிற்பம் இன்றி கோபுரம் நேர்த்தியாக காட்சியளிப்பது இன்றும் ஆச்சரியத்தை தருகிறது.
மாநில அரசின் விளக்கத்தை ஏற்ற மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கியது. அதன் பின்னர் இந்த கோபுரத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சின்னம் தமிழ்நாடு அரசின் சின்னமாக 1949ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசின் முத்திரையில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் என்ற ஒரு சர்ச்சையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு சிலர் மறுப்பும் தெரிவித்து வரும் நிலையில், இதில் குழப்பம் நிலவி வருகிறது. எது எப்படியோ முத்திரையில் உள்ளது எந்த கோபுரமாக இருந்தாலும் அது நம் கட்டிடகலை மற்றும் கலாச்சாரத்தின் சிறந்த சான்று என்பது மட்டும் உண்மை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar