‘கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது’ என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு உயிர் கொடுப்பதே பேனாவின் முனையாக உள்ள நிப் (Nib) தான். ஆம் பேனா முனை சரியாக இல்லை என்றால் எழுதும் எழுத்தும் சரியாக இருக்காது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பேனா நிப்கள் ஒரு காலத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நமது சாத்தூர் நகரத்தில் தான் அதிகளவில் தயாரிக்கப்பட்டன. சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் எப்படி இந்தியா முழுவதும் சப்ளையாகி வருகிறதோ, அது போல சாத்தூர் நகரில் தயாரிக்கப்படும் பேனா நிப்களும் இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்பட்டன.
200-க்கும் அதிகமான பேனா நிப் தொழிற்சாலைகள் சாத்தூரில் செயல்பட்டு வந்த நிலையில் இன்று சாத்தூரில் தான் நிப் தயாரிக்கபட்டதா ? என்று ஆச்சரியமாக கேட்கும் அளவிற்கு நிப் தொழிற்சாலைகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன.
பால் பாயிண்ட் பேனாக்கள் வருகை:
2,00 ஆக இருந்த நிப் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைந்து இன்று வெறும் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் உள்ளது. இந்த 200 தொழிற்சாலைகளை நம்பி 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். இதில் 60 ஆண்டுகளாக நிப் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சாத்தூரை சேர்ந்த தங்கம் என்பவரை சந்தித்த போது , பால் பாயிண்ட் பேனாக்களின் வருகையே நிப் தொழில் முடங்கியதற்கு காரணம் என்று தெரிவித்தார்.
பேனா நிப்கள் முற்றிலும் கையால் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று நிப் செய்வதற்கு ஏற்ற ஆட்களும் இல்லை. மிஷின் இறக்குமதி செய்து தயாரிக்கும் அளவிற்கு இங்கு யாருக்கும் வசதியும் இல்லை அதனாலே இன்று பல பேர் பேனா நிப் தயாரிப்பு தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்று விட்டதாக கூறினார். மேலும் வேறு வழியின்றி தான் இந்த தொழிலை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசின் மானியம் நிறுத்தம்:
முன்பு பேனா நிப் செய்வதற்கு தகடுகள் மானிய விலையில் அரசு தரப்பில் தரப்பட்டது. பின்பு மானியம் நிறுத்தப்பட்ட நிலையில், அரசாங்க மானியம் இல்லாமல் போனதும் நிப் தொழிற்சாலைகள் முடங்கியதற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், இனி பேனா நிப் தொழிலை காப்பாற்ற அரசாங்கம் எதாவது திட்டங்களை கொண்டு வந்தால் தான் சாத்தூர் நிப்பை காப்பாற்ற முடியும் என்கின்றனர் தொழிலாளர்கள். அரசு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Sattur, Tamil News, Virudhunagar