விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இருஞ்சிறை
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ லட்சுமி அம்மன், வைகாசி பொங்கல் உற்சவ திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் உடலில் சேறு பூசி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இருஞ்சிறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ லட்சுமி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பொங்கல் உற்சவ திருவிழாவானது கடந்த மே.17 ஆம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி ஒரு வார காலத்திற்கு பக்தர்கள் விரதமிருந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
மேலும் இந்த திருவிழாவில் பக்தர்கள் தங்களது உடல் முழுவதும் சேற்றினை பூசி சேத்தாண்டி வேடமிட்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.அதன் பின்னர் ஆண்கள், பெண்கள் என அனைவரும் உருண்டு கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து பெண்கள் தீச்சட்டி எடுத்து வந்து கோயில் ஆலயத்தை வலம் வந்தும், மாவிளக்கு ஏற்றியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அதன் பின்னர் பொங்கல் உற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மனுக்கு சக்தி கரகமும்,மற்றும் சில நிமிடங்கள் அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொல்லும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கரகமும், கருப்பசாமியும் ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து அதன்பின்னர் ஆலயத்தையும் சுற்றிவந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுகள் நடைபெற்றன.
கொரோனோ நோய்த்தொற்றின் காரணமாக நடைபெறாமல் இருந்த வைகாசி பொங்கல் திருவிழாவானது கலை நிகழ்ச்சிகளுடனும் , அன்னதான நிகழ்வுடன் நடைபெற்றதால் ஆயிரக்கணக்கானோர் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை வணங்கி அருள்பெற்று சென்றனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.