தினசரி நாளிதழ்களில் அவ்வப்போது பழங்கால சிலைகள், கல்வெட்டுகள் ஆங்காங்கே கிடைப்பதாய் நாம் படித்திருப்போம். ஆனால் அவையெல்லாம் கண்டுபிடிக்கபட்ட பின் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்று யோசித்தது உண்டா?
அவையெல்லாம் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் காலம் முதலான விவரங்கள் கண்டறியப்பட்டு, பின் மக்கள் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகின்றன.
நம் மாவட்டத்தில் இதுவரை கிடைத்த பழங்கால பொருட்கள் யாவும் விருதுநகர் ரயில் நிலையம் செல்லும் வழியில் மூன்றாவது வாடியான் கேட் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கின்றன. அருங்காட்சியகத்தில் பழங்கால வீட்டு உபயோகப் பொருட்கள், முதுமக்கள் தாழியில் கிடைத்த மனித எலும்புகள், பழங்கால இசைக்கருவிகள், முதுமக்கள் தாழிகள், சுடுமண் பொம்மைகள், விருதுநகரில் கிடைத்த பழங்கால நாணயங்கள் போன்ற காண்பதற்கு அரிய பொருட்களை காணலாம்.
மேலும் பாடம் செய்யப்பட்ட ராசாளி பருந்து, வெள்ளெலி மற்றும் சில பூச்சயினங்கள், புதைபடிமங்கள், அரிய வகை தாவரங்கள் பற்றிய குறிப்புகள், கடல் வாழ் உயிரினங்களின் மாதிரிகள் காணப்படுகின்றன.
இவை தவிர விருதுநகர் மாவட்ட முக்கிய சுற்றுலாத்தளங்களின் விளக்கப்படங்களும், இந்திய செயற்கைக்கோள்கள் பற்றிய தகவல்களும் காணப்படுகின்றன.
மாதாந்திர கண்காட்சி என தனிப்பெட்டியை உருவாக்கி அதில் மாதம்தோரும் காண்பதற்கு அரிய பொருட்களை வைத்து காட்சிப்படுத்தி வருகின்றனர். தற்போது அப்பெட்டியில் விருதுநகர் மாவட்டம் செண்பக தோப்பு பகுதியில் வசித்து வரும் பலியர் இன பழங்குடிகள் தயாரிக்கும் இண்டுகொடி என்ற பொருள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது சோப்பு தயாரிப்பில் ஏஜென்டாக பயன்படுத்தப்படுவதாய் கூறுகின்றனர்.
மொத்தம் இரண்டு தளங்களாக செயல்படும் அருங்காட்சியகத்தின் மேல் தளத்தில் பூலித்தேவன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கவுன், கல், வளரி போன்ற போர்க்கருவிகளும், ஓலைச்சுவடிகளும், பொம்மலாட்ட தோற்பாவைகளும் வைக்கப்பட்டுள்ளன.
வெளிப்புறத்தில் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற கருப்பசாமி, தூவரபாலகர், நந்தி சிற்பங்களும், சதி கற்களும் காணப்படுகின்றன.
இதுவரை மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற சிற்பங்கள், நாணயங்கள், முதுமக்கள் தாழிகள் போன்ற அரிய பொருட்கள் கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
பார்வையாளர் ஒருவருக்கு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பள்ளி சிறுவர்கள் என்றால் அனுமதி இலவசம். அதே சமயம் வெளிநாட்டவர்களுக்கு ரூபாய் 100, போட்டோ, வீடியோ என அனைத்திற்கும் தனி தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
வரலாறு மீது அதீத ஆர்வம் கொண்ட மாணவர்கள் இங்கு வருவதன் மூலம் பல அரிய பொருட்களை கண்டு புதிய சில விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். அருங்காட்சியகத்திற்கு சொற்ப அளவிலே பார்வையாளர்கள் வந்து செல்வதாய் கூறப்படுகிறது. இதன் பின்னராவது மக்கள் இங்கு சென்று நம் வரலாற்று பெருமைகளை அறிந்து கொண்டு அதை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது.
செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar