ஹோம் /விருதுநகர் /

கல்வி, வியாபாரத்தில் முன்னேற... வழிபட வேண்டிய திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்!

கல்வி, வியாபாரத்தில் முன்னேற... வழிபட வேண்டிய திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

Srivilliputhur Andal Temple | விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள, ‘சூடிக்கொடுத்த சுடர்கொடி’யாகிய ஆண்டாள் கோவிலில் வழிபட கல்வி, வியாபாரத்தில் முன்னேறம் ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவக் கோவிலாகும். பழமையான இந்த கோவிலில்தான் பெரியாழ்வார் மற்றும் ”சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று போற்றப்படும்” ஆண்டாள் ஆகியோர் அவதரித்தனர். இங்கு அருள் பாலிக்கிறார் ரங்கநாதர்.

திருப்பதியில் உள்ள பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையன்று, ஆண்டாள் சூடிய மாலையை எடுத்து சென்று பெருமாளுக்கு அணிவிக்கின்றனர். அதேபோல் ஆண்டாளின் திருக்கல்யாணத்திற்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து பட்டுப்புடவை அனுப்பப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் வடபத்ரசாயி பெருமாள் கோவில் உள்ளது. இவருக்குத்தான் ஆண்டாள் தன் மாலையை சூடி கொடுத்தாள் என்று சொல்லப்படுகிறது. இங்கு அமைந்துள்ள கோபுரம் 196 அடி உயரமும் 11 அடுக்குகளுடனும் அழகாக காட்சியளிக்கிறது.

இந்த கோவிலின் மற்றொரு பகுதியாக அமைந்திருக்கிறது ஆண்டாள் சந்நிதி. இங்கு உள்ள கல்வெட்டுகளில் ‘சூடிக்கொடுத்த நாச்சியார் கோவில்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த கோவிலில் உற்சவர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்படும் மாலையில் கிளி அமர்த்தப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

இந்தக் கிளியை உருவாக்குவதற்கென்றே ஒரு ஒரு பிரிவினர் வழி வழியாக இருந்து வருகின்றனர். அவர்கள் மரவள்ளிக்கிழங்கு இலைகள், மாதுளம் பூக்கள் போன்றவற்றை கொண்டு நாள்தோறும் ஆண்டாளுக்கு கிளியை செய்துவருகிறார்கள். மாலையை அணிந்து ஆண்டாள் அழகு பார்த்ததாக கூறப்படும் கண்ணாடி அறை கோவிலில் இன்றும் இருந்து வருகிறது.

வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் ஆண்டாள் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடல் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நம்பிக்கையின்படி, இறைவன் மீது ஆண்டாள் கொண்டிருந்த அன்பை, காதலை எடுத்துக்கூறும் ஒரு அற்புத கதையாகும். திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள்.ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில், மகாலட்சுமியே ஆண்டாளாக அவதரித்தாக போற்றுவர்.

பெரியாழ்வார் இந்த நந்தவனத்திற்கு வந்தபோது, ஆண்டாளை எடுத்து வளர்த்து வந்தார். அந்த நந்தவனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து (ரங்கனுக்கு) திருமாலுக்கு அணிவிப்பது பொரியாழ்வாரின் முக்கியப்பணியாகும். இதையெல்லாம் பார்த்தும் அறிந்தும் வளர்ந்த ஆண்டாள், தனது இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராக திகழ்ந்தார்.

Must Read : ஆளை மயக்கும் பேரழகு... வால்பாறை அக்காமலைக்கு செல்லும் முன் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

லீலை புரியும் கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பால், அந்த திருமாலையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் தனக்குள்ளே வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோவிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

அதன்படி, கோதையாகிய ஆண்டாள் சூடிய மாலைகளே இறைவனுக்கு சூடப்பட்டன. ஒருமுறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதை கண்ட அர்ச்சகர்கள் அதை நிராகரித்து விட்டு வேறுமாலை கொண்டு வரும்படி கூறினர். அப்போது, தனது தெய்வ சேவையில் தவறு வந்து விட்டதாக எண்ணி வருந்தினார் பெரியாழ்வார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில், அந்த மாலையை ஆண்டாள் அணிவதை பார்த்து, கோபம் கொண்டு, ஆண்டாளை கண்டித்தார்.

அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி, ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் ஆண்டாள் ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று போற்றப்படலானார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கல்வியறிவு, வியாபாரத்தில் முன்னேற்றம், திருமண வரம், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் செல்வம் நிலைபெற, விவசாயம் செழிக்க இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

தமிழக அரசின் முத்திரையில் இடம்பெற்றிருக்கும் கோபுரமானது, இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ராஜகோபுரத்தின் வடிவம் என்பது இந்த கோவிலுக்கு இருக்கும் கூடுதல் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Temple, Virudhunagar