விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் 3 ஏக்கர் வாழை மரங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக பிள்ளையார்குளத்தை சேர்ந்த விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தனக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகேயுள்ள பிள்ளையார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீரங்கம் என்பவரது மகன் முத்துக்குமார். இவர் பிள்ளையார்குளம் பகுதியில் விவசாயத்தை முழுநேர பணியாக செய்து வருகின்றார். சுமார் 3 ஏக்கர் பரப்பில் வாழை தோட்டம் பயிரிட்டுள்ள நிலையில் தற்போது காய்களுடன் குழை தள்ளி அறுவடை செய்யும் பருவத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பிள்ளையார்குளம் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையினால் முத்துக்குமாருக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்துள்ள வாழை மரங்கள் அனைத்தும் சூறைக்காற்றுக்கு இரையாகி அடியோடு சாய்ந்து சேதத்திற்கு ஆளாகியது.இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி முத்துக்குமார் கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் வாழை பயிர் செய்வதில் ஆரம்பித்து, களையெடுத்தது, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தது, உரமிட்டது என இதுவரை ரூ.5 லட்சம் வரையில் செலவு செய்துள்ளதாகவும், மேலும் இதற்காக கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றிருப்பதாகவும் கவலையுடன் தெரிவித்த அவர் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் நஷ்டத்தால் எங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படுள்ளதாக கண்ணீருடன் தெரிவித்தார்.
ஆகவே சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாழைத் தோட்டமானது அடியோடு சாய்ந்து பெரும் நஷ்டத்திற்குள்ளாகிய நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.