Home /virudhunagar /

170 ஆண்டுகளுக்கு முன்பு ஒடுக்கப்பட்ட மக்கள் வழிபட கட்டப்பட்ட முருகன் கோவில்.. விருதுநகரை அலங்கரிக்கும் தல வரலாறு

170 ஆண்டுகளுக்கு முன்பு ஒடுக்கப்பட்ட மக்கள் வழிபட கட்டப்பட்ட முருகன் கோவில்.. விருதுநகரை அலங்கரிக்கும் தல வரலாறு

விருதுநகர் முருகன் கோவில்

விருதுநகர் முருகன் கோவில்

தமிழ்க் கடவுள் முருகனுக்கென பிரத்யேகமாக கட்டப்பட்ட விருதுநகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இன்றும் விருதுநகர் நகர்ப்புறத்தில் புகழ் பெற்று விளங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    தமிழ்க் கடவுள் முருகனுக்கென பிரத்யேகமாக கட்டப்பட்ட விருதுநகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இன்றும் விருதுநகர் நகர்ப் புறத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. 1850ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோவிலின் வரலாற்றைத் தேடி பார்த்த போது இது ஒடுக்கப்பட்ட வகுப்பினர்கள் வந்து வழிபாடு செய்ய கட்டப்பட்ட கோவில் என்ற தகவல் தெரிய வந்தது.

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு சாதிய பாகுபாடுகள் நாட்டில் அதிகம் காண்ப்பட்டன. ஆலயங்களுக்குள் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. விருதுநகரிலும் இதே நிலை தான் காணப்பட்டது. இதனால் அனைத்து வகுப்பினரும் வந்து வழிபடும் வகையில் கோவில் ஒன்றை கட்ட விரும்பினார் கச்சைக்கட்டி திருவண்ணாமலை நாடார்.

    தேங்காய் வணிகம் செய்து வந்த இவர், தான் சார்ந்த சமூக மக்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் வந்து வழிபடும் வகையில், பஞ்சு வணிகம் செய்யப்பட்டு வந்த இடத்தை வாங்கி அதில் இக்கோவிலை 1850-ம் ஆண்டில் கட்டினார்.

    கோவில் அமைப்பு:

    கிழக்கே ஒரு வாயிலும் வடக்கே இரு வாயிலும் கொண்ட 170 ஆண்டுகள் பழமையான இக்கோவிலின் வடக்கு நுழைவு வாயிலில் கோவிலை கட்டிய திருவண்ணாமலை நாடார் மற்றும் அவரது துணைவியார் சிலைகளை காண முடிகிறது.

    விருதுநகர் முருகன் கோவில்


    கருவறையில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். பிரகாரத்தில் நடராஜர், பைரவர், சரஸ்வதி, ஐயப்பன், மீனாட்சி ஆகியோருக்கு சிறுசிறு சன்னதிகள் உள்ளன. உள்புறத்தில் பத்மாவதி தாயாருக்கும் பாலாஜிக்கும் தனியே கோவில் காணப்படுகிறது.

    விருதுநகர் முருகன் கோவில் உள்பகுதி


    தங்க ரதம்:

    கோவிலில் முருகன் பவனி உலா வருதற்கென நகரின் பல பகுதிகளில் வளையல், கம்மல் போன்ற அணிகலன்களும், நன்கொடையும் பெறப்பட்டு அதன் மூலம் தங்க ரதம் செய்து 2003ம் ஆண்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. அன்று முதல் விஷேச நாட்களில் முருகன் தங்க ரதத்தில் பவனி வருவது வழக்கமாகி உள்ளது.

    விஷேச நாட்கள்:

    மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று முருகன், வள்ளி, தெய்வானைக்கு குருபூஜை நடத்தப்பட்டு, 21 அபிஷேகங்களுடன் ஆராத்தி காட்டப்படுகிறது. இவை தவிர மற்ற சில சிறப்பு பூஜைகளும், ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் ரெங்கநாதன் லெட்சுமி திருக்கல்யாணமும் இக்கோவிலில் நடத்தப்படுகிறது.

    விருதுநகர் முருகன் கோவிலுக்கான கூகுள் மேப்



    சாதிய பாகுபாட்டின் காரணமாக ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்காக கட்டப்பட்ட கோவில் என்றாலும் தற்போது அனைத்து மக்களால் வணங்கப்படும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குகிறது இந்த பால சுப்ரமணிய சுவாமி கோயில்.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி