விழுப்புரம் அடுத்த சாலை அகரம் கிராமத்தில், குழாயுடன் இணைக்கப்பட்ட மண்பானைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் பொதுமக்கள் அதிகளவில் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் சூட்டை தணிக்க சில்லென்ற குளிர் பானங்களை தேடி குடிக்க படையெடுத்துள்ளனர். அதுபோல் இளநீர், நுங்கு, பதநீர், தர்பூசணி, கம்பங்கூழ், எலுமிச்சை ஜூஸ் போன்ற குளிர்பானங்களை குடிக்க ஆரம்பித்துள்ளனர்.
அதுபோன்று பாரம்பரிய முறையில் மண் பானை வைத்து குடிநீரைக் குடிக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தைவிட கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கு ஏற்ப நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனை சமாளிக்க அதிக அளவு நீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதுகுறித்து மண்பாண்ட விற்பனையாளர்கள் கூறுகையில், “செயற்கை முறையில் நிறமூட்டி, குளிர்சாதனங்களில் வைத்து, விற்பனை செய்யும் பானங்கள் உடம்பில் பல்வேறு கோளாறுகள் ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக மண்பானை குடிநீர் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும். நவீன வரவுக்கு ஏற்ப பானைகளில் எளிதாக குடிநீர் பிடிக்க குழாய் பொருத்தியே விற்பனை செய்யப்படுகின்றன. 6 லிட்டர், 12 லிட்டர் அளவுகளில் தேவைக்கேற்ப கிடைக்கிறது. இதில் ஊற்றப்படும் தண்ணீர் 6 மணி நேரத்தில் குடிப்பதற்கு ஏற்ற குளுகுளு தன்மையை அடைகிறது" என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!
மேலும், “முன்பைவிட மண்பாண்டங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. மார்ச் மாதம் முதல் மண் பானைகளின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. 5 லிட்டர் கொண்ட பானை முதல் 25 லிட்டர் அளவுகளில் மண் பானைகள் வரை தயார் செய்து விற்கப்படுகிறது. மேலும், பானையின் விலை 150 ரூபாயில் தொடங்கி 500 வரை விற்கப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
குழாய் பொருத்திய மண் பானைகள், தண்ணீர் ஜாடிகள், தண்ணீர் பாட்டில்கள் எனக் கோடைக் காலத்திற்கு தேவைப்படும் அனைத்து வகையான மண்பாண்டங்களின் விற்பனையும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது” என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram