Home /viluppuram /

திருவக்கரை சிற்பிகள் கைவண்ணத்தில் மிளிரும் சிலைகள்- சிறப்புகள் என்ன?

திருவக்கரை சிற்பிகள் கைவண்ணத்தில் மிளிரும் சிலைகள்- சிறப்புகள் என்ன?

விழுப்புரம்

விழுப்புரம் சிலை உருவாக்கம்

விழுப்புரம் அடுத்துள்ள திருவக்கரை என்றாலே கற்சிற்பங்களும் கோயில்கள் தான் சிறப்பு. திருவக்கரை பகுதி கல்லால் செய்யப்படும் சிலைகளுக்கு தனி மதிப்பும் சிறப்பும் உள்ளது.

திருவக்கரை என்றாலே கற்சிற்பங்களும் கோயில்கள் தான் சிறப்பு. திருவக்கரை பகுதி கல்லால் செய்யப்படும் சிலைகளுக்கு தனி மதிப்பும் சிறப்பும் உள்ளது.

விழுப்புரம் அடுத்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவக்கரை என்ற கிராமம். இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் தான் இருந்தது. அதன் பிறகு படிப்படியாக அனைவரும் சிற்பங்கள் செதுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது சிலைகள் வடிப்பது தான், பாரம்பரிய தொழிலாக கருதப்படுகிறது.

புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள வளவனூர், திருவக்கரை போன்ற பகுதிகளில் சிற்பக் கலைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் சிலை தயாரிப்புத் தொழில், ஒரு குடிசைத் தொழிலாகவே செய்யப்பட்டு வருகிறது. சிலைகள் வடிப்பதற்குரிய கல் திருவக்கரை பகுதியில் இருந்து கிடைப்பதால் இப்பகுதியில் சிற்பத் தொழில் நன்றாக நடைபெற்று வருகிறது.

சிலைகள்


மேலும் இந்த சிற்பம் தயாரிப்பு பற்றி இப்பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் கூறுகையில், என்னுடைய சொந்த ஊர் மகாபலிபுரம். எனக்கு வயது 46. நான் 25 வருடங்களாக இந்த சிற்பம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சிலை செதுக்கும் தொழிலை செய்து வருகிறார்கள்.

சிலைகள்


திருவக்கரை கல் என்றாலே சிறப்பு. ஆகையினால் அனைவரும் இங்கு தயாரிக்கப்படும் சிற்பங்களை தேடி வந்து வாங்கி செல்வார்கள். இங்கு தயாரிக்கப்படும் கல் சிற்பங்கள் தமிழ்நாடு முழுவதும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு அரை அடி முதல் 20 முதல் 21 அடி வரை சிலைகள் செய்து வருகிறோம்.

சிலை


அரையடி என்றால் கணபதி சிலை தான் செய்வோம். மேலும் இங்கு செய்யப்படும் சிலைகளில் அதிகளவில் விநாயகர் மற்றும் முருகன் விற்பனையாகும். அதன்பின் அங்காளம்மன், காளி, அய்யனார் போன்ற சிலைகள். கல்லால் செய்யப்படும் அனைத்து உருவ சிலைகளும் இங்கு விற்பனையாகும்.

உரல், அம்மி


மேலும் அம்மிக்கல், உரல் போன்றவையும் தயாரித்து விற்பனை செய்கிறோம். சிலைகளின் அளவு பொருத்து, விலை நிர்ணயம் செய்யப்படும். குறைந்தபட்சம் சிலை செய்வதில் 3 முதல் 4 லட்சம் வரை சம்பாதிக்கிறோம். ஆள் கூலி போக கையில் குடும்பத்தை நடத்துவதற்கான வருமானம் இருக்கும்.

இங்கு சிலை வாங்க வரும் நபர்கள் தங்களுக்கு தேவையான வடிவில், எங்களிடம் கேட்பார்கள் அதன்பிறகு அவர்கள் காட்டும் வடிவில், சிலை வடித்து தருவோம். இல்லையென்றால் எங்களிடம் உள்ள சிலைகளில், வாடிக்கையாளர்கள் பிடித்த சிலைகளை எடுத்துச் செல்வார்கள்.

கோயில் திருவிழாக்கள், புதிதாக கட்டப்படும் கோயில்கள் போன்றவை நடைபெறும் போது எங்களுக்கு தொழில் நல்ல முறையில் இருக்கும். மற்ற நாட்களில் சுமாராக தான் இருக்கும். எங்களிடம் இருப்பு இருக்கும் கல்லில் தேவையான வடிவங்களில் சிலைகளை செய்து வைத்து அதன் பிறகு விற்பனை செய்து வருவோம்.

அதுபோல எங்களுக்கு தெரிந்த உருவச்சிலைகள் மட்டும்தான் நாங்கள் கல்லில் செதுக்கி தருவோம். தெரியாத ஒரு சிலைகள் கூட நாங்க செய்ய மாட்டோம். முதலில் கல்லில் ஒரு அவுட்லைன் போடுவோம். அதன்பின் சிறுக சிறுக உருவத்தைக் கொண்டு வருவோம். அதன் பிறகுதான் முழுமையான நேர்த்தியாக ஒவ்வொரு பகுதியாக செதுக்க ஆரம்பிப்போம்.

சிலைகள் செதுக்கும் போது மனதுக்குப் பிடித்தவாறு மிக நிம்மதியுடன் சந்தோஷத்துடன், மிக நேர்த்தியாக வாடிக்கையாளரிடம் பிடிக்கும் அளவில் செய்து தருவோம். சிலை செதுக்கும் போது எந்த ஒரு தொந்தரவும் இல்லாத அளவில் நேர்த்தியாக செதுக்க ஆரம்பிப்போம்.

இங்கு தயாரிக்கப்படும் கல் சிலைகள் மிக நேர்த்தியாக இருப்பதால் பல பகுதியிலிருந்து வாடிக்கையாளர்கள் தேடி வந்து வாங்கிச் செல்வது எங்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என புன்னகையுடன் கூறினார் சந்திரசேகரன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி