விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 34- வது வார்டு பாண்டியன் நகர், எத்திராஜ் நகர், சபரி நகர், ஜே ஜே நகர் போன்ற பல நகர்களில் அடிப்படை வசதியின்றி காணப்படுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த நகர்களில் அடிப்படை வசதிகளை செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்டது 34-வது வார்டு பாண்டியன் நகர், எத்திராஜ்,நகர் சபரி நகர், ஜே ஜே நகர், பசுமை நகர், ஜெகநாதன் போலீஸ் நகர் போன்ற பல நகர்கள் உள்ளடக்கிய பெரிய வார்டு பகுதியாக திகழ்கிறது. இந்த நகர்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
பெரிய நகராக விளங்கும் இந்த நகரில் அடிப்படை வசதியான சாலை வசதி, தண்ணீர் வசதி, மின்சார வசதி போன்ற எந்த வசதிகளும் சரியான முறையில் செயல்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நகர் 2011- ல் நகராட்சிக்கு வந்தது. அதிலிருந்து இதுவரைக்கும் எந்த ஒரு வளர்ச்சியும் இந்த நகரில் ஏற்படவில்லை.

சேதமடைந்த நிலையில் சாலை
மேலும் இந்த நகரில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது, ‘இந்த நகரின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இந்த நகரில் இரண்டு முக்கிய பாலங்கள் உள்ளன. அதில் ஒரு பாலத்தின் இருபுறமும் கட்டிட சுவர்கள் இல்லாமல் இருப்பதால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு வண்டியில் வந்தவர்கள் அந்தப் பாலத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானார்கள்.

ஓரத் தடுப்புகளின்றி ஓடைப்பாலம்
மேலும், இந்த வார்டில் முதலில் குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்கள் மட்டுமே இருந்ததால் 30 ஆயிரம் லிட்டர் நீர்த் தேக்கத் தொட்டி அமைத்திருந்தனர். அதன் பின்பு பல குடும்பங்கள் குடி வந்து பெரிய நகராக மாறியது. 30,000 லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையால், இன்னும் கூடுதல் நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைக்க வேண்டும் என நகராட்சியிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல், இந்த நகர் தாழ்வான பகுதியில் உள்ளதால் மழை பெய்தால் நகர் முழுவதும் தண்ணீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கும். மழைநீர் வெளியேறுவதற்கு வாய்க்கால் வசதி ஏற்படுத்தவில்லை. மழை நீர் தேங்கி நகர் முழுவதும் சாக்கடையாக காட்சி அளிப்பதால், பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.
மேலும், தண்ணீர் பற்றாக்குறையால் அனைவரும் போர் போட ஆரம்பித்ததால் இங்கு வரும் குடிநீர் தண்ணீர் கூட நன்றாக இல்லை. மேலும் நீர் தேக்கத் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரும், சுண்ணாம்பு கலந்து தான் வருகிறது. எனவே இங்கு உள்ள நீர்த்தேக்க தொட்டிகளுக்கு எல்லீஸ்சத்திரம் ஆற்றின் இணைப்பைத் தரவேண்டும்.
இரவு நேரங்களில் அதிக அளவில் இப்பகுதியில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்து வருவதால், இந்த நகருக்கு சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுகிறோம்.
மேலும் இந்த வார்டுக்கு என தனிப்பட்ட முறையில் ஒரு நியாய விலைக்கடை அமைத்துத் தர பலமுறை நகராட்சியிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் இந்த நகருக்கு என ஒரு பொழுதுபோக்கு பூங்கா போன ஆட்சியில் அமைக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பூங்காவை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நகராட்சியிடம், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். அவர்களும் உடனே சரி செய்கிறோம் என கூறினார்கள்.
ஆனால் இதுவரை எந்த ஒரு வேலையும் இங்கு நடைபெறவில்லை, மேலும் இப்பகுதியில் அதிகளவில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு வருவதால், கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இன்னும் ட்ரான்ஸ்ஃபார்மர் வரவில்லை. இது போன்ற பல பிரச்சனைகளை இந்த நகர்களில் கூறிக்கொண்டே போகலாம் என கவலையுடன் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
எனவே இதுபோன்ற அடிப்படையான தேவைகளைக்கூட நகராட்சி நிர்வாகம் செய்து தருவதற்கு முன் வரவில்லை என அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.
எனவே இந்த அனைத்து கோரிக்கைகளையும் நகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.