Home /viluppuram /

ஓராண்டு கடந்தும் சரிசெய்யப்படாத எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு: வீணாகச் செல்லும் தண்ணீர்- வேதனையில் விவசாயிகள்

ஓராண்டு கடந்தும் சரிசெய்யப்படாத எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு: வீணாகச் செல்லும் தண்ணீர்- வேதனையில் விவசாயிகள்

உடைந்த

உடைந்த நிலையில் எல்லீஸ்சத்திரம் அணை

விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உடைந்து ஒரு வருடம் கடந்து இன்று சீர்செய்யப்படாமல் உள்ளதால் தண்ணீர் வீணாக செல்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சென்ற ஆண்டு உடைந்த ஒரு வருடமாகியும் சீரமைக்கப்படாததால்,தற்போது தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீர் வீணாக செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த அணைக்கட்டை சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் வலதுபுறம் உள்ள 4 மதகுகளும் சென்ற ஆண்டுபெய்த கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வந்த வெள்ளம் காரணமாக உடைந்தது. மேலும் தொடர்ந்து உடைப்புகள் ஏற்பட்டு அபாய கட்டத்தை எட்டியது.

கடந்த ஒரு வருட காலமாக அணையை சீரமைக்கும் பணியில் யாரும் ஈடுபடவில்லை. தற்காலிக தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை வந்தடைந்தது.

அந்த தண்ணீர் அனைத்தும் தடுப்பணைகள் இல்லாததால் வீணாக ஆற்றில் கலந்து கடலுக்கு செல்கின்றன. இப்பகுதியில் நீரை சேமித்து வைக்க முடியாத காரணத்தினால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

அணைக்கட்டு உடைந்தது குறித்து பேசிய விவசாயி, ‘விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே எல்லீஸ் அணைக்கட்டு உள்ளது.

100க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரமாகவும் 30க்கும் மேற்பட்ட ஏரிகளின் மூலமாக விவசாய பாசனவசதி பெறுகிறது. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் வலதுபுறமுள்ள ஷெட்டர் மூலம் எரளூர் வாய்க்கால் மூலம் பேரங்கியூர், அவியனூர், பைத்தாம்பாடி, அழகுபெருமாள் குப்பம் ஆகிய ஏரிகளுக்கும், ரெட்டி வாய்க்கால் மூலம் சாத்தனூர், மேலமங்கலம், இருவேல்பட்டு, காரப்பட்டு, ஓரையூர், சேமக்கோட்டை ஆகிய ஏரிகளுக்கும், இடது புறமுள்ள ஆழங்கால் வாய்க்கால் மூலம் சாலாமேடு, சாலமடை, கொளத்தூர், பானாம்பட்டு, ஆனாங்கூர், அகரம் சித்தேரி, ஓட்டேரி பாளையம், சிறுவந்தாடு, வளவனூர் ஏரிகளுக்கும்,கண்டம்பாக்கம் வாய்க்கால் மூலம் கண்டமானடி, கண்டம்பாக்கம், வழுதரெட்டி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றடைகிறது.

தென்பெண்ணையாறு உருவாகி கிருஷ்ணராஜ சாகர் அணை, சாத்தனூர் அணை, திருக்கோவிலூர் அணைகட்டு, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு வழியாக சென்று கடலூர் வங்க கடலில் கலக்கின்றது.
தண்ணீரின் அளவு அதிகரித்து எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு முழுவதுமாக உடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன் இந்த அணையை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த தண்ணீரை நம்பிதான் சுற்றிலும் விவசாயம் நடக்கிறது எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி