விழுப்புரத்தில் நாதஸ்வரம் வாசிப்பதில் மூன்று பெண்கள் அப்பகுதியிலே சாதித்து வருகின்றனர்.
பெண்கள் தற்போது பல துறையில் சாதித்து கால் தடம் பதித்து வருகிறார்கள். பெண்களின் யுகம் என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு துறைகளில் ஆண்களை காட்டிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். தொடர்வண்டி ஓட்டுவது தொடங்கி விண்வெளியில் தடம் பதிக்கும் வரை எல்லா இடத்திலும் பெண்களின் பங்கு இருக்கிறது. கடந்த காலங்களில் ஆண்களுக்கான வேலை என்று சமூகம் கட்டமைத்து வைத்த அனைத்தையும், பெண்களாலும் செய்ய முடியும் என்று நிரூபித்து, சம்பந்தப்பட்ட துறைகளில் வெற்றி கண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் ஒரு காலத்தில் ஆண்களால் மட்டுமே நாதஸ்வரத்தை வாசிக்க முடியும் என்றிருந்தநிலை மாறி, இன்று பல பெண்கள் நாதஸ்வரம், தவில் வாசிக்க ஆரம்பித்துவிட்டனர். விழுப்புரத்தில் பெண்கள் நாதஸ்வரம் கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விழுப்புரம் ராதாபுரம் பகுதி சுதா நகரை சேர்ந்த தனலட்சுமி (22),கோமதி (20) இருவரும் அக்கா, தங்கை ஆவார்கள். இருவரும் சிறு வயதில் முதலே நாதஸ்வரம் மீது தீராத பற்று கொண்டுள்ளனர். இவரது குடும்பத்தில் அண்ணன் தந்தை இருவருமே நாதஸ்வர கலைஞர்களாக இருந்து வந்ததால் இவர்களுக்கும் சிறிய வயது முதல் நாதஸ்வரத்தின் மீது காதலும் அதனை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்து வந்தது. பின்னர் இரு சகோதரிகளும் முறையாக நாதஸ்வரம் பயில தொடங்கிவிட்டனர்.
விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் நாதஸ்வரம் பிரிவில் 35 நபர்கள் இசை பயின்று வருகிறார்கள். இதில் மூன்று பெண்மணிகள் மட்டுமே உள்ளனர். அதில் கோமதி, தனலட்சுமி,பரணி மூவர் ஆவார்கள். இதில் தனலட்சுமி கோமதியும் சிறப்பாக நாதஸ்வரம் பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு வியாசர்பாடி கோதண்டராமன், மன்னார்குடி சங்கரநாராயணன் இருவரும் குருவாக இருக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நாதஸ்வரம் வாசிப்பதை பற்றி பேசிய கோமதி மற்றும் தனலட்சுமி, எங்கள் குடும்ப உறவினர்கள் நாதஸ்வர கலைஞர்கள் என்பதால் எங்களுக்கு சிறிய வயது முதலே நாதஸ்வரம் வாசிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. இதனை அடுத்து நாங்கள் இருவருமே சிறிய வயது முதல் நாதஸ்வரத்தை எங்கள் அண்ணனிடம் இருந்து கற்றுக் கொண்டு வந்தோம். அதன் பிறகு இதில் முழுமையாக எங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் முழுமூச்சுடன் கற்க எண்ணி விழுப்புரத்தில் உள்ள அரசு இசை பள்ளியில் நாதஸ்வர பிரிவில் சேர்ந்ததாக நெகிழ்ச்சியாக கூறினர்.
மேலும் நாதஸ்வரம் பிரிவில் 35 மாணவர்கள் பயில்கின்றனர் அதில் மொத்தம் மூன்று பெண்கள் மட்டும் தான் இருக்கிறோம். பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர் ஒரு சில துறைகளில் குறைந்த பெண்களே இருக்கின்றனர். அதில் நாதஸ்வர பிரிவும் ஒன்று ஆகும். இதனை மாற்றி அமைக்கும் விதத்தில் நாங்கள் இந்த கலையில் சாதித்து இதன் மூலம் மற்ற பெண்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்து அவர்களும் இந்த துறையில் வெற்றி காண எடுத்துக்காட்டாக திகழ்வோம்” என நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram