Home /viluppuram /

லிஃப்ட் கொடுத்த நபரிடம் மொபைல் திருட்டு.. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை - விழுப்புரம் மாவட்ட செய்திகள் (மே 19)

லிஃப்ட் கொடுத்த நபரிடம் மொபைல் திருட்டு.. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை - விழுப்புரம் மாவட்ட செய்திகள் (மே 19)

Villupuram district

Villupuram district

Villupuram District: விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பு 

  விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பு

  1. பேரறிவாளன் விடுதலை செய்ததை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன அறவழிப்போராட்டம் நடந்தது.
  விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்தில், அக்கட்சியினர் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  2.விழுப்புரம் மாவட்ட சிறையில் விசாரணை கைதி தற்கொலை

  விழுப்புரம் மாவட்டம், டி.புதுப்பாளையத்தை சேர்ந்த கணேசன் மகன் முருகன், 38; விவசாயி. இவர், கடந்த பிப்ரவரி 26ல், அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னராசு என்பவரை அடித்து கொலை செய்தார்.

  திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து, வேடம்பட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

  கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஜாமின் கிடைக்காத சோகத்தில் இருந்த முருகன், சிறையில் உள்ள பாத்ரூமிற்கு நேற்று மாலை 3:10 மணிக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் திரும்பாததால் சந்தேகமடைந்த சிறை வார்டன், பாத்ரூமிற்கு சென்று பார்த்த போது, லுங்கியால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  3.ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் பணி - கலெக்டர் மோகன் ஆய்வு

  விழுப்புரம் அடுத்த காணை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் பணியாளர்கள் பணி மேற்கொண்டு வருவதை கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

  அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டார். மேலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பணிகள் வழங்குவதை பி.டி.ஓ.,க்கள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

  4. மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம்

  கடலுார் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., ஜீவா மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வளத்துறை சுரங்கவியல் மற்றும் கண்காணிப்பு கோட்ட அலுவலகதில் முற்றுகை போராட்டம் நடந்தது.

  இதில், கடலுார் மாவட்டம், வானமாதேவி, வான்பாக்கம், அக்கடவல்லி, பு.ஆதனுார், கச்சிபெருமாள் நத்தம், சின்னபரூர், கார்குடல், கிளியனுார், இறையூர், கூடலையாத்துார் பகுதிகளில் துவங்கவுள்ள மணல் குவாரியை முழுமையாக மாட்டு வண்டிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். சேமிப்பு கிடங்கு அமைக்காமல் மாட்டு வண்டிக்கு நேரடியாக ஆற்றிலேயே மணல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

  5.இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்கு

  விழுப்புரம் அடுத்த நன்னாட்டை சேர்ந்தவர் பாளையம் மகள் பவதாரணி, 21; பிளஸ் 2 படித்துவிட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி வீட்டிலிருந்த பவதாரணியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

  இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

  6. பைக்கில் லிப்ட் கேட்ட வாலிபரிடம் மொபைல் போன் திருட்டு

  பைக்கில் லிப்ட் கேட்டு வந்து, வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போனை சிறுவன் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  விழுப்புரம் அடுத்த சின்னகள்ளிப்பட்டை சேர்ந்தவர் விஜயகுமார், 29; இவர் நேற்று முன்தினம் இரவு 1:00 மணியளவில், முண்டியம்பாக்கத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு வந்துள்ளார். சிந்தாமணி அருகே வந்தபோது, 15 வயது சிறுவன் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறியுள்ளார். பின், அய்யூர்அகரம் அருகே வந்தபோது, பேனா கத்தியை காட்டி விஜயகுமாரிடம் இருந்த மொபைல் போனை சிறுவன் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

  இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

  7. தமிழக காவல் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காவலன் ஆப் குறித்த விழிப்புணர்வு

  தமிழக காவல் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக காவல் துறையை உடனடியாக தொடர்பு கொள்ள காவலன் ஆப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

  செஞ்சி பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கினார். ஆட்சியர் மோகன், எஸ்.பி., ஸ்ரீநாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், காவலன் ஆப் மற்றும் சைபர் கிரைம் இலவச அழைப்பு எண் 1930 குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அரசு பஸ்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  8.மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பணி - அமைச்சர் மஸ்தான் ஆய்வு

  செஞ்சி பேரூராட்சிக்குட்டப்பட்ட காந்தி பஜாரில் நெடுஞ்சாலை துறை மூலம் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது.

  இந்த பணிகளை அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை தரமான முறையில் மேற்கொண்டு, விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, செஞ்சி தாலுகா சித்தாம்பூண்டியில் அரசு கலைக்கல்லுாரி கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு செய்தார்.

  9.விழுப்புரம் கடை வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

  விழுப்புரம் எம்.ஜி., ரோடு கடைவீதியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பல கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, 25 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், 6000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

  செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
  Published by:Arun
  First published:

  Tags: Villupuram

  அடுத்த செய்தி