விழுப்புரம் மாவட்டத்தின் செய்திகள் தொகுப்பு
விழுப்புரத்தில் குரூப் 2 தேர்விற்கான மாதிரி தேர்வு
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 4, சப் இன்ஸ்பெக்டர், டெட் ஆகிய தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குரூப் 2 தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதனால், இத்தேர்விற்கான மாதிரி தேர்வு நேற்றி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடந்தது. குரூப் 2 தேர்விற்கு விண்ணப்பித்த 265 நபர்கள், ஹால் டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் டான்செட் நுழைவு தேர்வு
தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வரும் 2022–23ம் கல்வியாண்டிற்கான முதுகலை எம்.சி.ஏ.,–எம்.பி.ஏ., மற்றும் எம்.இ.,–எம்.டெக்.,–எம்.ஆர்க்.,–எம்.பிளான்., கல்வியில் சேர்வதற்கான டான்செட் நுழைவு தேர்வுநேற்று மற்றும் இன்று 15 ஆகிய தேதிகளில் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லலூரியில் நடக்கிறது.
இத்தேர்விற்கு வரும் தேர்வர்கள் வசதிக்காக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு அரசு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், எம்.சி.ஏ.,விற்கு நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், எம்.பி.ஏ.,விற்கு மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையும் தேர்வு நடைபெற்றது.
இதேபோன்று, இன்று 15ம் தேதி எம்.இ., உள்ளிட்ட படிப்புகளுக்கு காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.
டாடா மேஜிக் வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வயது குழந்தைக்கு காயம்
விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டை சேர்ந்தவர் சார்லஸ்குமார் மனைவி த்ரித்தி, 36; இவர், தனது மகன் கில்பர்ட், 5; என்பவருடன், விழுப்புரத்தில் இருந்து டாடா மேஜிக் வாகனத்தில் கருங்காலிப்பட்டிற்கு சென்றார். காணை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, வாகனத்தில் ரேடியேட்டர் திடிரென வெடித்து சுடு தண்ணீர் சிதறியது.
இதில், கில்பர்ட் தொடையில் லேசான காயம் ஏற்பட்டது.
காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஊராட்சி தலைவியின் கணவனை தாக்கிய, நபர் மீது போலீசார் வழக்கு
விழுப்புரம் அடுத்த தெளிமேட்டை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஜனார்த்தனன், 41; இவரது மனைவி ஊராட்சி தலைவராக உள்ளார். ஜனார்த்தனனிடம் தெளியை சேர்ந்த வேலு என்பவர், தனது அம்மா மற்றும் பாட்டிக்கும் நுாறுநாள் வேலைக்கு அட்டை கேட்டு ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார்.
புகாரின்பேரில், வேலு மீது காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேல்மலையனுாரில் பெட்ரோல் பங்கில் 53.18 லட்சம் கையாடல் செய்த மேனேஜரை போலீசார் கைது
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் அருள்மொழிவர்மன், 34; இவர் கடந்த 12 ஆண்டுகளாக மேல்மலையனூரில் தனது தாய் மோகனம்பாள் பெயரில் பெட்ரோல் பங்கு நடத்தி வருகின்றார்.
இந்த பங்கில், செஞ்சி தாலுகா சண்டிச்சாட்சியை சேர்ந்த நாகராஜன், 42 என்பவர் பத்து ஆண்டுகளாக மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விற்ற பணத்தில் 53 லட்சத்து 18 ஆயிரத்து 664 ரூபாயை நாகராஜன் கையாடல் செய்தது தெரியவந்தது.
புகாரின்பேரில், நாகராஜன், அறிவழகன் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து நாகராஜனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில், மதுவிலக்கு பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம்
ஏ.டி.எஸ்.பி., நீதிராஜ் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி.,க்கள் ராஜபாண்டி, கனகராஜ் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அலுவலர் சிவா முன்னிலை வகித்தனர்.
இதில், 25 நான்கு சக்கர வாகனம், 3 மூன்று சக்கர வாகனம், 132 இரண்டு சக்கர வாகனம் என மொத்தம் 160 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது.
அதில், 24 நான்கு சக்கர வாகனங்கள் 12 லட்சத்து 32 ஆயிரத்திற்கும், 3 மூன்று சக்கர வாகனங்கள் 33,500 ரூபாய்க்கும், 96 இரண்டு சக்கர வாகனங்கள் 8 லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் என மொத்தம் 122 வாகனங்கள் 20 லட்சத்து 88 ஆயிரத்து 900 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
மாவட்ட கருவூலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
கலெக்டர் மோகன் முன்னிலை வகித்தார். கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் வெங்கடேஷ் தலைமை தாங்கி ஆய்வு மேற்கொண்டார்.
இதில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருவூலத்துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
விழுப்புரத்தில் பந்தயத்தில் ஈடுபட்ட ஆட்டோவை போலீசார் பறிமுதல்
விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், மடப்பட்டு வரை 18 கி.மீ., துாரத்திற்கு நேற்று முன்தினம் ஆட்டோ பந்தயம் நடந்தது. இதில், விழுப்புரத்தை சேர்ந்த ஒரு ஆட்டோ, சென்னை வியாசர்பாடி, சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 4 ஆட்டோக்கள் சீறிபாய்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து, எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், போக்குவரத்து போலீசார் ஒரு ஆட்டோவை நேற்று பறிமுதல் செய்தனர்.
ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்ட விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த பசுபதி என்பவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மீதமுள்ள ஆட்டோ டிரைவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கார் விற்பனை செய்வதாக ரூ.82,000 மோசடி செய்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை
திண்டிவனம் தாலுகா, மேல்பேரடிக்குப்பத்தை சேர்ந்தவர் நந்தகோபால், 31; இவர் முகநுால் மூலம் வந்த விளம்பரத்தில் கார் வாங்குவதற்காக அதிலிருந்த மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, பேசிய மர்மநபர் தான் இந்திய ராணுவத்தில் பணிபுரிவதாகவும், தனது காரை 1.50 லட்சத்திற்கு விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அந்த காரை ராணுவ பார்சல் சர்வீஸ் மூலம் கொரியரில் அனுப்பிவைப்பதாக கூறியுள்ளார்.
இதற்காக 82,000 ரூபாயை நந்தகோபால், மர்மநபருக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, காரை அனுப்பாமல் மர்மநபர் ஏமாற்றியுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.