முகப்பு /செய்தி /விழுப்புரம் / மதுவிலக்குக்கு ஆதரவாக ஈபிஎஸ் உடன் இணைந்து போராடத் தயார்... விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

மதுவிலக்குக்கு ஆதரவாக ஈபிஎஸ் உடன் இணைந்து போராடத் தயார்... விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

திருமாவளவன்

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை முழுமையாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். - திருமாவளவன்

  • Last Updated :
  • Viluppuram, India

தமிழகத்தில் மதுவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி இதுவரை என்ன போராட்டம் நடத்தி இருக்கிறார்; ஒருவேளை இனி அவர் போராட்டம் நடத்தினால் நாங்கள் அதில் பங்கேற்க தயாராக இருக்கிறோம் என  விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 70க்கும் மேற்படோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை விசிக தலைவர் திருமாவளவன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன்  நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி சிகிச்சை முறை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

அதைத்  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  திருமாவளவன் தெரிவித்ததாவது:-

கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மரக்காணம் அரசு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக, தகவல் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 20 பேர் வரை உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. டாஸ்மாக் என்ற அரசு அனுமதி பெற்று இயங்கிக் கொண்டிருக்கிற கடைகள் இருக்கும்போதே, கள்ளச்சாராயம் இந்த அளவுக்கு விற்கப்படுகிறது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதுவும், குடியிருப்புகளுக்கு அருகே சென்று விநியோகம் செய்யக்கூடிய நிலை இருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்து நடைபெற்றிருக்கிறது என்று அறிய முடிகிறது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் உடனே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10  லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூபாய் 50,000 இழப்பீடு வழங்க ஆணையிட்டு இருக்கிறார். இது ஒரு விதத்தில் ஆறுதல் அளித்தாலும் கூட, இப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை முழுமையாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தாத வரை கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முடியாது. அரசே மது வணிகத்தை அனுமதித்து நடத்துவது ஏற்புடையது அல்ல. கள்ளச் சாராய விற்பனை குறித்து அரசு கண்டும் காணாமல் இருப்பது, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, முதலமைச்சர் அவர்கள் மதுவிலக்கை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க : "பாஜக கூட்டணிக்கு விசிகவை அழைத்து காமெடி செய்கிறார் வானதி ஶ்ரீனிவாசன்..." - திருமாவளவன்

இதற்கு முதல் கட்ட நடவடிக்கையாக, சிறப்பு உளவுப்பிரிவு குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, கைது செய்து அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். மது அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் விதவைகளாகவும், அநாதைகளாகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். எந்தப் பகுதியில் அதிகளவில் மது விற்பனையாகிறதோ அந்தப் பகுதியை கண்டறிந்து,  விதவைகளாக வாழக்கூடியவர்களின் குடும்பத்தினரை அரசு தத்தெடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பாக நிதியை ஒதுக்கீடு செய்து, அவர்களை பராமரிக்க முன்வர வேண்டும்.

அத்துடன், குடிநோய் என்பது தீர்க்க முடியாத ஒன்றல்ல. அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே குடிப்பழக்கம் அதிகம் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்கள் அனைவருக்கும் கவுன்சிலிங் அளித்து உளவியல் ரீதியாக மருத்துவ ஆலோசனை வழங்க தேவையான மையங்களை ஏற்படுத்த வேண்டும். இது மிக மிக முக்கியமானது. இதனை உடனே நடைமுறைப்படுத்த முடியாது என்றால், படிப்படியாக அமுல்படுத்துவது ஆரோக்கியமானது. இந்த முதல்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறோம்.  தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்களிடம் அறிவுறுத்தி இருக்கிறோம். இனி ஒருவரும் இறக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கள்ளச்சாராய விற்பனைகளை தடுப்பதற்கான தீவிர முயற்சியை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். நாங்கள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி, மதுவை ஒழிப்பதற்காக எங்காவது போராட்டம் நடத்தி இருக்கிறாரா. இனி அவர் மதுவை ஒழிக்க போராட்டம் நடத்துவார் என்றால் அவரோடு சேர்ந்து நாங்கள் குரல் கொடுக்க தயாராக உள்ளோம் என்று அவர் பேசினார்.

top videos

    செய்தியாளர் : ஆ.குணாநிதி   (விழுப்புரம் ) 

    First published:

    Tags: EPS, Thirumavalavan, VCK