முகப்பு /செய்தி /விழுப்புரம் / கஞ்சா போதையில் சிறுவன் வெட்டிக்கொலை.. நண்பர்கள் வெறிச்செயல் - விழுப்புரத்தில் அரங்கேறிய கொடூரம்

கஞ்சா போதையில் சிறுவன் வெட்டிக்கொலை.. நண்பர்கள் வெறிச்செயல் - விழுப்புரத்தில் அரங்கேறிய கொடூரம்

கொலை செய்யப்பட்ட 17 வயது சிறுவன்

கொலை செய்யப்பட்ட 17 வயது சிறுவன்

Villupuram News | அதிகாலையில் வீட்டின் வெளியே படுத்திருந்த சிறுவனை அவரது நண்பர்களே கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

  • Last Updated :
  • Thiruvennainallur, India

திருவெண்ணைநல்லூர் அருகே பேச மறுத்ததால் சக நண்பர்களே 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனான ராமச்சந்திரன், இவருக்கு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்களான மோகன்ராஜ், கந்தசாமி உள்ளிட்ட 3 பேரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மோகன்ராஜ், கந்தசாமி ஆகியோர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி போதை பொருட்களை விற்பது, திருடுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களுடன் பழகுவதை கடந்த சில மாதங்களாக ராமச்சந்திரன் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

தங்களுடன் பழகுமாறு மோகன்ராஜ் மற்றும் கந்தசாமியும் பலமுறை வலியுறுத்தியும் அதனை ஏற்க மறுத்து அவர்களுடன் பேசுவதையும், பழகுவதையும் சிறுவன் ராமச்சந்திரன் நிறுத்தி கொண்டிருக்கிறான். இதனால் சிறுவன் ராமச்சந்திரன் மீது அவர்கள் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் ராமச்சந்திரன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மோகன்ராஜ் மற்றும் கந்தசாமி இருவரும் ஏன் தங்களிடம் பேசவில்லை என ராமச்சந்திரனிடம் கேட்டுள்ளனர். அதற்கு உங்களுடன் சேர்ந்தால் என்னையும் கஞ்சா குடிப்பவன் என்றும் திருடன் என கூறுவார்கள் என ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் நேற்று இரவு ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று அவரது பாட்டி பவுனம்மாளிடம் ராமச்சந்திரன் எங்கே என கேட்டுள்ளனர்.அப்போழுது அவர் வெளியில் படுத்திருப்பதாக கூறியுள்ளார். வீட்டின் வெளியே உள்ள மரத்தில் சேலையில் தூளி கட்டி அதில் படுத்து தூங்கி கொண்டிருந்த சிறுவன் ராமச்சந்திரனை அதிகாலை மோகன்ராஜ் மற்றும் கந்தசாமியும் இணைந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

காலை பொழுது விடிந்ததும் சிறுவன் ராமச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சிறுவன் ராமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து   சிறுவன் ராமச்சந்திரனை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிய மோகன்ராஜ், கந்தசாமி உள்ளிட்ட 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பேச, பழக மறுத்த காரணத்தால் சிறுவனை சக நண்பர்களே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர்: ஆ.குணாநிதி

    First published:

    Tags: Crime News, Villupuram