Home /viluppuram /

போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் வகையில் பூங்காவுக்கு படிக்க வரும் மாணவர்கள்.!

போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் வகையில் பூங்காவுக்கு படிக்க வரும் மாணவர்கள்.!

பூங்காவில்

பூங்காவில் படிக்கும் மாணவர்கள்

Villupuram District: விழுப்புரம்  பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள, நடைபாதை பூங்காவிற்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து கல்லூரி மாணவ மாணவியர்கள்,  அரசுத் தேர்வுக்கு படிப்பதற்காக இப்பூங்காவிற்கு வருகை புரிகின்றனர்.

    விழுப்புரத்தில் அமைந்துள்ள பல கல்லூரி மாணவ மாணவியர்கள், குடும்ப பெண்கள் இந்த பூங்காவிற்கு தினமும் காலையில் வருகை புரிந்து பூங்காவில் அமர்ந்து அரசாங்க போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் படித்து வருகின்றனர். திண்டிவனம், வளவனூர் செஞ்சி, மதகடிப்பட்டு போன்ற பல பகுதிகளிலிருந்து வருகின்றனர். பூங்காவிற்கு நாளொன்றுக்கு 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்களின் வருகை இருக்கிறது.

    மேலும் பூங்காவிற்கு ஏன் இந்த மாணவர்கள் வருகிறார்கள் என்ன காரணம் என தெரிந்து கொள்வதற்கு பூங்காவிற்கு சென்று, அங்கு வருகை புரிந்த மாணவர்களிடம் கேட்டதற்கு, சௌந்தர் என்ற மாணவர் கூறுகையில், நான் வளவனூர் என்ற பகுதியில் இருந்து வருகை புரிகிறேன். நான் 6 மாத காலமாக இங்கு வருகை புரிந்து அரசு தேர்வுக்காக படித்து வருகிறேன்.

    என்னைப்போல் பல கிராமப் பகுதியில் இருந்து மாணவர்கள் இங்கு வருகிறார்கள். நாங்கள் ஏன் இங்கு வந்து படிக்கிறோம் என்றால் வீட்டில் போதிய இட வசதியும் இல்லை, அதேபோல் வீட்டிலிருந்து படிப்பது சிலசமயம் தொந்தரவாக இருக்கிறது, பூங்காவிற்கு வந்தால் என்னை போல் பல நண்பர்கள் இருப்பதால் எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நாங்கள் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறோம், அதுமட்டுமல்லாமல் பக்கத்திலேயே மாவட்ட நூலகம் இருக்கிறது, புத்தகங்கள் வேண்டும் என்றால் நாங்கள் நூலகத்திற்கு சென்று எடுத்துக்கொள்வோம். இது போன்று பல சூழல்கள் எங்களுக்கு ஏதுவாக இருப்பதால் நாங்கள் இப்பூங்காவிற்கு வருகிறோம் என்றார்.

    முதலில் இந்தப் பூங்காவில் சீரமைக்கப்படாமல், இருந்தது பின்பு ஆட்சியர் உத்தரவின் பெயரில் இங்கு தண்ணீர் வசதி கழிவறை வசதி, தேவையற்ற முள் செடிகள் அகற்றப்பட்டு தற்போது நல்ல நிலைமையில் உள்ளது.

    இருந்தாலும் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், பூங்காவை சுற்றி அதிக அளவில் மரக்கன்றுகள் நட வேண்டும், மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு நடைமேடை அல்லது நிழற்குடை போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    ஏனென்றால் நாளுக்கு நாள் இப்பூங்காவிற்கு வருகை புரிந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி இந்த வசதிகளை ஏற்படுத்தி தருமாறு ஆட்சியர் அவர்களுக்கு ஒட்டுமொத்த மாணவர்களின் கோரிக்கையாக நான் வைக்கிறேன்.

    மேலும் நூலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், நாங்கள் நூலகம் சுற்றி அமர்ந்தும், இப்பூங்காவிலும் அமர்ந்து படிக்கிறோம் என மாணவர் சௌந்தர் கூறினார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி