தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் பலரும் இந்த விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்ற முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி, மாணவர்கள் தனிப்பட்ட முறையில் தங்களுடைய நேரத்தை செலவிட்டு வருகிறார் கள். அதில் ஒரு சிலர் தங்களுடைய விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.
விழுப்புரம் நகரம், வண்டி மேடு பகுதியில் உள்ள வடிவேல் நகரில் ஹாப்பி மால்கம் அகாடமி முதலாம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது. ஹாப்பி மால்கம் அகாடமியில் உள்ள இளைஞர்கள் முதலில் பல பகுதிகளில் இலவசமாக மல்லர் கம்பம் சிலம்பம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இதனையடுத்து முதன்முறையாக கோடை பயிற்சி முகாம் தொடங்கியுள்ளார்கள். இந்த ஹாப்பி மால்கம் அகாடமியின் உரிமையாளரான செல்வமொழியன் என்ற இளைஞர் இதனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். இவருக்கு உறுதுணையாக இவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கைகொடுத்து உள்ளனர்.
ஹாப்பி மால்கம் அகாடமியின் கோடைப் பயிற்சி முகாமில், மல்லர் கம்பம், சிலம்பம், கயிறு மல்லர் கம்பம், ஜிம்னாஸ்டிக், குத்துவரிசை, வேல்கம்பு, பிசிகல் பிட்னஸ், கட்ட கால் போன்ற கலைகள் கற்று தரப்படுகின்றன. இப்பயிற்சி முகாம் காலையில் 6:00 முதல் 8 : 30 வரையும், மாலையில் 4: 30 முதல் 6:30 வரையும் நடைபெறுகிறது. இந்த கோடைப் பயிற்சி முகாம் 28 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்குரிய கட்டணம் 1,500 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கோடைப் பயிற்சி முகாம் தொடங்கிய முதல் நாளில் 50க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் வருகை புரிந்தனர். விழுப்புரம் சுற்றியுள்ள முட்டத்தூர், சிந்தாமணி, முண்டியம்பாக்கம், அகரம், வட குச்சிபாளையம், பனையபுரம் பாப்பனப்பட்டு, பணம்பாக்கம், வண்டி மேடு போன்ற பல பகுதியிலிருந்து மாணவர்கள் வருகை புரிந்தனர்.
இப்பயிற்சியில் சேர்வது குறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் எனவும் அழிந்து வரும் பாரம்பரிய கலையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த கோடை பயிற்சி முகாமில் சேர்ந்து உள்ளோம் என மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.